இந்தியக் கடற்படையின் முதல் பயிற்சிப் படையணி சிங்கப்பூரில் மேற்கொண்ட மூன்று நாள் துறைமுகப் பயணம் ஜனவரி 18ஆம் தேதி வெற்றிகரமாக நிறைவுபெற்றதாக சிங்கப்பூருக்கான இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.
இந்தியக் கடற்படைக் கப்பல்கள் ‘தீர்’, ’ஷார்துல்’, ‘சுஜாதா’, இந்தியக் கடலோரக் காவற்படைக் கப்பல் ‘சாரதி’ ஆகியவை ஜனவரி 15ஆம் தேதி சிங்கப்பூரை வந்தடைந்தன.
110வது ஒருங்கிணைந்த அதிகாரிகள் பயிற்சிக்கான நெடுந்தொலைவுப் பயிற்சி அமர்வின் ஒரு பகுதியாக இந்தத் துறைமுக நிறுத்தம் இடம்பெற்றது.
2026ஆம் ஆண்டை ஆசியான்-இந்தியா கடல்துறை ஒத்துழைப்பு ஆண்டாக இந்தியா கருதுவதால் இந்தியக் கப்பல்கள் சிங்கப்பூருக்கு வருவது முக்கிய நிகழ்வாகும் எனத் தூதரகம் குறிப்பிட்டது.
சிங்கப்பூருக்கான இந்தியத் தூதர் டாக்டர் ஷில்பாக் அம்புலே, கடலோடிகளுடனும் பயிற்சி அதிகாரிகளுடனும் உரையாடினார்.
அவரும் படையணியின் மூத்த அதிகாரியும் ஆயுதப்படையினர், அரசாங்கத்தினர் உள்ளிட்டோர்க்கு ‘ஐஎன்எஸ் தீர்’, ‘சிஜிஎஸ் சாரதி’ கப்பல்களில் விருந்தோம்பல் அளித்தனர்.
இந்தியக் கடற்படைவீரர்கள் சாங்கி கடற்படைத் தளத்துக்குச் சென்று சிங்கப்பூர்க் கடற்படையின் சேதக் கட்டுப்பாட்டுப் பயிற்சிக் கருவியை (Damage Control Trainer) கண்டனர் ; கடற்படை அருங்காட்சியகத்துக்கும் சாங்கி கடற்படைத் தளத்தின் தகவல் இணைப்பு நிலையத்துக்கும் சென்றனர்.
கிராஞ்சி போர் நினைவகத்தில், இரண்டாம் உலகப் போரில் உயிர்த் தியாகம் செய்த வீரர்களுக்கு இந்தியக் கடற்படையினர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
தொடர்புடைய செய்திகள்
இந்தியக் கடற்படையினர், சிங்கப்பூர்க் கடற்படையினருடனும் டிபிஎஸ் அனைத்துலகப் பள்ளி மாணவர்களுடனும் விளையாட்டுப் போட்டிகளிலும் பங்கேற்றனர். ஸ்ரீ நாராயண மிஷன் தாதிமை இல்லவாசிகளுக்கு அவர்கள் உணவளித்தும் உற்சாகமூட்டினர்.
இந்திய வம்சாவளியினரும் பள்ளி மாணவர்களும் கப்பலில் ஏறி கடற்படை வாழ்வைப் பற்றித் தெரிந்துகொண்டனர்
‘நமது தெம்பனிஸ் நடுவம்’, ‘குளோபல் இந்தியன் அனைத்துலகப் பள்ளி’ இரண்டிலும் இந்தியக் கடற்படை இசைக்குழு நிகழ்ச்சி படைத்தது.
இந்தியாவின் ‘கிழக்கு நோக்கிய பார்வை’ (Act East) கொள்கைக்கும், திறந்த, பாதுகாப்பான இந்தோ-பசிபிக் கடற்பரப்பை ஊக்குவிக்கும் இலக்குக்கும் இத்துறைமுக நிறுத்தம் இணங்குகிறது.

