இரு ஆடவர்களுக்கு இடையே பணப் பரிவர்த்தனை இடம்பெற்றதைத் தொடர்ந்து, ஒருவர் மற்றொருவரைத் தாக்குவதைக் காட்டும் காணொளியுடன் தொடர்புடையவர்மீது ஆயுதம் வைத்திருந்ததாக வியாழக்கிழமை (மே 8) நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.
செங்காங் வெஸ்ட் வே வீட்டில் மே 6 இரவு 7.45 மணிக்கும் 8 மணிக்கும் இடையே கோடரியை வைத்திருந்ததாக முகம்மது அமிருல் ஹுஸ்னி ஸக்காரியா, 31, மீது குற்றஞ்சாப்பட்டது.
சிங்கப்பூரரான அவரை மத்திய காவல்துறைப் பிரிவில் விசாரணைக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. அவரது வழக்கு மே 15ஆம் தேதி நீதிமன்றத்தில் மீண்டும் விசாரனைக்கு வரும்.
சமூக ஊடகங்களில் வலம் வந்த காணொளியில், மஞ்சள் நிற டி-சட்டை அணிந்திருக்கும் ஆடவர், அடையாளம் தெரியாத பொருள் இருந்த பிளாஸ்டிக் பையை முழுக்கை டி-சட்டை அணிந்திருக்கும் மற்றோர் ஆடவரிடம் கொடுப்பது தெரிந்தது.
இருவருக்கும் இடையே பணம் கைமாறியவுடன், முழுக்கை டி-சட்டையில் இருக்கும் ஆடவர், மற்றொருவரை திடீரென குத்துகிறார். முகத்தில் ரத்தக் காயங்களுடன் அவர் கீழே விழும் வரை தாக்குதல் தொடர்கிறது.
இச்சம்பவத்தைக் காட்டும் காணொளி சமூக ஊடகத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. இதுகுறித்து மே 6ஆம் தேதி தனக்குத் தகவல் கிடைத்ததாகக் காவல்துறை தெரிவித்தது.
இந்நிலையில், மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு (சிஎன்பி), சிங்கப்பூர் சிறைத்துறையுடன் சேர்ந்து பாதிக்கப்பட்டவரையும் அவரைத் தாக்கியதாகக் கூறப்படுபவரையும் இச்சம்பவத்தைப் படமெடுத்ததாக நம்பப்படும் 35 வயது மாதையும் அதிகாரிகள் அடையாளம் கண்டதாக காவல்துறைப் பேச்சாளர் தெரிவித்தார்.
பின்னர் செங்காங் வெஸ்ட் வேயில் அதிரடிச் சோதனை நடத்திய காவல்துறையும் சிஎன்பி அதிகாரிகளும், தாக்கியதாகக் கூறப்படுபவரையும் அந்த மாதையும் கைதுசெய்தனர்.
தொடர்புடைய செய்திகள்
இதில் $3,000க்குமேல் ரொக்கம், மூன்று கைப்பேசிகள், இரண்டு வெட்டுக்கத்திகள், ஒரு கோடரி, ஒரு பேஸ்பால் மட்டை, மின்சிகரெட்டுடன் தொடர்புடைய 450க்கும் அதிகமான பொருள்கள் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் அந்த மாதுமீது குற்றஞ்சாட்டப்படவில்லை.

