அண்டைவீட்டுப் பெண்ணை மானபங்கம் செய்த இந்தியருக்குச் சிறை

1 mins read
a3074c50-987a-4bd4-8892-f8b5fee6b786
அத்துமீறி அண்டை வீட்டிற்குள் நுழைந்த ஆடவர், படுக்கையறையில் உறங்கிக்கொண்டிருந்த பெண்ணைத் தகாத முறையில் தொட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. - மாதிரிப்படம்: பிக்சாபே

அண்டை வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, அங்கு உறங்கிக்கொண்டிருந்த பெண்ணை மானபங்கம் செய்த இந்திய ஆடவருக்குப் புதன்கிழமை (மார்ச் 5) ஏழு மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

இராக்கோடன் அபின்ராஜ் என்ற அந்த 26 வயது ஆடவர் தன்மீதான மானபங்கக் குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார்.

மேலும் ஐவருடன் சேர்ந்து கூட்டுரிமை வீட்டில் தங்கியிருந்த அபின்ராஜ், பலமுறை அந்த அண்டைவீட்டுப் பெண்ணை எதிர்பாராதவிதமாகச் சந்தித்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 2024 செப்டம்பர் 22ஆம் தேதி அதிகாலை 4.50 மணியளவில், சமையலறையை ஒட்டிய மாடிமுகப்பு வழியாக அவர் அண்டைவீட்டிற்குள் புகுந்தார். இருட்டாக இருந்ததால் தமது கைப்பேசி விளக்கின் துணையுடன் படுக்கையறைக்குள் நுழைந்தார்.

அங்கு, அந்த 36 வயதுப் பெண்ணும் அவருடைய கணவரும் உறங்கிக்கொண்டிருந்தனர். அப்போது, அபின்ராஜ் அப்பெண்ணின் உள்ளாடையைத் தொட்டதாகக் கூறப்பட்டது. வேற்றாள் யாரோ தம்மைத் தொடுவதை உணர்ந்த அப்பெண், கூச்சலிட்டுத் தம் கணவரை எழுப்பினார்.

அப்பெண்ணின் கணவர், அபின்ராஜுடன் வாக்குவாதம் செய்து, அவரை அங்கிருந்து வெளியேறச் சொன்னார். அச்சத்தில் அங்கேயே சிறுநீர் கழித்த அபின்ராஜ், காவல்துறையை அழைக்க வேண்டாம் என்றும் கெஞ்சினார்.

ஆனாலும், அப்பெண்ணின் கணவர் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தார். காவல்துறை வரும்வரை அபின்ராஜும் அங்கேயே இருந்தார்.

அத்துமீறி நுழைந்ததைக் காவல்துறையிடம் அவர் ஒத்துக்கொண்டார். ஆயினும், அப்பெண்ணைத் தான் தொடவில்லை என மறுத்த அவர், கைதவறி தனது கைப்பேசி அவர்மீது விழுந்துவிட்டது என்றும் பொய் சொன்னதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்