இந்தியா- சிங்கப்பூர்: விரிவான உத்திபூர்வ பங்காளித்துவம் வலுவாக்கம்

2 mins read
மூன்றாவது அமைச்சர்நிலை வட்டமேசைச் சந்திப்பு
218365b5-5ffb-45ac-8885-682b5be59a1b
(மேல்வரிசை இடமிருந்து) மனிதவள அமைச்சர் டான் சீ லெங், இந்திய வர்த்தக, தொழில் அமைச்சர் பியூஷ் கோயல், தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் டியோ, இந்திய மின்னணு, தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், போக்குவரத்துத் தற்காலிக அமைச்சர் ஜெஃப்ரி சியாவ், (கீழ்வரிசை இடமிருந்து) வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், துணைப் பிரதமர் கான் கிம் யோங், இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், உள்துறை அமைச்சர் கா. சண்முகம். - படம்: தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு
multi-img1 of 2

புதுடெல்லி: இந்தியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான மூன்றாவது அமைச்சர்நிலை வட்டமேசைச் சந்திப்பு புதுடெல்லியில் புதன்கிழமை (ஆகஸ்ட் 13) நடைபெற்றது.

இந்தச் சந்திப்பில் மின்னிலக்கமயம், திறன் மேம்பாடு, நீடித்த நிலைத்தன்மை, சுகாதாரப் பராமரிப்பு, தொடர்பு, உற்பத்தி மேம்பாடு ஆகியவற்றில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

இந்தியத் தரப்பிலிருந்து அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வர்த்தக, தொழில் அமைச்சர் பியூஷ் கோயல், மின்னணு, தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

சிங்கப்பூரிலிருந்து துணைப் பிரதமர் கான் கிம் யோங், தேசியப் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சரும் உள்துறை அமைச்சருமான கா சண்முகம், வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் டியோ, மனிதவள அமைச்சர் டான் சீ லெங், போக்குவரத்துத் தற்காலிக அமைச்சர் ஜெஃப்ரி சியாவ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இரு நாடுகளுக்கும் இடையே விரிவான உத்திபூர்வ பங்காளித்துவத்தை வலுப்படுத்துவதில் சிங்கப்பூர் அமைச்சர்களின் கடப்பாட்டுக்கு இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நன்றி தெரிவித்தார்.

இந்த வட்டமேசைக் கூட்டம், இந்தியா - சிங்கப்பூர் வர்த்தக வட்டமேசைக் கூட்டத்துடன் தொடர்புடையது என்றும் அரசாங்கத்துக்கும் தொழில்துறைக்கும் இடையிலான கூட்டு முயற்சிதான் இருநாட்டு உறவுகளின் அடுத்த கட்டத்துக்கான திறவுகோல் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்தியா - சிங்கப்பூர் அமைச்சர்நிலை வட்டமேசைக் கூட்டம் நிறைவுபெற்ற பிறகு திரு ஜெய்சங்கர் தமது எக்ஸ் தளப் பதிவில் இவ்வாறு குறிப்பிட்டார்.

அமைச்சர் டான் சீ லெங் வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில், மூன்றாவது வட்டமேசைக் கூட்டம் இரு நாட்டு நட்புறவையும் ஆழமான நம்பிக்கையையும் மறுவுறுதிப்படுத்தியதாகக் குறிப்பிட்டார். பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பதற்கான புதிய வாய்ப்புகள் தொடர்பில் கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றதாக அவர் சொன்னார்.

பிறகு இரு நாடுகளுக்கும் இடையிலான 60 ஆண்டு அரசதந்திர உறவைக் குறிக்கும் வகையில் சிங்கப்பூர் அமைச்சர்கள், இந்திய அதிபர் திரௌபதி முர்முவைச் சந்தித்ததாகவும் வளர்ச்சி காணும் துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான கடப்பாட்டை மறுவுறுதிப்படுத்தியதாகவும் அமைச்சர் டான் கூறினார்.

செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 12) புதுடெல்லி சென்று சேர்ந்த சிங்கப்பூர் அமைச்சர்களை இந்திய வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் ரந்தீர் ஜெய் ஸ்வால் வரவேற்றார்.

இரு நாடுகளுக்கும் இடையில் விரிவான உத்திபூர்வ பங்காளித்துவத்தைத் தொடர்ந்து வலுப்படுத்தும் தனித்துவமான வழிமுறை இந்த அமைச்சர்நிலை வட்டமேசைக் கூட்டம் என்றார் அவர்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, 2024ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சிங்கப்பூருக்குப் பயணம் மேற்கொண்டபோது இரு நாட்டு உறவுகள் விரிவான உத்திபூர்வ பங்காளித்துவம் என்ற நிலைக்கு உயர்ந்தன.

நம்பிக்கை, பரஸ்பர மரியாதை ஆகியவற்றின் அடிப்படையிலான நீண்டகால நட்பு, சில துறைகளில் விரிவான ஒத்துழைப்பு, பொதுவான வரலாறு ஆகியவற்றின் மூலம் கடந்த ஆண்டுகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு வலுவாகி, பன்முகத்தன்மை கொண்டதாக விளங்குகிறது.

முதல் வட்டமேசைக் கூட்டம் 2022 செப்டம்பரில் புதுடெல்லியிலும் இரண்டாவது கூட்டம் 2024ஆம் ஆண்டு ஆகஸ்ட்டில் சிங்கப்பூரிலும் நடைபெற்றன.

குறிப்புச் சொற்கள்