இந்தியா-சிங்கப்பூர் தற்காப்பு ஒத்துழைப்பை மேலும் ஆழப்படுத்த அவ்விரு நாடுகளும், தங்களுக்கு இடையே நடைபெற்ற பாதுகாப்புப் பணிக்குழுவின் 16வது சந்திப்புக் கூட்டத்தின்போது கடப்பாடு தெரிவித்தன. செப்டம்பர் 4ல் இந்தக் கூட்டம் நடைபெற்றது.
இந்தியத் தற்காப்பு அமைச்சின் அனைத்துலக ஒத்துழைப்புக்கான இணைச் செயலாளர் அமிதாப் பிரசாத், தற்காப்பு அமைச்சின் கொள்கை அலுவலக இயக்குநர் கர்னல் டெக்ஸன் யாப் ஆகியோர் கூட்டத்திற்குth தலைமை வகித்தனர்.
தற்காப்பு அமைச்சர்களுக்கு இடையே கடந்த முறை நடைபெற்ற உரையாடலில் எடுக்கப்பட்ட முடிவுகள், திட்டங்கள், முன்னேற்றங்கள் ஆகியவை பற்றிய கலந்துரையாடல் இடம்பெற்றது. அத்துடன், புதிய வாய்ப்புகளுக்கான ஒத்துழைப்பு குறித்தும் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் ஆகியோர் இவ்வாண்டின் முற்பகுதியில் புதுடெல்லியில் சந்தித்தபோது வெளியிட்ட பரந்த உத்திபூர்வ பங்காளித்துவத்திற்கான கூட்டு அறிக்கை, இந்தச் சந்திப்புக்கான வழிகாட்டியாக அமைந்தது.
பணிக்குழு சந்திப்பின் ஒரு பகுதியாக, துணைச் செயலாளர் (கொள்கை) பிரெடெரிக் சூவைத் திரு அமிதாப் பிரசாத் சந்தித்தார். அத்துடன், சாங்கி கடற்படைத் தளத்தில் உள்ள தகவல் ஒருங்கிணைப்பு மையம், ஆசியான் தற்காப்பு அமைச்சர்களின் இணையப் பாதுகாப்பு கூட்டம், தகவல் சிறப்பு மையம் ஆகிய இடங்களுக்கும் திரு அமிதாப் சென்றார்.
இருதரப்புப் பயிற்சி, திறன் மேம்பாடு, தொழில்துறைக் கூட்டுறவு, தொழில்நுட்ப ஒத்துழைப்பு, ராணுவ கடல்சார் தற்காப்பு உள்ளிட்ட துறைகளின் தொடர்பில் கலந்துரையாடல் நடந்தது.
இருதரப்பு தற்காப்பு ஒத்துழைப்பின் முன்னேற்றம் குறித்து இரண்டு தலைவர்களுமே மனநிறைவு தெரிவித்தனர். 2025ஆம் ஆண்டு இந்தியா-சிங்கப்பூர் அரசதந்திர உறவுகளின் 60வது ஆண்டு நிறைவை ஒட்டி, இந்தப் பங்காளித்துவத்தை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்ல கடப்பாடு தெரிவித்தனர்.
இந்தியாவின் கிழக்கு நோக்கிய கொள்கையில் (Act East Policy) சிங்கப்பூரின் முக்கியப் பங்கு வலியுறுத்தப்பட்டது. வட்டாரப் பாதுகாப்பு, பொருளியல் ஈடுபாடு மற்றும் இந்திய-பசிபிக் பெருங்கடல் முழுவதும் உத்திபூர்வ இணைப்புக்கு அளிக்கும் பங்களிப்பை இந்தச் சந்திப்பு எடுத்துக்காட்டுவதாக ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.