சிங்கப்பூரில் வேலையில் கடும் மனவுளைச்சலுக்கு ஆளானபோதும் அதே வேலையைக் ‘கட்டிக்கொண்டு’ இருக்கும் போக்கு (job hugging) அதிகரித்துள்ளது.
கொவிட்-19 கொள்ளைநோய்ப் பரவலுக்குப் பிறகு சிங்கப்பூரில் ஜாப்-ஹாப்பிங் (job-hopping) என்றழைக்கப்படும் அடிக்கடி வேலை மாறும் போக்கில் மாற்றம் தென்படுவதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் பேசிய வேலைக்கு ஆள் எடுக்கும் துறையினரும் வல்லுநர்களும் குறிப்பிட்டனர்.
ஆண்டுதோறும் வேலையிலிருந்து விலகுவோரின் விகிதம் வரலாறு காணாத அளவில் 2024ல் 1.3 விழுக்காடாகப் பதிவானது. மனிதவள அமைச்சின் புள்ளிவிவரங்களில் இத்தகவல் தெரிய வந்துள்ளது.
இவ்வாண்டு முதல் இரு காலாண்டுகளில் விகிதம் 1.2 விழுக்காட்டுக்குச் சரிந்தது. அதேபோல், ஒருவர் சராசரியாக அதே வேலையில் இருக்கும் காலம், 2014ல் 7.3 ஆண்டுகளிலிருந்து 2024ல் எட்டு ஆண்டுகளுக்கு அதிகரித்தது.
சவால்கள் இருந்தும் பலர் தங்கள் வேலையிலிருந்து விலகாமல் இருப்பது வேலையை விரும்புவதனால் அல்ல. மாறாக, அவர்களிடையே காணப்படும் அச்சம் அதற்குக் காரணம்.
வேலை நிலையாக இருக்கவேண்டும் என்ற கவலை போன்றவற்றால் ஊழியர்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தப் போக்கிற்கு வேறு சில காரணங்கள் இருப்பதாகவும் வல்லுநர்கள் கூறுகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
கடந்த பல ஆண்டுகளில் சிங்கப்பூரின் பொருளியல் கட்டமைப்பு உருமாறியிருப்பதை சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் பொருளியல் பிரிவைச் சேர்ந்த இணைப் பேராசிரியர் கெல்வின் சியா சுட்டினார்.
நிபுணர்கள், மேலாளர்கள், நிர்வாகிகள், தொழில்நுட்பர்கள் ஆகியோரின் எண்ணிக்கை மற்றவகை ஊழியர்களின் எண்ணிக்கையைவிட வேகமாக அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அத்தகையோரிடையே பொதுவாக வேலையிலிருந்து விலகும் போக்கு குறைவு என்று அவர் தெரிவித்தார்.
குறிப்பாக தொழில்நுட்பம், மின்வர்த்தகம், நிபுணத்துவச் சேவைத் துறைகளில் வேலையிலிருந்து விலகும் போக்கில் ஊழியர்கள் அதிகத் தயக்கம் காட்டி வருவதாக புல்மன் மோரிசன் வேலை வாய்ப்பு நிறுவனதின் ஜுங் ஃபூ கூறினார்.
15 ஆண்டுகளாக ஊழியர்களை வேலைக்கு எடுக்கும் துறையில் பணியாற்றிவரும் அவர், தொழில்நுட்பம், மின்வர்த்தகம், நிபுணத்துவச் சேவைத் துறைகளில் பலமுறை மறுசீரமைப்புப் பணிகள் நடந்து வருவதும் செயற்கை நுண்ணறிவின் தாக்கமும் அதற்கான காரணங்கள் என்று விளக்கமளித்தார்.
இவ்வாண்டு நவம்பர் மாத நடுப்பகுதி நிலவரப்படி உலகளவில் குறைந்தது 110,000 தொழில்நுட்ப ஊழியர்கள் ஆட்குறைப்பு செய்யப்பட்டுள்ளனர் என்று அமெரிக்காவின் சான் ஃபிரான்சிஸ்கோ நகரில் இயங்கும், தொழில்நுட்பத் துறையில் ஆட்குறைப்புக் கணக்கெடுப்புத் தளமான Layoffs.fyi தெரிவிக்கிறது.
எனினும், இந்தப் போக்கு புதிதல்ல என்றும் வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர். பொதுவாக ஒரு நெருக்கடியின்போது அல்லது அதற்குப் பிறகு பலர் வேலையிலிருந்து விலகத் தயங்குவதுண்டு என்று அவர்கள் கூறுகின்றனர்.
2008ஆம் ஆண்டு நிதி நெருக்கடி, கொவிட்-19 பரவல் உச்சத்தில் இருந்த 2020ஆம் ஆண்டு ஆகியவற்றை அதற்கு எடுத்துக்காட்டுகள் என்று வல்லுநர்கள் சுட்டினர்.

