முதியவர்களிடையே அதிகரிக்கும் சத்துக் குறைபாடு

2 mins read
d9b88ccb-5637-4f81-abb8-c44f61ae82b2
அதிகமானோர் போதுமான அளவு ஆற்றல் தரக்கூடிய புரதச்சத்துள்ள உணவை உட்கொள்வதில்லை என்று மருத்துவர்கள் கூறினர்.  - படம்: சாவ்பாவ்

சிங்கப்பூரில் கூடுதலான முதியவர்கள் சத்துக் குறைபாட்டால் கடந்த ஈராண்டுகளில் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனைகள் தெரிவித்துள்ளன. நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டிருப்பது, பசியின்மை ஆகியவற்றால் அந்த நிலை ஏற்பட்டதாகத் தெரிகிறது.

என்எச்ஜி ஹெல்த் குழுமத்தின்கீழ் உள்ள மருத்துவமனைகளிலும் மருந்தகங்களிலும் சத்துக் குறைபாடு காரணமாகச் சேர்க்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 2022ஆம் ஆண்டு 30 விழுக்காட்டிலிருந்து கடந்த ஆண்டு 40 விழுக்காட்டுக்கு உயர்ந்தது.

“அதிகமானோர் போதுமான அளவு ஆற்றல் தரக்கூடிய புரதச்சத்துள்ள உணவை உட்கொள்வதில்லை. எனவே பலரின் எடை குறைவதோடு உடல் அளவில் சரிவர செயல்பட முடியாமல் இருக்கின்றனர்,” என்றார் என்எச்ஜி இயக்குநர் இணைப் பேராசிரியர் லிம் யென் பெங்.

2023ஆம் ஆண்டு என்எச்ஜி சுகாதார உணவு மருத்துவர்கள் சோதித்த நோயாளிகளில் கிட்டத்தட்ட 56 விழுக்காட்டினரிடையே சத்துக் குறைபாடு காணப்பட்டது. அந்த எண்ணிக்கை இவ்வாண்டு 66 விழுக்காட்டுக்கு அதிகரித்துள்ளது.

அதிக அளவிலான சத்துக் குறைபாட்டால் மறதிநோய் ஏற்படக்கூடும் அல்லது மூத்தோர் எளிதில் விழக்கூடிய அபாயம் ஏற்படக்கூடும் என்று மருத்துவர்கள் எச்சரித்தனர்.

ஊட்டச்சத்தும் முக்கிய வைட்டமின் சத்துகளும் பெரியவர்களிடையே குறைவாக இருப்பதை அவர்கள் சுட்டினர்.

2022ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஊட்டச்சத்து ஆய்வில் 50 வயதிலிருந்து 69 வயதுக்கு உட்பட்ட மூத்தோரில் இரண்டில் ஒருவர் பரிந்துரைக்கப்பட்ட புரதச்சத்தை உட்கொள்ளாமல் இருக்கின்றனர்.

எலும்பு ஆரோக்கியத்துக்கும் மறதிநோயைத் தடுப்பதற்குமான வைட்டமின் டி, சுண்ணாம்புச் சத்து ஆகிய குறைபாடுகள் பெரியவர்களிடம் கண்டறியப்பட்டது.

தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனைக் கட்டமைப்பிலும் இதே போக்கு காணப்பட்டது.

தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனையின் புள்ளிவிவரப்படி ஏழில் ஒரு பெரியவரிடம் சத்துக் குறைபாடு காணப்பட்டது.

இதே நிலை தொடர்ந்தால் சத்துக் குறைபாடுள்ள மூத்தோர் எண்ணிக்கை சிங்கப்பூரில் அதிகரிக்கக்கூடிய அபாயம் ஏற்படலாம் என்று மருத்துவர்கள் கவலை தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்