உள்துறைக் குழுவின் உத்தி நிலையத்தில் தொழில்நுட்பராகப் பணிபுரிந்தபோது பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிக் குண்டுகளின் எஞ்சிய உலோகத் துண்டுகளைத் திருடிய இந்திய ஆடவர் ஒருவர்க்குப் பத்து மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
கோவிந்தராஜன் அருணாசலம், 43, என்ற அந்த ஆடவர், 164 கிலோவிற்கும் அதிகமான தோட்டாக் கழிவை ஒன்பது பைகளில் நிரப்பி வைத்திருந்தார்.
அவற்றை விற்பதற்காக பெரியசாமி ராமையா, 28, ராஜேந்திரன் வீரக்குமார், 30, என்ற இந்தியர் இருவரை உதவிக்கு அழைத்தார்.
திருட்டுப் பொருளை விற்க உதவிய அந்த இருவர்க்கும் ஆளுக்கு ஆறு மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
திருட்டுக் குற்றச்சாட்டையும் பலவகைப்பட்ட குற்றங்கள் (பொது ஒழுங்கும் தொல்லையும்) சட்டத்தை மீறிய குற்றச்சாட்டையும் கோவிந்தராஜன் எதிர்நோக்கினார். அவற்றில் ஒன்றை அவர் ஒப்புக்கொண்டார்.
அவருக்கு வியாழக்கிழமை (ஜனவரி 29) தண்டனை விதிக்கப்பட்டபோது மற்றொரு குற்றச்சாட்டும் கவனத்தில் கொள்ளப்பட்டது.
கடந்த 2024 டிசம்பர் மாதம் மண்டாயிலுள்ள உள்துறைக் குழு தளத்தில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிக் குண்டுகளின் எஞ்சிய உலோகக் கழிவுகள் 40, 50 பைகளில் இருந்ததை கோவிந்தராஜன் கண்டார். அதன்பின், அவற்றைத் திருடி விற்கும் எண்ணம் அவருக்கு உதித்தது.
தமக்கு உதவியோரில் ஒருவர்க்கு அவர் 20-30 வெள்ளி கொடுத்ததாகவும் இன்னொருவர்க்கும் 50 வெள்ளிவரை கொடுத்ததாகவும் கூறப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
தமது திருட்டுச் செயலுக்காக கோவிந்தராஜன் 2025 ஜூலை 28ஆம் தேதி கைதுசெய்யப்பட்டார்.

