இயந்திர மனிதக் கருவிகளை அதிகமாக நாடும் கட்டுமான நிறுவனங்கள்

இயந்திர மனிதக் கருவிகளை அதிகமாக நாடும் கட்டுமான நிறுவனங்கள்

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

11 Jul 2026 - 8:20 pm

2 mins read

கட்டுமானத் துறையில் ஏறக்குறைய 20 ஆண்டுகள் அனுபவமுள்ள திரு வோன் லீக்குத் தொலைநோக்குப் பார்வையொன்று உண்டு. அடுத்த தலைமுறை உடல் உழைப்பாளர்கள் மனிதர்களாக இருக்க மாட்டார்கள், மாறாக வெயிலில் அயராது பணியாற்றும் இயந்திர மனிதக் கருவிகளாக இருப்பார்கள் என்பதே அது. எக்ஸ்பேண்ட் கட்டுமான நிறுவனத்தைத் தோற்றுவித்தவர் திரு லீ.

அவற்றை இயக்கும் மனிதர்கள், வெயில் அல்லது மழையிலிருந்து பாதுகாக்கப்பட்ட ஓர் அலுவலகத்தில் அமர்ந்துகொண்டு, தொலைவிலிருந்தே கட்டுப்படுத்துவார்கள் என்று அவர் கூறினார்.

கட்டுமானத் துறையில் பெருகிவரும் இயந்திர மனிதக் கருவிகள், திரு லீயின் கனவை நனவாக்கும் நிலைக்கு அத்துறையைக் கொண்டுவந்துள்ளன.

வெளிநாட்டு ஊழியர்களைச் சார்ந்திருக்கும் போக்கை அவை தளர்த்தக்கூடும். அவர்களை வேலைக்கு எடுப்பதிலும், அவர்களைத் தக்கவைத்துக் கொள்வதிலும் சிங்கப்பூர் சிரமங்களை எதிர்நோக்குகிறது. அவற்றைக் குறைக்கவும் இயந்திர மனிதக் கருவிகள் கைகொடுக்கக்கூடும்.

2022ஆம் ஆண்டு இயந்திர மனிதக் கருவி எதுவும் கட்டுமானத் தளங்களில் இல்லை. ஆனால் இன்றைய நிலையில் கிட்டத்தட்ட 60 கட்டுமானத் திட்டங்களில் 25க்கும் மேற்பட்ட இயந்திர மனிதக் கருவிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இருப்பினும் இங்குள்ள பெரிய கட்டுமானத் திட்டங்களில் இவை ஏறக்குறைய ஐந்து விழுக்காடு மட்டுமே.

இயந்திர மனிதக் கருவிகள், என்றாவது ஒரு நாள் மனிதவளத் தேவைகளைக் குறைக்க உதவும் என்று அந்தத் துறையில் உள்ளவர்கள் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் ஊடகத்திடம் கூறினர்.

வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு அமர்த்தும்போது பல்வேறு அம்சங்களைக் கருத்தில்கொள்ள வேண்டியிருப்பதாக ‘செங் சூன் ஹுவாட் கட்டுமான நிறுவனத்தை நிறுவிய திரு எட்மண்ட் இங் கூறினார்.

ஊழியர் தீர்வை, தங்குமிட, போக்குவரத்துக் கட்டணங்கள், சம்பளம், படித்தொகை முதலியவை அவற்றுள் அடங்கும்.

மனிதவளப் பற்றாக்குறையாலும் இந்தச் சவால் மேலும் அதிகரித்துள்ளது. ஊழியர்களை வேலைக்கு எடுப்பதில் இங்குள்ள நிறுவனங்கள் மற்ற நாடுகளுடன் போட்டிபோட வேண்டியுள்ளது என்றும் இத்துறையில் சேர உள்ளூர்வாசிகளுக்கு ஆர்வம் இல்லை என்றும் ஒப்பந்ததாரர்கள் கூறுகின்றனர். .

2025ஆம் ஆண்டில், அனைத்துத் துறைகளிலும் பிஎம்இடி எனப்படும் நிபுணர்கள், மேலாளர்கள், நிர்வாகிகள், தொழில்நுட்பர்கள் தவிர்த்த மற்றப் பணிகளில் அதிக எண்ணிக்கையில் நிரப்பப்படாமல் இருந்தவை கட்டுமான ஊழியர்களின் பணியிடங்களே.

அதேஆண்டு டிசம்பர் நிலவரப்படி, இத்துறையில் பணிபுரியும் 566,800 பேரில், கிட்டத்தட்ட ஐவரில் நால்வர் வெளிநாட்டினராக இருந்தனர். மனிதவள அமைச்சின் தரவுகளில் அந்த விவரங்கள் தெரியவந்தன.

இயந்திர மனிதக் கருவிகளால் ஏற்படக்கூடிய சாதகங்களே அவற்றைப் பயன்படுத்த அரசாங்க அமைப்புகளைத் தூண்டியுள்ளன. இயந்திர மனிதக் கருவிகளைக் கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என்பதும் சில ஒப்பந்தப்புள்ளிகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.

பல்வேறு நன்மைகள் இருந்தபோதிலும் கட்டுமானத் துறையில் இயந்திர மனிதக் கருவிகளை ஏற்றுக்கொள்வது அவ்வளவு எளிதானது அல்ல என்று ஒப்பந்ததாரர்கள் கூறுகின்றனர். அதிகச் செலவு, இந்தத் தொழில்நுட்பம் இன்னும் ஆரம்ப நிலையில் இருப்பது போன்ற தடைகளை அதற்குக் காரணங்களாக அவர்கள் சுட்டுகின்றனர்.

குறிப்புச் சொற்கள்
கட்டுமானத் துறைஇயந்திர மனிதன்கருவி