தெம்பனிஸ் ஈஸ்ட் மற்றும் நீ சூன் ஈஸ்ட் சமூக மன்றங்களில் உள்ள அறைகளிலும் குழந்தைப் பராமரிப்பாளர்களின் வீடுகளிலும், 40க்கும் மேற்பட்ட குழந்தைகள் புதிய கணிசமான மானிய கட்டணத்தில் பராமரிப்புச் சேவையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இரண்டு மாதங்கள் முதல் 18 மாதங்கள் வரையிலான குழந்தைகளுக்கான சேவையில் சேர மேலும் 180 குடும்பங்கள் ஆர்வம் காட்டியுள்ளதாக ஆரம்பகால பாலர் பருவ மேம்பாட்டு அமைப்பு (இசிடிஏ) ஆகஸ்ட் 14ஆம் தேதி தெரிவித்தது.
சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சின்கீழ் இயங்கும் இசிடிஏ, பெற்றோருக்கு மிகவும் கட்டுப்படியாகக் கூடிய கட்டணத்தில் குழந்தைப் பராமரிப்புத் தெரிவுகளை வழங்குவதற்காக, டிசம்பர் 2024ல் மூன்று ஆண்டு குழந்தைப் பராமரிப்பு முன்னோடித் திட்டத்தைத் தொடங்கியது.
இசிடிஏ அமைப்பால் பின்புலச் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட கிட்டத்தட்ட 200 குழந்தைப் பராமரிப்பாளர்களில் ஏறத்தாழ 50 பேர் தற்போது முன்னோடித் திட்டத்தின்கீழ் குழந்தைகளைப் பராமரித்து வருகின்றனர்.
முன்னோடித் திட்டத்தின் மீதான ஆர்வம் அதிகரித்து வருவதால் இது ஊக்கமளிப்பதாக இசிடிஏ தெரிவித்துள்ளது.
“பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்குக் கிடைக்கும் அர்ப்பணிப்புமிக்க கவனிப்பு மற்றும் வசதி குறித்து நேர்மறையான கருத்துகளைப் பகிர்ந்து கொண்டுள்ளனர். குறிப்பாக, குழந்தைப் பராமரிப்பாளர்கள் பெற்றோரின் பராமரிப்பு விருப்பங்களைப் பூர்த்தி செய்ய முடியும் என்பதை நிரூபித்துள்ளார்கள்,” என்று அமைப்பு கூறியது.
பெற்றோர் மற்றும் குழந்தைப் பராமரிப்பாளர்களின் தேவையைப் பூர்த்தி செய்வதற்கும், சேவைகளை மேம்படுத்துவதற்கும், கூடுதல் சமூக வளாகங்களை ஆராய்வதற்கு நடத்துநர்களுடன் தொடர்ந்து தான் பணியாற்றவிருப்பதாக இசிடிஏ தெரிவித்துள்ளது.
இதில் வசதியான இடங்களில் குழந்தைப் பராமரிப்பாளர்களைக் கொண்ட குடும்பங்களைப் பொருத்துவதும் அடங்கும்.
தொடர்புடைய செய்திகள்
இதற்கிடையே, மனிதவள அமைச்சு, அதன் வீட்டுச் சேவைகள் திட்டத்தின்கீழ், அடிப்படை குழந்தைப் பராமரிப்பு சேவைகளுக்கான மனிதவளச் சலுகைகளை நிறுத்தப்போவதாகக் கூறியுள்ளது.
குழந்தைப் பராமரிப்புச் சேவைகளுக்கான தேவை குறைந்து வருவதால், மனிதவளச் சலுகைகளை வழங்க வேண்டிய அவசியமில்லை என்று சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சுடன் கலந்தாலோசித்து மதிப்பிட்டதாக மனிதவள அமைச்சு தெரிவித்துள்ளது. தற்போதைய வெளிநாட்டு ஊழியர் ஒதுக்கீட்டுச் சலுகைகள் 2026 மார்ச் முதல் நிறுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஜனவரி முதல் ஜூலை 2024 வரை ஏறக்குறைய 1,300 குடும்பங்கள், பராமரிப்புச் சேவைகளைப் பயன்படுத்தி வருகின்றன. அதில் 95 விழுக்காட்டுக்கும் அதிகமானோர் இல்ல சேவைகள் திட்டத்தின்கீழ் முதியோர் பராமரிப்புச் சேவைகளைப் பெற்றதாக மனிதவள அமைச்சு தெரிவித்துள்ளது.