சிங்கப்பூர் ஆயுதப்படை இவ்வாண்டு ‘எக்சர்சைஸ் வாலபி’ பயிற்சியில் பயன்படுத்தியுள்ள விரிவான மேம்பட்ட ஆளில்லா வானூர்தி அமைப்புகளின் தொகுப்பில் டி-155 வகை ஆளில்லா வானூர்தியை முதன்முறையாக அறிமுகப்படுத்தியுள்ளது.
இருபது கிலோகிராமுக்குமேல் எடைகொண்ட டி-155 ஆளில்லா வானூர்தி சிங்கப்பூர் ஆயுதப்படையின் முதல் மதர்ஷிப் ஆளில்லா வானூர்தி ஆகும். இது, ஆய்வுப் பணிகளின் நீடித்த திறனை நீட்டிக்கும் நோக்கில் வடிவமைக்கப்பட்டது.
இதன் பெரிய அமைப்பு, நீண்ட தூரம் பயணிப்பதற்குத் தேவையான மின்கல சக்தியை வழங்குகிறது. இதன்மூலம் இது குறிப்பிட்ட பகுதிக்குப் பறந்து சென்று, பணியை நிறைவேற்றச் சிறிய டி-40 உளவு, கண்காணிப்பு மற்றும் ஆய்வு ஆளில்லா வானூர்திகளை வெளியிடுகிறது.
எட்டு சிறிய டி-40 ஆளில்லா வானூர்திகளை ஏற்றிறக்கக்கூடியது டி-155 கருவி. இதன் ‘மதர்ஷிப்’ தொழில்நுட்பம், குறைந்த விலையிலான ஆளில்லா உணரும் தொழில்நுட்பம் எனப்படும் ‘லோக்கஸ்ட்’ ஆளில்லா வானூர்திகளில் பயன்படுத்தப்படும் ‘கட்டளை, கட்டுப்பாடு மற்றும் தகவல்தொடர்பு’ இயந்திரவியல் அமைப்புகளை ஒருங்கிணைத்துப் பயன்பாட்டை எளிதாக்குகிறது.
இந்த ஆண்டு ‘எக்சர்சைஸ் வாலபி’ பயிற்சியில், வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிக அதிகமான ஆளில்லா வானூர்திகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. 100க்கும் மேற்பட்ட ஆளில்லா வானூர்திகள் 560 மணி நேரத்திற்கும் அதிகமாகப் பறக்கும் நேரத்தை எட்டியுள்ளன.
மொத்தத்தில், ஏறத்தாழ 200 மேம்பட்ட அமைப்புகள் களச் சோதனைகளுக்கு உட்படுத்தப்படுகின்றன.
அதுமட்டுமல்லாமல், இவ்வாண்டு முதன்முறையாக ஆறு வி-15 வகை ஆளில்லா வானூர்திகள் ‘எக்சர்சைஸ் வாலபி’யில் பயன்படுத்தப்பட்டன.
இந்த விரைவான தொழில்நுட்ப முன்னேற்றம், ராணுவ வீரர்களுக்கும் பொறியாளர்களுக்கும் இடையேயான வலுவான செயல்பாடு-தொழில்நுட்பப் பங்காளித்துவத்தால் கட்டமைக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
தொழில்நுட்பத் துறையில் ஏற்படும் விரைவான மாற்றங்களுக்கு மத்தியில் நீண்ட, பாரம்பரிய சோதனை சுழற்சிகளுக்காக தாங்கள் காத்திருக்க முடியாது என்று தற்காப்பு அறிவியல், தொழில்நுட்ப அமைப்பின் (டிஎஸ்டிஏ) நில அமைப்புகள் இயக்குநர் சாய் ஜியா லிங் கூறினார்.
“எங்கள் பொறியாளர்கள் இப்போது வீரர்களுடன் இணைந்து, உண்மையான நேரடி செயல்பாட்டுச் சூழல்களில் புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கவும் சோதிக்கவும் மீண்டும் செம்மைப்படுத்தவும் ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்துகின்றனர்.
“இந்த ஒத்துழைப்பு, யோசனைகளையும் நம்பகமான போர்க்கள திறன்களையும் உருவாக்குகிறது. இதுவே சிங்கப்பூர் பாதுகாப்பு தொழில்நுட்பத்தை விரைவானதாகவும் பொருத்தமானதாகவும் இந்தத் துறையில் முன்னிலையிலும் வைத்திருக்கிறது,” என்று அவர் கூறினார்.
ராணுவ வீரர்களுடன் இவ்வாறான தரையிலிருந்து உருவாகும் பின்னூட்டச் சுழற்சி வெற்றிக்கு முக்கியமானது.
பொறியாளர்களுக்கும் மென்பொருள் உருவாக்குநர்களுக்கும் ஒரு செயல்பாட்டுக் கண்ணோட்டத்தையும் களத்தில் தங்களுக்கு என்ன வேண்டும், என்ன தேவைப்படும் என்பது பற்றிய பின்னூட்டத்தையும் தாங்கள் தருவதாக தேசிய சேவையில் ஈடுபட்டிருக்கும் மூன்றாம் சார்ஜண்ட் ஹர்ஷத் பிள்ளை, 19, குறிப்பிட்டார்.
இவ்வாண்டின் ‘எக்சர்சைஸ் வாலபி’ பயிற்சியில் ஆளில்லா வானூர்திகளை இயக்கும் இவர், அன்றாடம் புதிய கருவிகளையும் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தி அதை நேரடிக் களம் போன்ற சூழலில் சோதித்துப் பார்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்.
“நாம் வழங்கும் பின்னூட்டத்தைப் பயன்படுத்தி, அதற்கேற்ப அதை அமைப்பில் ஒருங்கிணைக்கும் திறனையும் நிபுணத்துவத்தையும் அவர்கள் கொண்டுள்ளனர்,” என்று ஹர்ஷத் குறிப்பிட்டார்.
அதிக மேம்பட்ட, ஏராளமான ஆளில்லா வானூர்திகளை நோக்கிய இந்த நகர்வு, வீரர்களின் பாதுகாப்பு, செயல்பாட்டுத் திறன்களை மையமாகக் கொண்டது.
ராணுவம், ஆளில்லா வானூர்தி தொழில்நுட்பத்தை நோக்கி முன்னேறுவது முதன்மையாக, வீரர்களின் உயிர்களைப் பாதுகாப்பதற்கே. ஏனெனில் அவர்களே ராணுவத்தின் மிக முக்கியமான சொத்துகள் என்றார் ராணுவச் செயல்பாட்டு தொழில்நுட்ப அலுவலக அதிகாரியான ராணுவ நிபுணர் 5 டியோ லியாங் காய்.
இவை ராணுவத்தின் செயல்திறனை பன்மடங்கு மேம்படுத்துகின்றன என்றும் இவர் சொன்னார்.
வெவ்வேறு ஆளில்லா வானூர்தி வகையை இயக்க, டிஎஸ்டிஏ உருவாக்கியுள்ள பொதுவான தொலைக் கட்டுப்பாட்டு முறையின் பயன்பாடு, செயல்பாடுகளை எளிமையாக்கியுள்ளது என்றும் திரு டியோ கூறினார்.
“தற்போது, அடிப்படை ராணுவப் பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் புதிய தேசிய சேவையாளர்களும் தங்கள் செயல்பாடுகளில் கூடுதல் ஆதரவுபெற அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என்பதைத் தெரிந்துகொள்கின்றனர். ராணுவம் இன்னும் பல ஆளில்லா வானூர்திகளை எதிர்காலத்தில் பயன்படுத்தும்,” என்று திரு டியோ குறிப்பிட்டார்.


