சிங்கப்பூர்த் தேசியப் பலகலைக்கழகத்தின் தெற்காசியக் ஆய்வுக் கழகமும் கிழக்காசியக் ஆய்வுக் கழகமும் இந்தியா-சீனா பற்றி இணைந்து வழங்கும் கருத்தரங்குத் தொடரின் இரண்டாம் கருத்தரங்கு ஜூலை 25ஆம் தேதி பிற்பகல் லீ குவான் யூ பொதுக் கொள்கைப் பள்ளியில் நடைபெற்றது.
இத்தொடரின் முதல் கருத்தரங்கு சென்ற ஆண்டு நவம்பர் 14ஆம் தேதி நடைபெற்றது.
இரண்டாம் கருத்தரங்கு, இந்தியா, சீனாவின் பொருளாதாரப் பயணங்களை ஒப்பிட்டு, ஒரு நாடு மற்றொன்றிலிருந்து என்னென்ன கற்றுக்கொள்ளலாம், எதிர்காலத்துக்கு எப்படித் தயாராகலாம் போன்ற கேள்விகளை ஆராய்ந்தது.
“மாறிவரும் உலகச் சூழலில் இந்தியா, சீனா இரண்டும் வரி விதிப்பு பேச்சுவார்த்தைச் சவால்களைக் கையாண்டுவருகின்றன. அண்மையில் இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் டாக்டர் ஜெய்சங்கர் சீனாவுக்குச் சென்றார். 2020ல் நடந்த கல்வான் விரிசலுக்குப் பிறகு அவர் முதன்முறையாகச் சீனாவுக்குச் செல்வதால், சீனா-இந்தியா உறவுகள் மேம்படுமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன,” எனக் கருத்தரங்கைத் தொடங்கினார் தெற்காசிய ஆய்வுக் கழக இயக்குநர் இணைப் பேராசிரியர் இக்பால் சிங்.
“எனினும், இரு நாடுகளுக்குமிடையே சிக்கல்கள் உள்ளன. வர்த்தக சமநிலையின்மை, எல்லை விரிசல்கள், தண்ணீர் சச்சரவுகள், உரம் விற்பனைத் தடை போன்ற பிரச்சினைகள் நீடிக்கின்றன,” என்றார் அவர்.
“ஐக்கிய நாடுகளின் எதிர்பார்ப்புப்படி 2050க்குள் இந்தியாவின் மக்கள்தொகை 1.668 பில்லியனை எட்டவுள்ளது; அவர்களில் பெரும்பாலோர் 40 வயதுக்குக் குறைவாக இருப்பர். உற்பத்தி மையமாகச் சீனாவின் வளர்ச்சிக்கும் அதன் இளம் மக்கள்தொகைப் பங்காற்றியது. ஆனால் சீனாவின் சமுதாயம் மூப்படைந்துவருகிறது,” என்றும் அவர் கூறினார்.
இந்தியாவின் பொருளியல் வளர்ச்சி 1991 முதல் 6-7%ஆக இருந்துள்ளதைச் சுட்டினார் அனைத்துலக பண நிதியத்தின் இந்தியாவுக்கான மூத்தப் பிரதிநிதி டாக்டர் ரனில் சல்காடோ.
“பொருள், சேவை வரிமூலம் மாநிலங்களுக்கிடையேயான வர்த்தகத் தடைகள் அகற்றப்பட்டன; பணவீக்கம் குறிவைத்தல் (inflation targeting), திவால் சட்டம் போன்றவை வளர்ச்சிக்கு உதவியுள்ளன,” என்றார் அவர்.
தொடர்புடைய செய்திகள்
எனினும், இந்தியாவின் வளர்ச்சி, முதலீடு, திறன்கள் அதிகம் தேவைப்படும் துறைகளான ரசாயனம், மருந்து போன்ற துறைகளையே சார்ந்திருக்கின்றது என்றார் அவர்.
“இன்று நம் வேலைகளில் பெரும்பாலானவை விவசாயத்திலேயே கிராமப்புறங்களிலேயே உள்ளன. இந்தியாவில் வேலைவாய்ப்புகள், ஊழியரணிப் பங்கேற்பு அதிகரித்துவருகின்றன. ஆனால் இந்தியா சிறந்த வேலைகளை உருவாக்குகின்றதா? உற்பத்தி, சேவைத் துறைகளில் ஊழியர் உற்பத்தித்திறன் சிறப்பாக உள்ளது. ஆனால் பெரும்பாலோர் பணியாற்றும் விவசாயத்தில் உற்பத்தித்திறன் குறைவே,” என்றார்.
கொவிட்-19க்குப் பிறகு, இந்தியாவில் தனியார் முதலீடு தொடர்ந்து பலவீனமாக உள்ளதாகவும் அவர் கூறினார்.
இச்சவால்களைச் சமாளிக்க, மத்திய அரசாங்கத்துடன் மாநில அரசாங்கங்களும் மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும்; நாட்டின் கடனைக் குறைக்க வேண்டும்; இருதரப்பு அல்லது வட்டார ஒப்பந்தங்கள்மூலம் சுங்கவரி தொடர்பான, தொடர்பற்ற தடைகளை இந்தியா குறைக்க வேண்டும் என்றார் டாக்டர் ரனில்.
யுபிஎஸ் வங்கியின் தலைமை சீனப் பொருளியல் நிபுணரும் ஆசிய பொருளாதார ஆய்வுத் தலைவருமான டாக்டர் டாவ் வாங், ‘சீனாவின் உற்பத்தி வளர்ச்சி: இந்தியாவுக்கான படிப்பினைகள்’ பற்றிப் பேசினார்.
“25 ஆண்டுகளுக்கு முன்பு சீனா வளர்ச்சியடைந்தபோது உதவிய சூழலில் பல அம்சங்களும் தற்போது இந்தியாவுக்கு உள்ளது. இந்தியாவின் இன்றைய ஊழியரணியின் வயது, கல்வி நிலை, சீனா உலக வர்த்தக மையத்தில் 2001ல் சேர்ந்தபோது இருந்த நிலைகளைப் போன்று உள்ளன,” என்றார் டாக்டர் வாங்.
“இந்தியா ஊழியரணி, நில விதிமுறைகளை மறுபார்வையிடவேண்டும். இந்தியா தொடர்ந்து உள்கட்டமைப்புகளில் முதலீடு, எரிசக்தி போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டும்,” என்றார் அவர்.
“ஆண்டுக்கு 15 மில்லியன் பேரை ஊழியரணியைச் சேர்க்கும் நாடாக இந்தியா, அவர்களிடத்தில் எத்தகைய திறன்களை வளர்ப்பது எனச் சிந்திக்க வேண்டும். இதுகுறித்து சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுடன் இணைமுயற்சிகள் நடைபெற்றுவருகின்றன.
“இந்தியா தன் எண்ணெய்க் கொள்முதல் பற்றி ஆராயவேண்டும். ரஷியா, அமெரிக்கா, ஐரோப்பிய யுனியன் இடையே நடப்பது இந்தியாவைப் பாதிக்கின்றன. பருவநிலைப் பிரச்சினைகளை இந்தியா சந்தித்துவருகிறது. கரிம வெளியீட்டுகளைக் குறைப்பது முக்கியம்; ஆனாலும் இதனால் மற்ற விளைவுகள் ஏற்படும்.
“இந்தியா நெடுங்காலமாக எண்கள் அளவிலேயே அதன் பொருளாதாரத்தைப் பார்வையிட்டுள்ளது. மற்றவற்றையும் கருத்தில் கொண்டால்தான் அடுத்த 20 ஆண்டுகளில் அது வளர்ச்சியடைந்த பொருளாதாரம் ஆகமுடியும்,” என்றார் தெற்காசிய ஆய்வுக் கழகத்தின் மூத்த ஆய்வாளரும் வர்த்தக, பொருளாதார ஆராய்ச்சித் தலைவருமான டாக்டர் அமிட்டேன்டு பாலிட், தன் கருத்தையும் பகிர்ந்தார்.
முழு கருத்தரங்கையும் https://www.facebook.com/instituteofsouthasianstudies/videos/1326338896168168 இணையத்தளத்தில் காணலாம்.