மசெக புதுமுகங்களில் இந்தியர்கள் நிச்சயம் இடம்பெறுவர்: பிரதமர் வோங்

2 mins read
e7f80ce6-a3d5-4c5c-a406-6eae27b31544
பங்கேற்பாளர்களுடன் பிரதமர் லாரன்ஸ் வோங், மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரி, தமிழ் முரசு குழுவினர் உள்ளிட்டோர். - படம்: த.கவி
multi-img1 of 3

எதிர்வரும் பொதுத் தேர்தலில் மக்கள் செயல் கட்சியின் (மசெக) புதுமுக வேட்பாளர்களில் இந்தியச் சமூகத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் நிச்சயமாக இருப்பார்கள் எனப் பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.

2020 தேர்தலில் மசெக அறிமுகம் செய்திருந்த 27 புதுமுகங்களில் இந்திய வேட்பாளர்கள் எவரும் இடம்பெறவில்லை. நாடாளுமன்றத்தில் இந்திய இனத்தவர்களின் பிரதிநிதித்துவம் குறித்த கேள்விகளை இது எழுப்பி இருந்தது.

வரும் தேர்தலில் மசெக புதுமுகங்கள் களமிறக்கப்படுவர் எனப் பிரதமர் வோங் தெரிவித்தாலும், அவர்கள் குறித்த மேல்விவரங்களையோ பெயர்களையோ அவர் வழங்கவில்லை.

அரசியல் தலைவர்களுடன் அண்மையில் காணப்பட்ட புதுமுகங்களில் ஒருங்கிணைந்த பராமரிப்பு அமைப்பின் (ஏஐசி) தலைமை நிர்வாகி தினேஷ் வாசு தாசும் ஒருவர்.

சட்ட நிறுவனமான ‘டிட்டோ ஐசேக் அண்ட் கோ’வின் நிர்வாகப் பங்காளியான திரு கவால் பால் சிங், தோ பாயோ வெஸ்ட் சந்தை, உணவு நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 13) போக்குவரத்து அமைச்சர் சீ ஹொங் டாட்டுடன் காணப்பட்டார். குடியிருப்பாளர்களுடன் அவர் பேசினார்.

எதிர்க்கட்சி வசம் உள்ள அல்ஜுனிட் குழுத்தொகுதியில் களமிறங்கும் மசெக வேட்பாளர் குழுவில் இடம்பெறும் புதுமுகங்களில் திரு ஜெகதீஸ்வரன் ராஜுவும் ஒருவர். பதிமூன்று ஆண்டுகளாக அவர் தொழிற்சங்கவாதியாக உள்ளார்.

பிரதமர் வோங், அண்மையில் எட்டு மசெக புதுமுகங்களைக் காணொளி ஒன்றில் அறிமுகம் செய்தார். அவர்களில் முடவியல் அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் ஹமீது ரசாக்கும் ஒருவர். புதிதாக அமைக்கப்பட்டுள்ள வெஸ்ட் கோஸ்ட்-ஜூரோங் வெஸ்ட் குழுத்தொகுதியில் அவர் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் முரசு ஞாயிற்றுக்கிழமை நடத்திய ‘வாங்க இப்போ பேசலாம்’ கலந்துரையாடலில் பேசிய பிரதமர் வோங், தனித்தன்மைவாய்ந்த சிங்கப்பூரர் இந்தியர் அடையாளத்தைத் தொடர்ந்து கட்டியெழுப்புமாறு பங்கேற்பாளர்களை ஊக்குவித்தார்.

குறிப்புச் சொற்கள்