இந்தியச் சமூகத்திற்குப் பக்கபலமாக பிரதமர் லீ

இருபது ஆண்டுகளாக சிங்கப்பூர்ப் பிரதமராக இருந்துவரும் திரு லீ சியன் லூங், 2024 மே 15ஆம் தேதியன்று அப்பொறுப்பை துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங்கிடம் ஒப்படைக்கவுள்ளார். தம்முடைய பதவிக்காலத்தின்போது திரு லீ, இந்தியச் சமூகத்திற்குப் பேராதரவாக, பெருந்துணையாக விளங்கி வந்துள்ளது குறித்தும் அவரது நிர்வாகத் திறன், தலைமைத்துவம் குறித்தும் இளையோர் முதல் பெரியோர்வரை பலரும் தங்கள் கருத்துகளைத் தமிழ் முரசிடம் பகிர்ந்துகொண்டனர்.

டாக்டர் எஸ். வாசு, சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் ஓய்வுபெற்ற கௌரவப் பேராசிரியர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் (1984-2001)

பிரதமர் லீயால் இந்திய சமூகத்தினரை நன்கு சென்றடைய முடிந்தது. அவர் நாடாளுமன்ற உறுப்பினராக 40 ஆண்டுகளாக இந்தியர்களின் கோரிக்கைகளுக்குச் செவிமடுத்துள்ளார். தீபாவளி உட்பட, நம் இந்திய விழாக்கள் அனைத்திலும் பங்குபெற்று, உறவுகளை வலுப்படுத்தியுள்ளார். சிண்டா தொடங்கப்பட்டதில் பிரதமர் லீக்கு முக்கியப் பங்குண்டு. சிண்டா நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்தார். சிண்டா மூலம் இந்திய மாணவர்களின் கற்றலுக்கும் குறைந்த வருமான இந்திய குடும்பங்களை உயர்த்தும் திட்டங்களுக்கும் ஆதரவு வழங்கினார். சிங்கப்பூருக்குக் குடிபெயர்ந்துள்ள புதிய இந்தியர்களை உள்ளூர் சமுதாயத்துடன் இணையவும் ஊக்கப்படுத்தினார். அங் மோ கியோ குழுத்தொகுதியில் இந்தியர் ஆதரவுக் குழுக்கள் தொடங்குவதற்கும் துணைபுரிந்தார். வெளிநாட்டு இந்தியச் சமூகங்கள் தொடர்பான நடவடிக்கைகளிலும் சிங்கப்பூர் இந்திய வர்த்தக, தொழிற்சபைக்கு ஆதரவளித்தார். திறன்மிக்க உள்ளூர் இந்தியர்கள் வெளிநாட்டில் தடம்பதிப்பதற்கும் உதவினார். பிரதமர் லீ தொலைநோக்குப் பார்வை உடையவர்; பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வுகாண்பவரும்கூட.

வெ. பாண்டியன், தலைவர், தமிழர் பேரவை

தம் தந்தையாரின் மரபைப் பிரதமர் லீ கட்டிக்காத்து வந்துள்ளது எனக்கு மகிழ்ச்சி தருகிறது. அவற்றில் ஒன்று, தமிழ்மொழிக்குத் தொடர்ந்து முக்கியத்துவம் அளிப்பதும் சிங்கப்பூரின் அதிகாரத்துவ மொழிகளுள் ஒன்றாகத் தமிழ் நீடிப்பதை உறுதிசெய்வதுமாகும். பிரதமராகத் திரு லீயின் ஆட்சிக்காலத்தில், ஒவ்வோர் ஆண்டும் தமிழ்மொழி விழாவிற்கு அரசாங்கத்திடமிருந்து அதிக நிதியாதரவு கிடைத்து வந்துள்ளது. வரும் ஆண்டுகளிலும் தமிழுக்கு அத்தகைய ஆதரவும் ஊக்குவிப்பும் கிடைக்கும் என நம்புகிறேன்.

டி. சந்துரு, தமிழ்மொழி கற்றல், வளர்ச்சிக் குழுவின் துணைத் தலைவர்

தமது பதவிக்காலம் முழுவதும் சவால்கள், வாய்ப்புகளுக்கு இடையே மிகத் திறமையாகச் சிங்கப்பூரை வழிநடத்தி உள்ளார் திரு லீ. கல்வியில், குறிப்பாகப் பாலர் கல்விக்கும் திறன் மேம்பாட்டிற்கும் அவர் மிகுந்த முக்கியத்துவம் அளித்தது என்னைப் பெரிதும் கவர்ந்துள்ளது. அறிவுசார்ப் பொருளியல், திறன்மிகு ஊழியரணிக்கு அடித்தளம் அமைக்கும் வகையில், அவரது ஆட்சிக்காலத்தில் கல்வியிலும் ஆய்வு, உருவாக்கத்திலும் சிங்கப்பூர் பெருமுதலீடு செய்து வருகிறது. கடந்த 2015ஆம் ஆண்டு அவர் தலைமையில் ஸ்பெயின், ஜெர்மனி நாடுகளுக்குச் சென்ற தொழில்துறை பேராளர் குழுவில் நானும் இடம்பெற்று இருந்தது மறக்க முடியாத அனுபவம்.

ப. திருநாவுக்கரசு, மக்கள் கழக நற்பணிப் பேரவையின் முன்னாள் தலைவர்

கடந்த 32 ஆண்டுகளாக, அடித்தள அமைப்புகளில் எனது ஈடுபாட்டின் மூலமும் நற்பணிப் பேரவைத் தலைவர் என்ற வகையிலும் பிரதமர் லீ சியன் லூங்கின் தலைமைத்துவத்தை நேரடியாகக் கண்டுள்ளேன். கடந்த 20 ஆண்டுகளாக அவரை நமது பிரதமராகப் பெற்றது சிங்கப்பூர் பெற்ற பெரும்பேறு. நான்காம் தலைமுறைத் தலைமைத்துவக் குழுவுடன் ஒரு மூத்த அமைச்சராக அவரது பங்களிப்புகளைக் காண ஆர்வமாக இருக்கிறேன்.

சு. மனோகரன், வளர்தமிழ் இயக்கத்தின் தலைவர்

பிரதமர் லீ சியன் லூங் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக வலுவான, நிலையான தலைமைத்துவத்தை வழங்கி வந்துள்ளார். பல்லினத்துவத்திற்குத் தொடர்ந்து முக்கியத்துவம் அளிக்கப்பட்டது; இருமொழிக் கொள்கை வலுப்படுத்தப்பட்டது. 2006ல் தொடங்கப்பட்ட தமிழ்மொழி கற்றல், வளர்ச்சிக் குழு, 2011ல் ஏற்படுத்தப்பட்ட லீ குவான் யூ இருமொழிக் கொள்கை நிதி ஆகியவற்றின் மூலம் தாய்மொழிகளுக்குக் கூடுதல் ஆதரவு வழங்கப்பட்டு வருகிறது.

ஆர். ராஜாராம், தலைவர், இந்திய மரபுடைமை நிலையம்

சிறுபான்மைச் சமூகத்தினரின்பால் திரு லீ சியன் லூங் காட்டிவரும் அன்பும் கடப்பாடும் அளவிடற்கரியது. இந்திய மரபுடைமை நிலையத்தைத் திறந்து வைத்து அவர் ஆற்றிய உரை, நம் சமூகத்தினரின்பால் அவர் கொண்டுள்ள அக்கறையையும் நமது வரலாறு, பண்பாட்டின்மீது அவர் கொண்டுள்ள ஆழ்ந்த புரிதலையும் பறைசாற்றுவதாக அமைந்தது.

ஆர். ராஜாராம், தலைவர், இந்திய மரபுடைமை நிலையம்

சிறுபான்மைச் சமூகத்தினரின்பால் திரு லீ சியன் லூங் காட்டிவரும் அன்பும் கடப்பாடும் அளவிடற்கரியது. இந்திய மரபுடைமை நிலையத்தைத் திறந்து வைத்து அவர் ஆற்றிய உரை, நம் சமூகத்தினரின்பால் அவர் கொண்டுள்ள அக்கறையையும் நமது வரலாறு, பண்பாட்டின்மீது அவர் கொண்டுள்ள ஆழ்ந்த புரிதலையும் பறைசாற்றுவதாக அமைந்தது.

கி. ராமமூர்த்தி, மக்கள் கழக நற்பணிப் பேரவையின் முன்னாள் தலைவர்

பிரதமர் லீ, உண்மையான மக்கள் தலைவர். அவரது தலைமைத்துவத்தின்கீழ் மக்கள் கழகத்தில் நான் சேவையாற்ற முடிந்ததில் மகிழ்ச்சி கொள்கிறேன். மக்களைச் சென்றடையும் எங்கள் முயற்சிகளுக்கும் நடவடிக்கைகளுக்கும் அவர் மிகுந்த ஆதரவளித்து வருகிறார்.

 ராஜ்குமார் சந்திரா, ‘லிஷா’ ஆலோசகர்

பிரதமர் லீ பல்லினத்துவ ஆதரவாளர். பல்வேறு இந்திய இனச் சமூகங்களையும் கொண்டாட்டங்களிலும் நடவடிக்கைகளிலும் பங்கேற்கச் செய்வதன்மூலம் ஒட்டுமொத்த இந்தியச் சமூகத்தையும் ‘லிஷா’விற்குள் கொண்டுவந்துள்ளோம். இதன்மூலம் இந்தியச் சமூகத்திற்குள்ளும் மற்ற இனத்தவருடனும் பிணைப்பும் ஒற்றுமையும் ஏற்பட்டு, தனித்துவச் சிங்கப்பூரை உருவாக்க முடிகிறது. தொடக்கத்திலிருந்தே பிரதமர் லீ இதற்கு ஊக்கமளித்து வருகிறார். தீபாவளி ஒளியூட்டின்போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை கோமள விலாஸ் உணவகத்திற்கு அழைத்து வந்து விருந்தளித்ததன்மூலம் சிங்கப்பூரின் லிட்டில் இந்தியாவை உலகறியச் செய்தார் திரு லீ. கொவிட்-19 தொற்றுப் பரவலின்போது, வாழப் பாதுகாப்பான இடமாகச் சிங்கப்பூரை வைத்திருந்ததற்கும் வழங்கிய ஆதரவிற்கும் இந்திய வணிகச் சமூகத்துடனும் மற்றக் குடியிருப்பாளர்களுடனும் இணைந்து பிரதமருக்கும் அவருடைய குழுவினருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.

அ. முஹம்மது பிலால், தலைவர், சிங்கப்பூர் இந்திய முஸ்லிம் பேரவை

மக்களின் தலைவர், மக்களின் தொண்டூழியர் என்ற நபிகள் நாயகத்தின் பொன்மொழிக்கேற்ப நம் பிரதமர் லீ சியன் லூங்கின் செயல்பாடுகள் அமைந்திருந்தன. குடியிருப்பாளர்களிடம் பேரன்போடு நடந்துகொள்வதால் சிறந்த தலைவருக்கான முன்மாதிரியாக அவரைப் பார்க்க முடிகிறது.

ரிஸ்வானா பேகம், இணைப் பேராசிரியர், சிங்கப்பூர்ச் சமூக அறிவியல் பல்கலைக்கழகம்

நம் பிரதமர் லீ சியன் லூங்கின் தலைமைத்துவம் சிங்கப்பூரில் ஏற்படுத்திய உருமாற்றத் தாக்கத்தை, ஒரு சமூகப் பணியாளராகவும் கல்வியாளராகவும், இருக்கும் நான் மிகவும் மெச்சுகிறேன். எளிதில் பாதிக்கப்பட்ட வாய்ப்புள்ளவர்களைக் கைதூக்கிவிட்டு, ஏற்றத்தாழ்வைக் குறைத்து, பொருளியல் சமநிலையை எட்டுவதில் பிரதமர் லீயின் தலைமைத்துவத்தின்கீழ் நாடு பெருவெற்றி கண்டுள்ளது. வளர்ச்சியால் கிட்டும் நன்மைகள் எல்லாருக்கும் கிட்ட வேண்டும் என்பதை உறுதிசெய்யும்போது அது வசதி குறைந்த மக்களிடம் பெருந்தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சிங்கப்பூரில் ஒருவர் எந்தப் பின்னணியிலிருந்து வந்தாலும் அவருக்குத் தரமான கல்வியும் வாய்ப்புகளும் கிடைத்து, அவர் தம் ஆற்றலை முழுமையாக எட்டலாம். பன்முகத்தன்மை கொண்ட சிங்கப்பூர் மக்கள்தொகையில் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்பதில் பிரதமரின் தலைமைத்துவத்திற்கு முக்கியப் பங்குண்டு.

ஜெயசுதா சமுத்திரன், அனைத்துலக வணிகச் சின்ன மேலாளர், கிளென்ஃபிடிச்

வேலைக்காக வெளிநாட்டிற்கு இடம்பெயர்வது அல்லது வேலை சார்ந்து வெளிநாடுகளுக்குச் செல்வது - எனக்குக் கிடைத்துவரும் இதுபோன்ற அனைத்துலக வாய்ப்புகளுக்குப் பிரதமர் லீயே காரணம் எனக் கூறுவேன். நன்கு கற்ற, தேர்ச்சிபெற்ற, பன்னாட்டு நிறுவனங்களை ஈர்க்கும் இடமாகச் சிங்கப்பூர் திகழ வேண்டும் என்ற தொலைநோக்கை அவர் கொண்டிருந்தார். அதுவே என்னைப் போன்ற இளம் சிங்கப்பூரர்கள் பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரியவும் எங்களுக்கு உலகளாவிய வாய்ப்புகள் கிடைக்கவும் வழிவகை செய்கிறது. புற்றுநோயிலிருந்து மீண்டு வந்தது உட்பட பலவும் அவரது மீள்திறனுக்குச் சான்று பகர்கின்றன.

செம்பியன் சோமசுந்தரம், விமானத் துறைப் பணியாளர்

பிரதமர் லீ சியன் லூங்கின் திறமையான தலைமைத்துவமும் தொலைநோக்குப் பார்வையும் சிங்கப்பூரில் பாதுகாப்பான சூழலை வளர்ப்பதில் முக்கியப் பங்காற்றியுள்ளன. அதுமட்டுமன்றி, பலதரப்பட்ட பண்பாட்டுப் பின்னணிகளைக் கொண்ட நம் மக்கள் நல்லிணக்கத்துடன் வாழ்வதன் முக்கியத்துவத்தை, நம் நாட்டின் முக்கியக் கொள்கைகளுள் ஒன்றாக அவர் நிலைநாட்டியதால்தான் நாம் ஒரு தாய் மக்களாய் ஒற்றுமையுடன் மகிழ்ச்சியாய் வாழ்கிறோம்.

நியமன நாடாளுமன்ற உறுப்பினருமான இணைப் பேராசிரியர் ரஸ்வானா பேகம்

சமூகப் பணியாளரும் கல்வியாளருமான நான், சிங்கப்பூரின் உருமாற்றமிகு தாக்கத்தை ஏற்படுத்திய பிரதமர் லீ சியன் லூங்கின் தலைமைத்துவத்தை ஆழமாகப் பாராட்டுகிறேன். 

திரு லீயின் தலைமைத்துவத்தின்கீழ் சிங்கப்பூர் பொருளியல் வளர்ச்சியை மேற்கொள்ளும் அதே நேரத்தில் சமூக ஏற்றத்தாழ்வைக் குறைத்து பலவீனமானோரை முன்னேற்றிவிடும் கடப்பாட்டைக் கொண்டுள்ளது. 

முன்னேற்றத்தில் எல்லோருக்கும் பங்கு இருப்பதை உறுதி செய்வது முன்னுரிமையாக மாற்றப்பட்டதால் வசதி குறைந்தோரின் வாழ்க்கையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. 

சமயம், மொழி கடந்து அனைவரையும் ஈடுபடுத்துவதில் பிரதமர் லீ கொண்டுள்ள கடப்பாடு, ஒற்றுமையான, நல்லிணக்கமிகு சமூகத்தை உருவாக்கியுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!