இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, செப்டம்பர் மாதம் 4, 5ஆம் தேதிகளில் சிங்கப்பூருக்கு அதிகாரபூர்வ பயணம் மேற்கொண்டபோது சிங்கப்பூரும் இந்தியாவும் பகுதி மின்கடத்தி தொடர்பான புரிந்துணர்வுக் குறிப்பில் கையெழுத்திட்டன.
இந்தியாவில் சிங்கப்பூர் பகுதி மின்கடத்தி நிறுவனங்கள் செயல்பட இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
தனது பகுதி மின்கடத்தி இலக்குகளை எட்ட சிங்கப்பூர் நிறுவனங்களின் ஆதரவை இந்தியா நாடுகிறது.
இந்தியாவின் புதிய, வளர்ந்துவரும் பகுதி மின்கடத்தித் துறையில் உள்ள வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளும் நோக்குடன் சிங்கப்பூர் நிறுவனமான கிளின்டெக் சர்விசஸ், இந்தியாவில் உற்பத்திப் பிரிவு ஒன்றை அமைக்கத் திட்டமிட்டுள்ளது.
“இந்தியாவில் பகுதி மின்கடத்தித் துறை சீரான வளர்ச்சி கண்டு வருவதைப் பார்க்கிறோம்,” என்று கிளின்டெக் சர்விசஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் முஜீப் முன்டயில் தெரிவித்தார்.
சூரியசக்தித் துறைக்கான சாதனங்களையும் விநியோகம் செய்யும் கிளின்டெக் சர்விசஸ் நிறுவனம் தென்கொரியாவிலிருந்து இந்தியாவுக்கு அதற்குத் தேவையான சாதனங்களைக் கொண்டு செல்கிறது.
“டாட்டா, மைக்ரோன் போன்ற நிறுவனங்களும் எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இந்தியாவில் வர்த்தக அளவு அதிகரிக்கும்போது அந்நாட்டிலேயே உற்பத்தி செய்யும் வகையில் உற்பத்திப் பிரிவு ஒன்றைத் தொடங்குவோம்,” என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் திரு முண்டயில் தெரிவித்தார்.
குறைந்தபட்ச முதலீட்டுத் தொகையாக $1 மில்லியன் தேவைப்படுவதாக அவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
இந்தியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான புதிய புரிந்துணர்வுக் குறிப்பு இந்தியாவின் பகுதி மின்கடத்தித் துறையின் வளர்ச்சியை அதிகாரபூர்வமாகத் தொடங்கிவைத்துள்ளதாக என்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பின் தெற்காசிய, மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கப் பிரிவு நிர்வாக இயக்குநர் திரு ஜி. ஜெயகிருஷ்ணன் தெரிவித்தார்.
பகுதி மின்கடத்தித் துறையில் உள்ள பெரிய நிறுவனங்களைக் குறிப்பிட்ட திரு ஜெயகிருஷ்ணன், “இந்த இந்திய நிறுவனங்களுக்கு சிங்கப்பூர் நிறுவனங்கள் சாதனங்களை அனுப்பிவைக்கின்றன. அவற்றில் சில சிங்கப்பூர் நிறுவனங்கள் அந்த இந்திய நிறுவனங்களுடன் இந்தியாவில் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றன. பெரிய நிறுவனத்தின் ஆதரவு அவற்றுக்கு இருக்க வேண்டும். இல்லாவிடில், வர்த்தக வாய்ப்பு இல்லாத நிலை ஏற்படும் அபாயம் உள்ளது,” என்று கூறினார்.

