பயங்கரவாதத்திற்கு எதிரான அனைத்துலக ஒத்துழைப்பை வலுப்படுத்தும் முயற்சியில், அக்கொடுஞ்செயலுக்கு எதிரான போராட்டத்தில் சிங்கப்பூரின் ஆதரவை நாடுவதாகக் கூறியுள்ளது இந்தியா.
இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ சஞ்சய் குமார் ஜா தலைமையிலான இந்தியாவின் அனைத்துக் கட்சி பேராளர் குழு, சிங்கப்பூர் உள்துறை, வெளியுறவு மூத்த துணை அமைச்சர் சிம் ஆனை செவ்வாய்க்கிழமை (மே 27) மாலை சிங்கப்பூரில் சந்தித்தது.
இந்தியாவின் ஜம்மு காஷ்மீர், பஹல்காமில் ஏப்ரல் 22ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தானில் இந்திய ராணுவம் மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை குறித்தும் பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு எதிரான இந்தியாவின் முயற்சிகளுக்கு உலக நாடுகளின் ஆதரவைத் திரட்டும் விதமாகவும் இந்தியாவின் அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் குழு பல்வேறு நாட்டுத் தலைவர்களைச் சந்தித்து வருகிறது.
அவ்வகையில் இந்தியப் பேராளர்கள் குழு அமெரிக்கா, ஜப்பான், ரஷ்யா, கொரியா உள்ளிட்ட 33 நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு வருகிறது. இப்பயணத்தின் ஓர் அங்கமாக அது சிங்கப்பூர் வந்துள்ளது.
இந்தியா மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூர்‘ நடவடிக்கை தொடர்பில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து திருவாட்டி சிம் ஆனிடம் குழு விளக்கியது.
‘‘பயங்கரவாதத்திற்கு எதிரான இந்த நடவடிக்கையில் எவ்விதப் பேதமுமின்றி பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இக்குழுவில் இணைத்துள்ளோம். இது பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் ஒருங்கிணைந்த செயல்பாட்டின் அடையாளம்,” என்று சொன்னார் குழுவிற்குத் தலைமை தாங்கும் திரு ஜா.
இந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதல் நடந்தால், அதற்குத் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றும் அணுவாயுத அச்சுறுத்தலை இந்தியா ஒருபோதும் பொறுத்துக்கொள்ளாது எனவும் குறிப்பிட்ட பேராளர் குழு, பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை வரையறுத்த புதிய அளவுகோல் இந்தியா மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்பதைச் சுட்டியது.
மேலும் பயங்கரவாதச் செயல்களைக் கண்டித்தும் அதனை முறியடிக்க இந்தியா மேற்கொள்ளும் ஒவ்வொரு முயற்சிக்கும் சிங்கப்பூரின் ஆதரவுக்கரம் தேவை என்று கோரிய இந்தியா, ‘‘குறிப்பாக, அனைத்துலக மன்றங்களான ஐக்கிய நாட்டு நிறுவனத்திலும் நிதி நடவடிக்கை பணிக்குழுவிலும் சிங்கப்பூர் இன்னும் கூடுதல் ஆதரவை அளித்திட வேண்டும்,’’ என்றும் கேட்டுக்கொண்டது.
தொடர்புடைய செய்திகள்
இதன் தொடர்பில் கருத்துரைத்த திருவாட்டி சிம் ஆன், சிங்கப்பூர் அனைத்து பயங்கரவாதச் செயல்களையும் கடுமையாகக் கண்டிப்பதாகவும் பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவுடன் துணை நிற்பதாகவும் தெரிவித்தார்.
சிங்கப்பூரும் இந்தியாவும் நெருங்கிய பங்காளிகள் என்று சொன்ன அவர், இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான முயற்சிகள் சிறப்பாகத் தொடரும் என உறுதியளித்தார்.

