பொருளியல் ரீதியாக விரைவாக வளரும் தென்கிழக்காசிய நாடுகளில் இந்திய நிறுவனங்கள் தங்களது செயல்பாடுகளை விரிவுபடுத்தும்படி சிங்கப்பூரின் வெளியுறவு மற்றும் வர்த்தக, தொழில் துணை அமைச்சர் கான் சியாவ் ஹுவாங் கேட்டுக்கொண்டுள்ளார்.
2030க்குள் உலகின் நான்காவது ஆகப் பெரும்பொருளியலாகத் திகழவுள்ள தென்கிழக்காசியாவில் இந்திய நிறுவனங்கள் தங்களை நிலைநிறுத்திக்கொள்ள சிங்கப்பூர் உதவும் என்றும் திருவாட்டி கான் கூறினார்.
“இந்தியாவை இந்த வட்டாரத்திற்குள் நாங்கள் வரவேற்கிறோம். இந்தியாவுடனும் அதன் நிறுவனங்களுடனும் பங்காளித்துவத்தில் இணைவதில் சிங்கப்பூர் மிகுந்த மகிழ்ச்சியும் பெருமையும் கொள்ளும்,” என்று அவர் சொன்னார்.
சிங்கப்பூர் - இந்தியா அரசதந்திர உறவின் 60ஆம் ஆண்டுநிறைவைக் குறிக்கும் ‘இந்தியா-சிங்கப்பூர்@60’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது திருவாட்டி கான் இவ்வாறு பேசினார்.
ஷங்ரிலா ஹோட்டலில் சனிக்கிழமை (அக்டோபர் 4) நடைபெற்ற அந்தக் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் இந்தியாவின் வர்த்தக, தொழில்துறை அமைச்சர் பியுஷ் கோயல், சிங்கப்பூருக்கான இந்தியத் தூதர் ஷில்பாக் அம்புலே, தொழில்முனைவர்கள், பன்னாட்டு அமைப்பின் பிரதிநிதிகள் முதலியோர் பங்கேற்றனர்.
கடந்த செப்டம்பர் மாதத் தொடக்கத்தில் பிரதமர் லாரன்ஸ் வோங் மேற்கொண்ட இந்தியப் பயணத்தில் தாமும் இடம்பெற்றிருந்ததைக் குறிப்பிட்ட துணையமைச்சர் கான், சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பங்காளித்துவம், விரிவான உத்திபூர்வ பங்காளித்துவமாகக் கடந்த ஆண்டு ஏற்றம் கண்டதையும் சுட்டினார்.
பயணத்தின்போது ஐந்து புரிந்துணர்வுக் குறிப்புகள் கையெழுத்தாகின.
சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவு ஆழமாவதையும் அகலமாவதையும் இந்தப் பங்காளித்துவம் எடுத்துரைக்கிறது. உலகில் தற்போது நான்கு நாடுகளுடன் மட்டுமே சிங்கப்பூர் இத்தகைய பங்காளித்துவத்தைக் கொண்டுள்ளதால் இந்த உறவு அர்த்தமுள்ளது என்றார் அமைச்சர் கான்.
தொடர்புடைய செய்திகள்
“ஒவ்வொரு முறையும் நான் இந்தியா செல்லும்போது அங்குள்ள மேம்பாடுகளையும் முன்னேற்றங்களையும் கண்டு வியக்கிறேன்,” என்றும் அவர் சொன்னார்.
இந்திய நிறுவனங்கள் தங்களது புத்தாக்கத்தையும் படைப்பாற்றலையும் கொண்டு, சிங்கப்பூர் நிறுவனங்களுடன் இணைந்து புதிய தயாரிப்புகளையும் சேவைகளையும் உருவாக்கி, இந்தியா, சிங்கப்பூர் மற்றும் தென்கிழக்காசிய நாடுகளின் பொருளியலுக்கு வலுவூட்டும் எனத் திருவாட்டி கான் நம்பிக்கை தெரிவித்தார்.
கலந்துரையாடலின்போது பேசிய அமைச்சர் கோயல், விரிவான உத்திபூர்வ பங்காளித்துவத்தின்வழி இருநாட்டுத் தலைவர்களும் பொருளியல் வளர்ச்சியை விரைவுபடுத்துவதில் முனைப்பு காட்டுவதாகக் கூறினார்.
“முன்னேற்றம் குறித்து நாங்கள் மிகுந்த ஈடுபாடு காட்டுகிறோம். அதனால் அடையக்கூடியது மிகவும் பெரிது,” என்று திரு கோயல் கூறினார்.
“இந்தியா தனது பொருளியல் இலக்குகளை எட்டுவதற்குச் சிங்கப்பூர் போன்ற நம்பகமான நண்பர்கள் தேவைப்படுகிறார்கள். சிங்கப்பூருடன் நாங்கள் இணைந்து பணியாற்றி, பொருளியலைப் பெருக்கி, அதன் அனுபவங்களிலிருந்து கற்றுக்கொண்டு வளர்வோம் என நம்புகிறோம்,” என்றும் அவர் சொன்னார்.