சிங்கப்பூரில் அதிகரிக்கும் பிலாட்டே பயிற்சி மோகம்

சிங்கப்பூரில் அதிகரிக்கும் பிலாட்டே பயிற்சி மோகம்

2 mins read
d11c2ccd-22ef-413a-a08b-18b46d16135a
சிங்கப்பூரில், 2020ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் 2025ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை பிலாட்டே பயிற்சி வழங்கும் இடங்களின் எண்ணிக்கை 270 விழுக்காட்டுக்கும் அதிகமாக அதிகரித்தது. இதே காலகட்டத்தில், பிலாட்டே முன்பதிவுகள் 20 மடங்கு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. - படம்: வவ்ரா பிலாட்டே

வாரத்திற்கு நான்கு முதல் ஐந்து முறை திருவாட்டி அதிதி ரெஹான் பல்வேறு ‘ரீஃபார்மர் பிலாட்டே’ வகுப்புகளுக்காக ‘யோகா எடிஷன்’ பயிற்சி நிலையத்துக்குச் செல்கிறார்.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இவர், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சிங்கப்பூருக்குக் குடிபெயர்ந்தபோது முதலில் இந்த மையத்தின் யோகா வகுப்புகளில் சேர்ந்தார். ஓர் ஆண்டு கழித்து, அதன் பிலாட்டே திட்டத்தைப் பற்றி அவர் தெரிந்துகொண்டார்.

இப்போது அதுவே அவரது மிகவும் பிடித்தமான உடற்பயிற்சியாகும்.

தமக்கு உடல் வலிமையையும் மெலிதான உடல் அமைப்பையும் அத்துடன் நல்ல உடல் தோரணையையும் பிலாட்டே தருகிறது என்று அவர் கூறுகிறார்.

ஜெர்மனியில் பிறந்த பயிற்றுவிப்பாளர் ஜோசஃப் பிலாட்டே என்பவரால் உருவாக்கப்பட்ட இப்பயிற்சி, உடல் ரீதியாகக் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தாது, மனதையும் உடலையும் ஒருங்கிணைக்கும் ஓர் உடற்பயிற்சியாகும். இது பாய் அல்லது ரீஃபார்மர் போன்ற சிறப்பு சாதனங்களைப் பயன்படுத்துகிறது. ரீஃபார்மர் என்பது பட்டைகள், சுருள் வில் மற்றும் கால் வைக்கும் தளம் ஆகியவற்றைக் கொண்ட ஒரு நகரும் வண்டியாகும்.

“வேலை இடத்தில் மிகவும் மன அழுத்தமான நாளாக இருக்கலாம். ஆனால் பிலாட்டே வகுப்பின் முடிவில், நான் வானத்தில் பறப்பது போன்ற மிகுந்த மகிழ்ச்சியான உணர்வுடன் வெளியேறுகிறேன். நான் இதை மிகவும் விரும்புகிறேன்,” என்று வங்கித் துறையில் உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தலைவராகப் பணிபுரியும் திருமதி அதிதி கூறுகிறார்.

சிங்கப்பூரில் 2020ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் 2025ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை பிலாட்டே பயிற்சி வழங்கும் இடங்களின் எண்ணிக்கை 270 விழுக்காட்டுக்கும் அதிகமாக அதிகரித்தது. இதே காலகட்டத்தில், பிலாட்டே முன்பதிவுகள் 20 மடங்கு அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

ஸ்போர்ட்எஸ்ஜி, அதன் மேட் பிலாட்டே வகுப்புகளில் பங்கேற்போர் எண்ணிக்கை 2015ல் கிட்டத்தட்ட 50,000 பதிவுகளிலிருந்து 2025ல் கிட்டத்தட்ட 150,000ஆக மும்மடங்கு அதிகரித்ததாகக் கூறியது.

பல்வேறு வயது மற்றும் உடற்தகுதி நிலைகளைக் கொண்டவர்களுக்கு ஏற்ற ஒரு திட்டமாக 2014ஆம் ஆண்டில் ஆக்டிவ்எஸ்ஜி விளையாட்டு நிலையங்களில் மேட் பிலாட்டே பயிற்சியை ஸ்போர்ட்எஸ்ஜி அறிமுகப்படுத்தியது.

“சுறுசுறுப்பான, ஆரோக்கியமான வாழ்விற்கான முழுமையான அணுகுமுறையின் ஒரு பகுதியாக பிலாட்டே மீதான தொடர்ச்சியான மற்றும் அதிகரித்து வரும் ஆர்வத்தை இது பிரதிபலிக்கிறது,” என்று அதன் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்