விஷ்ருதா நந்தகுமார்
இன்றைய உலகின் சவால்களையும் நிச்சயமற்ற தன்மையையும் எதிர்கொள்ள சிங்கப்பூர், இந்தியா போன்ற ஒத்த எண்ணம் கொண்ட நம்பகமான நண்பர்கள் தேவை என்று பொதுத் தூதரும் பேராசிரியருமான டோமி கோ தெரிவித்துள்ளார்.
இடர்ப்பாடுகள் நிறைந்த உலகளாவிய சூழலில் ஒன்றிணைந்து வாய்ப்புகளைத் தேட அந்த நட்புறவு உதவும் என்றும் திரு கோ கூறினார்.
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகமும் தெற்காசிய கல்விக் கழகமும் இணைந்து நடத்திய ‘இந்தியா-சிங்கப்பூர்: நிலையான எதிர்காலம்’ என்ற கலந்துரையாடலைத் தொடங்கி வைத்து பேராசிரியர் கோ சிறப்புரையாற்றினார்.
அமாரா ஹோட்டலில் திங்கட்கிழமை (ஏப்ரல் 28) நடந்த அந்தக் கலந்துரையாடலில் கிட்டத்தட்ட 150 பேர் கலந்துகொண்டனர்.
தமது உரையின்போது, சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்கும் இடையிலான ஒற்றுமைகளைத் திரு கோ குறிப்பிட்டார்.
இரு நாடுகளுக்கும் இடையில் வலுவான நட்புறவு, பெருகிவரும் பொருளியல் ஒத்துழைப்பு, அணுக்கமான தற்காப்பு உறவு போன்றவற்றைச் சுட்டிய அவர், தலைவர்களுக்கு இடையிலான உயர்மட்ட நம்பிக்கையையும் நட்புறவையும் அதன் முக்கியக் கூறாகக் குறிப்பிட்டார்.
ஏற்கெனவே இருந்த பொருளியல், வணிக உடன்பாடுகளைத் தாண்டி, புதிய துறைகளில் இரு நாடுகளும் ஒத்துழைப்பை உருவாக்கி, பேணி வருவதை அவர் மெச்சினார்.
தொடர்புடைய செய்திகள்
இந்தியாவைப் பற்றிய தமது தனிப்பட்ட கருத்துகளையும் பகிர்ந்துகொண்ட திரு கோ, தாம் இந்தியாவை மிகவும் நேசிப்பதாகச் சொன்னார்.
தமது அரசதந்திரப் பணிகளில் இந்தியா முக்கிய அங்கம் வகித்ததாக அவர் குறிப்பிட்டார்.
இரு நாடுகளுக்கும் சிக்கல் இல்லா நடப்புறவு இருந்தாலும் சில தருணங்களில் மனக்கசப்புகள் ஏற்பட்டுள்ளதையும் அவர் குறிப்பிடத் தவறவில்லை. எடுத்துக்காட்டாக, முழுமையான வட்டாரப் பொருளியல் பங்காளித்துவத்தில் இந்தியா கையெழுத்திட மறுத்ததை அவர் சுட்டினார்.
நிலைத்தன்மைமிக்க எதிர்காலத்திற்கு சிங்கப்பூரும் இந்தியாவும் இணைந்து பணியாற்றுவதை பற்றிக் கலந்துரையாடுவதே இந்த நிகழ்ச்சியின் நோக்கம் என்று வரவேற்புரை ஆற்றிய தெற்காசிய கல்விக் கழகத்தின் இயக்குநர் இணைப் பேராசிரியர் இக்பால் எஸ் செவியா தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய சிங்கப்பூருக்கான இந்தியத் தூதர் ஷில்பாக் அம்புலே, பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள் போட்டி போட்டுக்கொண்டு பல நாடுகளுடன் பங்காளித்துவத்தை மேம்படுத்த உத்வேகம் கொண்டுள்ளனர் என்றார். சிங்கப்பூருக்கு வருகை புரிந்த முதல்வர்களையும் அவர் பட்டியலிட்டார்.
நிகழ்ச்சியில் பல அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் உரையாற்றினர். இரு நாட்டுப் பங்காளித்துவத்தின் எதிர்காலம் குறித்தும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்துடன் இயங்கும் சூழலில் இருநாட்டு உறவுகள் குறித்தும் கலந்துரையாடலில் பேசப்பட்டது.
பகுதி மின்கடத்தி, நிதித் தொழில்நுட்பம், விண்வெளி, செயற்கை நுண்ணறிவு ஆகிய நான்கு துறைகள் கலந்துரையாடலில் முக்கிய அங்கம் வகித்தன.

