செல்ல மகனைத் துணிந்து இறைவனுக்கு அளிக்க முற்பட்ட நபி இப்ராஹிமின் தியாக உணர்வை ஈகைத் திருநாள் என்று அழைக்கப்படும் ஹஜ்ஜுப் பெருநாள் போற்றுகிறது.
ஜூன் 7ஆம் தேதி ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு, காலை வேளையில் இங்குள்ள 45 பள்ளிவாசல்கள் ஒன்றுக்கு மேற்பட்ட தொழுகைகளை நடத்தவுள்ளன.
இத்திருநாளை முன்னிட்டு இன்று (ஜூன் 6) பென்கூலன் பள்ளிவாசல்களில் சிறப்பு ஏற்பாடுகள் தொடங்குவதாக பள்ளிவாசலின் தலைவர் ஹாஜி மு.யூ. முஹம்மது ரஃபீக் தமிழ் முரசிடம் தெரிவித்தார்.
“பத்து நாள்களுக்கு நோன்பு வைப்பது வழமையாக உள்ளது. வெள்ளிக்கிழமையன்று பள்ளிவாசலில் நோன்புத் துறப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆண்களும் பெண்களும் இதில் பங்கேற்கலாம்,” என்று அவர் கூறினார்.
“இன்று இரவு முக்கியமான நாள். நம் பள்ளிவாசலில் இதற்கென நிகழ்ச்சி நடத்தப்படும். நோன்புத் துறப்புக்குப் பிந்திய தொழுகையை முடித்த பிறகு இந்நிகழ்ச்சி நடைபெறும். அது இஷா தொழுகை வரையிலும் நடைபெறும்,” என்று திரு ரஃபீக் கூறினார்.
“இஷா தொழுகைக்குப் பிறகு அன்பர்கள் வீடு திரும்பலாம். ஈகைத் திருநாளன்று காலை 6.30 மணிக்குப் ‘ஃபஜர்’ தொழுகை, காலை 7.30 மணிக்கு ‘தக்பீர்’ ஓதப்படும். காலை 8 மணிக்கு ஹஜ்ஜுப் பெருநாள் சிறப்புத் தொழுகை ஆகியவை நடைபெறும்,” என்றும் அவர் கூறினார்.
காலை வேளையில் மூன்று தொழுகைகளுக்கு ஏற்பாடு செய்யும் எட்டுப் பள்ளிவாசல்களில் 41 டன்லப் ஸ்திரீட்டிலுள்ள அப்துல் கஃபூர் பள்ளிவாசலும் ஒன்று.
வெள்ளிக்கிழமையன்று மூன்று அமர்வுகளை நடத்தவுள்ள அப்துல் கஃபூர் பள்ளிவாசல், நோன்புத் துறப்பை ஒட்டிய இரண்டாவது தொழுகையை இரவு 7.19 மணிக்கு நடத்தவுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
“காலை நேரத்தில் 7.20 மணி, 8.15 மணி, 9.15 மணி ஆகிய நேரங்களில் தொழுகை அமர்வுகள் நடத்தப்படும்,” என்று அந்தப் பள்ளிவாசலின் இமாம் ஷம்சுதீன் முஹம்மது இப்ராஹிம் தெரிவித்தார்.
அங்குலியா பள்ளிவாசலில் காலை 7.20 மணி, 8.35 மணி, 9.15 மணி என மூன்று நேரங்களில் தொழுகை அமர்வுகள் நடத்தப்படும் என்று அப்பள்ளிவாசல் தெரிவித்தது. மூன்றாவது அமர்வில் பிரசங்கம் தமிழில் நடத்தப்படும் என்றும் அதன் இமாம் ஃபாருக் அஹமது தெரிவித்தார்.