பிரியும் உயிரின் அழியாத அச்சு: ‘ஐசியூ’ நோயாளிகளின் நேசத்தைக் காட்டும் ‘கைச் சிற்பங்கள்’

பிரியும் உயிரின் அழியாத அச்சு: ‘ஐசியூ’ நோயாளிகளின் நேசத்தைக் காட்டும் ‘கைச் சிற்பங்கள்’

2 mins read
8c693c36-c4d8-4b91-9d12-896515f630e2
தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் தங்களுக்குப் பிரியமானவர்களின் நினைவுகளை என்றும் அழியாமல் பாதுகாத்திட இந்தக் ‘கைச் சிற்பங்கள்’ வழிசெய்யும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது டான் டோக் செங் மருத்துவமனை. - படம்: டான் டோக் செங் மருத்துவமனை 

தீவிர சிகிச்சைப் பிரிவில்  (ஐசியூ) தங்களுக்குப் பிரியமானவர்களுடன் கழிக்கக் கிடைக்கும் இறுதித் தருணங்கள் மிகக் குறுகிய காலமே நீடிக்கக்கூடியதாக இருக்கலாம்.

அவ்வகையில், நோயாளிகளும் அவர்களது குடும்பத்தினரும் நீண்டகால நினைவுகளை உருவாக்குவதற்குக் கைகொடுக்கும் ஒரு வழியைக் கண்டறிந்துள்ளனர், டான் டோக் செங் மருத்துவமனையின் தாதியர். அதுதான் ‘கைச் சிற்பங்கள்’. 

கடந்த செவ்வாய்க்கிழமை (மே 26) வெளியிட்ட ஃபேஸ்புக்  பதிவில், இந்தச் செயல்பாட்டில் பங்கேற்ற ‘ஐசியூ’ நோயாளி சுமினி அவரது குடும்பத்தினரைப் பற்றி அம்மருத்துவமனை பகிர்ந்துள்ளது.

50 ஆண்டுகளுக்கும் மேலாக ஒன்றாக வாழ்ந்த சுமினி அவரது கணவர் ஜுமாத் ஆகியோரின் நெகிழ்ச்சியான தருணம் பகிரப்பட்டுள்ளது. 

‘ஐசியூ’வில் அனுமதிக்கப்பட்டிருந்த தன் மனைவியின் கைகளை ஜுமாத் கண்ணீருடன் இறுகப் பற்றியிருக்க, தாதியர் அதற்கென உள்ள பிரத்தியேக கலவையைப் பயன்படுத்தி அவர்களது கைகளின் அச்சை எடுத்தனர். இந்த நிகழ்வு நடந்து இரண்டு நாள்களுக்குப் பிறகு சுமினி காலமானார்.

மரணத் தருவாயில் இருக்கும் தங்கள் அன்புக்குரியவர்களின் இறுதி நினைவுகளைக் குடும்பத்தினர் என்றும் பேணிப் பாதுகாப்பதற்கு உதவும் நோக்கில், கடந்த 2025ஆம் ஆண்டில் ஒரு பரிவின் வெளிப்பாடாகத் தொடங்கப்பட்ட இந்த ‘கைச் சிற்பப்’ பயிற்சி, தற்போது ஒரு முறையான பராமரிப்புத் திட்டமாக  மாற்றப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருவாட்டி சுமினியின் மகள் கூறுகையில், “இந்தக் கைச் சிற்பம் அவர்கள் ஒன்றாக வாழ்ந்ததற்கான அழியாத அடையாளமாக எங்கள் வீட்டில் இருக்கும். அம்மா எங்களோடுதான் வாழ்கிறார் என்பதை இது எப்போதும் நினைவூட்டும்” என்றார்.

இதற்கிடையே, “ஐசியூ என்பது அச்சுறுத்தும், வேதனை நிறைந்த ஒரு இடமாக இருக்கலாம். ஆனால், சிறிதளவு இரக்கம், கனிவு புத்தாக்கமிக்க சிந்தனை இருந்தால், அது நமக்குரியவர்களின் நினைவுகளை நாம் என்றும் இறுக்கமாகப் பற்றிக்கொள்ளும் ஒரு இடமாகவும் மாறும்,” என்று மருத்துவமனை நிர்வாகம் அதன் சமூக ஊடகப் பதிவில் எழுதியுள்ளது.

குறிப்புச் சொற்கள்