தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்திய மொழி வளம், மரபைக் கொண்டாடும் திரைப்பட விழா

1 mins read
31791a3a-78f5-46de-a87f-cac8e3dddb1c
இந்தியத் தகவல், ஒளிபரப்பு அமைச்சகம், சிங்கப்பூர் ஃபிலிம் சொசைட்டி, இந்திய வளர்ச்சிக் கழகம் ஆகிய அமைப்புகளின் ஆதரவுடன் திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. - படம்: சிங்கப்பூர் ஃபிலிம் சொசைட்டி இணையத்தளம்

சிங்கப்பூரில் தமிழ், தெலுங்கு, இந்தி, பெங்காலி உள்ளிட்ட ஏழு இந்திய மொழிகளில் அமைந்த 18 திரைப்படங்கள் திரையிடப்படும் ‘இந்தியத் திரைப்படத் திருவிழா’ நடைபெறுகிறது.

இந்தியத் தூதரகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இத்திருவிழா, ஜனவரி 24ஆம் தேதி தொடங்கி மார்ச் 2ஆம் தேதி வரை நடைபெறும். அதையொட்டி, சன்டெக் சிட்டி, ‘கோல்டன் வில்லேஜில்’ ஒவ்வொரு வாரயிறுதியும் மூன்று திரைப்படங்கள் திரையிடப்படும்.

சிங்கப்பூர்-இந்தியா இரு நாடுகளின் 60 ஆண்டுகால அரசதந்திர உறவைக் கொண்டாடும் வகையில் அமைந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் இந்தத் திரைப்பட விழாவும் ஒன்றாகும்.

புகழ்பெற்ற பெங்காலி இயக்குநரும் திரைக்கதை ஆசிரியருமான சத்யஜித் ரேயின் படைப்புகள் தொடங்கி, ஷோலே, ஆனந்த் உள்ளிட்ட காலம்தாண்டி நிற்கும் பல்வேறு படைப்புகள் இத்திருவிழாவில் இடம்பெறுகின்றன.

அத்துடன், அண்மையில் வெளிவந்து பெரும் வரவேற்பைப் பெற்ற விக்ரம், ஆர்ஆர்ஆர், காதல் த கோர் உள்ளிட்ட படங்களும் திரையிடப்பட உள்ளன.

இந்தியக் கலாசாரப் பன்முகத்தன்மை, மொழிகளின் வளமை, மொழிகள் கடந்த திரைப்பட நுணுக்கங்கள் உள்ளிட்ட பலவற்றைக் குறித்தும் சிங்கப்பூரர்கள் அறிந்துகொள்ளும் நோக்கில் இந்தத் திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து மொழியினரும் பார்த்து ரசிக்கும் நோக்கில் இவை ஆங்கில வசன வரிகளுடன் திரையிடப்படும்.

குறிப்புச் சொற்கள்