சிங்கப்பூருக்கு புதன்கிழமை (செப்டம்பர் 4) பிற்பகல் வந்திறங்கிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை பிரதமர் லாரன்ஸ் வோங் வரவேற்று இரவு விருந்தளித்தார்.
இஸ்தானாவிலுள்ள ஸ்ரீ தெமாசெக் இல்லத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்ற பிரதமரும் நிதியமைச்சருமான லாரன்ஸ் வோங், அவருக்கு இஸ்தானா வளாகம் குறித்து விளக்கியதுடன் அவருடன் அளவளாவி மகிழ்ந்தார்.
பிரதமர் வோங், திரு மோடியை வரவேற்கும் புகைப்படங்களை தமது சமூக ஊடகப்பக்கங்களில் வெளியிட்டுள்ளார். வரவேற்பு குறித்த காணொளியும் இந்திய ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளது.
அதில், திரு மோடியை வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், உள்துறை, சட்ட அமைச்சர் கா. சண்முகம் உள்ளிட்டோரும் வரவேற்றதைக் காணமுடிந்தது. இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரும் உடனிருந்தார்.
திரு லாரன்ஸ் வோங்கின் அழைப்பை ஏற்று இந்தியப் பிரதமர் மோடி, செப்டம்பர் 4, 5 தேதிகளில் சிங்கப்பூருக்கு இருநாள் அதிகாரத்துவ வருகை மேற்கொண்டுள்ளதாக வெளியுறவு அமைச்சு வெளியிட்ட அறிக்கை குறிப்பிட்டது.
பிரதமர் மோடி சிங்கப்பூருக்கு வருவது இது ஐந்தாவது முறை. 2018ஆம் ஆண்டுக்குப் பிறகு அவர் சிங்கப்பூர் வருவது இதுவே முதல்முறை.
செப்டம்பர் 5ஆம் தேதி, திரு மோடிக்கு நாடாளுமன்றத்தில் அதிகாரத்துவ வரவேற்பு அளிக்கப்படும். அதன் பிறகு, அதிபர் தர்மன் சண்முகரத்னம், பிரதமர் வோங் இருவரையும் இந்தியப் பிரதமர் சந்தித்துப் பேசுவார்.
மூத்த அமைச்சர் லீ சியன் லூங் அளிக்கும் விருந்தில் கலந்துகொள்ளும் திரு மோடி, ஓய்வுபெற்ற கௌரவ மூத்த அமைச்சர் கோ சோக் டோங்கையும் சந்திப்பார்.
தொடர்புடைய செய்திகள்
மேலும், இங்குள்ள வர்த்தகத் தலைவர்களுக்காகச் சிங்கப்பூர் வர்த்தகக் கூட்டமைப்பு ஏற்பாடு செய்யும் வர்த்தக வட்டமேசைக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்பார். சிங்கப்பூரில் பகுதி மின்கடத்தித் துறை சார்ந்தோரிடம் அவர் கலந்துரையாடுவார்.
‘இந்தியா ரெடி’ திறனாளர் திட்டத்தின்கீழ் இந்தியாவில் உள்ளகப் பயிற்சி பெற்ற சிங்கப்பூர் மாணவர்களையும் சிங்கப்பூர் நிறுவனங்களில் உள்ளகப் பயிற்சி பெறும் ஒடிசா உலகத் திறன் நிலையத்தின் மாணவர்களையும் திரு மோடி சந்தித்துப் பேசுவார்.
திரு ஜெய்சங்கர், தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், அரசாங்க அதிகாரிகள் ஆகியோரும் இந்தியப் பிரதமருடன் சிங்கப்பூர் வந்துள்ளனர்.