தைப்பூச ஊர்வலத்தில் அதிகரிக்கும் பக்தர் கூட்டம்

இடையிடையே காத்திருக்க நேரிட்டாலும் நிலைமை சீராக இருப்பதாக பக்தர்கள் கூறினர்

தைப்பூச ஊர்வலத்தில் அதிகரிக்கும் பக்தர் கூட்டம்

2 mins read
53af27b1-d67b-42a9-8af6-4daa2d4352d8
லிட்டில் இந்தியா ஆர்க்கெட் பகுதிக்கு அருகே இன்று (பிப்ரவரி 1) நண்பகல் வாக்கில் நடந்து செல்லும் தைப்பூச ஊர்வலக் கூட்டம். - படம்: சுந்தர நடராஜ்

தைப்பூச ஊர்வலப் பாதையில் பக்தர் கூட்டம் பெருகி வருகிறது. சில இடங்களில் கூட்டம் நகர்ந்து செல்லச் சற்று தாமதமானாலும், இதுவரை கூட்டக் கட்டுப்பாட்டுக்கான ஏற்பாடு சீராக இருப்பதாக பக்தர்கள் கூறினர்.

காலை 11.30 மணியளவில் பெருமாள் கோயிலிலிருந்து பக்தர்கள் புறப்பட்ட நேரத்தில் நெரிசல் ஏற்பட்டதாக ‘தமிழ் முரசு’ அறிந்தது. மக்கள் நடமாட்டம் இதுவரை பொதுவாக சீராக இருப்பதாகத் தென்பட்டது.

பெருமாள் கோயிலிலிருந்து நோரிஸ் ரோடு பகுதியை அடைவதற்கு கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் ஆனதாகக் கூறப்படுகிறது.

காவடிகளுக்கும் பால்குடங்களுக்கும் இடையே தடுப்பு இன்றி அவர்கள் ஒன்றாக நடந்து சென்றபோது அவ்வாறு நெரிசல் ஏற்பட்டதாகத் தெரியவந்துள்ளது.

சிலிகி ரோடு வரையில் மக்கள் நடமாட்டம் சீராக இருந்தபோதும், கிளெமென்சோ சாலைப் பகுதி முதல் தேங்க் ரோடு வரை பக்தர்கள் செல்வதற்கு ஏறத்தாழ 50 நிமிடங்கள் ஆனது.

இருந்தபோதும் கிட்டத்தட்ட 12.30 மணிக்குப் பிறகு நெரிசல் குறைந்ததுபோலக் காணப்பட்டது. பெருமாள் கோயிலிலிருந்து நோரிஸ் ரோடு வரை நடப்பதற்குத் தற்போது ஏறக்குறைய அரை மணி நேரம் ஆவதாகக் கூறப்படுகிறது.

ஏறத்தாழ இரண்டு ஆண்டுகளாகக் காவடி சுமக்கும் உறவினரைப் பின்தொடர்ந்து சென்ற தனுஷா, தயாரிப்புப் பணிகள் இம்முறை சுமுகமாக இருந்ததாகக் கூறினார்.

முதன்முதலாகக் காவடி சுமக்கும் நண்பருடன் ஊர்வலத்தில் சென்றுகொண்டிருந்த பாண்டியன், போக்குவரத்துச் சமிக்ஞை விளக்குகள் இருந்த இடத்தில் மட்டும் சிறிது நேரம் நிற்கவேண்டி இருந்ததாகக் கூறினார்.

பிடோக்கில் வசிக்கும் தேவன், காவடி சுமக்கும் தமது சகோதரியின் கணவருடன் பிற்பகல் 12.30 மணியளவில் கோயிலிருந்து கிளம்பியதாகக் குறிப்பிட்டார். “சாலைச் சந்திப்புகளில் கிட்டத்தட்ட 10 நிமிடங்கள் நின்றோம். ஆனால் பெரும் நெரிசல் ஏற்பட்டதாகச் சொல்ல முடியாது,” என்று அவர் கூறினார்.

ஆலயங்களிலும் ஊர்வலப் பாதைகளிலும் கூட்ட நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கலாசார, சமூக, இளையர்துறைத் துணையமைச்சர் தினே‌ஷ் வாசு தாஸ் ஜனவரி 31ஆம் தேதி, சமூக ஊடகங்களில் பதிவிட்டார்.

அனைவரும் ஒத்துழைத்து, வழிகாட்டிக் குறிப்புகளைப் பின்பற்றி பக்தர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என்று திரு தினே‌ஷ், தமது பதிவில் கூறியிருந்தார்.

சிறிய பிள்ளைகளை வைத்திருப்போர், மூத்தோர் இருக்கும் குடும்பங்கள் என, பெரிய கூட்டங்களைச் சமாளிக்க முடியாதோர், உச்ச நேரங்களையும் பரபரப்பான நேரங்களையும் தவிர்க்கும்படியும் அறிவுறுத்தப்பட்டது.

குறிப்புச் சொற்கள்