அம்பானி குடும்பத்தாரைப் போல், முன்னணி இந்திய நிறுவனங்கள் பலவும் சிங்கப்பூரில் தங்களின் குடும்ப அலுவலகங்களை அமைத்து வருகின்றன.
அவர்கள் தங்களின் செல்வங்களைப் பாதுகாக்கவும் வளர்க்கவும் அவ்வாறு செய்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் ஆகப் பெரிய செல்வந்தரான அம்பானி குடும்பத்தார் 2022ஆம் ஆண்டு சிங்கப்பூரில் குடும்ப அலுவலகத்தை அமைத்தனர்.
அவர்களைத் தொடர்ந்து அதிக எண்ணிக்கையில் சிங்கப்பூரில் அலுவலகம் தொடங்கும் இந்தியச் செல்வந்தர்கள் பலர் அதிக வசதி இல்லாத குடும்பப் பின்னணியிலிருந்து வந்தவர்கள். அதனால் இனி தங்களின் செல்வங்களையும் அவற்றைப் பெருக்குவதற்குக் கைகொடுத்த கொள்கைகளையும் அடுத்த தலைமுறையினரிடம் சீராக ஒப்படைக்க அவர்கள் சிங்கப்பூரில் அலுவலகம் தொடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்கள் குடும்பங்களில் கருத்து வேறுபாடுகள் இல்லாமல் இருக்க பயனுள்ள வகையில் சொத்துகளைக் கவனித்துக்கொள்ளவும் அதுகுறித்து கலந்துபேசி முடிவெடுக்கவும் அவர்கள் சிங்கப்பூர் வருகின்றனர். அடுத்த 10 ஆண்டுகளில் இந்திய வம்சாவளியினரிடையே இருக்கும் சுமார் நான்கு டிரில்லியன் டாலர் (5.2 டிரில்லியன் வெள்ளி) மதிப்பிலான செல்வங்கள் ஒரு தலைமுறையைச் சேர்ந்தோரிடமிருந்து அடுத்த தலைமுறையினருக்கு ஒப்படைக்கப்படும் என கணிக்கப்பட்டுள்ளதாக டிபிஎஸ் வங்கி கூறுகிறது.
“இந்தியாவைச் சேர்ந்த பெருஞ்செல்வந்தர் குடும்பங்கள் வெளிநாடுகளில் அலுவலகம் அமைப்பதன் தொடர்பில் சிங்கப்பூரையே அதிகம் விரும்புகின்றனர். சிங்கப்பூரின் நிலையான அரசியல் சூழல் மற்றும் பொருளியல் நிலவரம், சாதகமான வர்த்தகச் சூழல், வரிக் கட்டமைப்பு ஆகியவை அதற்கான காரணங்கள்,” என்று டிபிஎஸ் வங்கியின் பயனீட்டாளர் வங்கி நடவடிக்கை மற்றும் செல்வ நிர்வாகப் பிரிவின் தலைவரான ஷீ சே கூன் கூறினார்.
சிங்கப்பூரின் விதிமுறைக் கட்டமைப்பு, நம்பகத்தன்மை, வெளிப்படையான போக்கு ஆகியவை இந்த விவகாரத்தில் சிங்கப்பூரைப் பலர் விரும்பும் இடமாக விளங்கச் செய்கிறது என்றார் ஏடி கேப்பிட்டல் (AT Capital) முதலீட்டு நிறுவனத்தைத் தொடங்கியவரும் குழுமத் தலைவருமான அரவிந்த் திக்கு.