இந்தோனீசியா: ஆன அனைத்தையும் செய்தும் தீயைக் கட்டுப்படுத்த இயலாமல் போராட்டம்

இந்தோனீசியா: ஆன அனைத்தையும் செய்தும் தீயைக் கட்டுப்படுத்த இயலாமல் போராட்டம்

படம்: ஏஎஃப்பி

21 Sep 2026 - 8:56 pm

1 mins read

பொந்தியானாக்: நாட்டின் அடர்ந்த வனப் பகுதிகளில் வேகமாகப் பரவி வரும் காட்டுத் தீயைக் கட்டுப்படுத்த ஆன அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படுவதாக இந்தோனீசிய அரசாங்கத்தின் மூத்த அதிகாரி ஒருவர் திங்கட்கிழமை (செப்டம்பர் 21) கூறியுள்ளார்.

இருப்பினும், தீயணைப்பு விமானங்களும் ஆயிரக்கணக்கான ஊழியர்களும் தீயைக் கட்டுக்குள் கொண்டுவரத் தொடர்ந்து போராடி வருவதாக அவர் குறிப்பிட்டார்.

போர்னியோ, சுமத்ரா தீவுகளில் வாரக் கணக்கில் எரிந்து வரும் தீயினால் ஏற்பட்ட புகைமூட்டம், நாட்டின் பல்வேறு பகுதிகளையும் அண்டை நாடுகளான மலேசியா, சிங்கப்பூர் ஆகியவற்றையும் கடுமையாகப் பாதித்துள்ளது.

இதனைத் தணிக்கும் நோக்கில், ஆகஸ்ட் மாதம் முதல் 64 விமானங்களும் தீயணைப்புப் பணியாளர்கள் 54,000 பேரும் களமிறக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைச் செயலாளர் டெடி இந்திர விஜயா தெரிவித்தார். பொதுமக்களைக் காட்டுத் தீயிலிருந்தும் பல்வேறு நிலப்பகுதிகளைப் பாதிக்கும் தீயிலிருந்தும் பாதுகாப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

தீப்பற்றிய நிலப்பகுதியின் பரப்பளவு அதிகமாக இருப்பதும் போதுமான நீர் ஆதாரங்கள் இல்லாததும் தீயணைப்புப் படையினருக்குப் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.

2026ஆம் ஆண்டின் வறட்சி, மோசமான எல் நினோ பருவநிலை காரணமாகத் தீயின் வீரியம் வழக்கத்தைவிட அதிகமாக உள்ளது. அரசாங்கத்தின் அலட்சியப் போக்கைக் கண்டித்து உள்ளூர் மக்கள் வழக்கு தொடுத்துள்ளனர். இந்நிலையில், தீயணைப்புப் பணிகளுக்கு உதவ ஜப்பானியப் படைகள் வந்து சேர்ந்துள்ளன. மலேசியாவின் உதவியைப் பெறவும் இந்தோனீசியா தயாராக இருப்பதாக அதிபர் பிரபோவோ சுபியோந்தோ கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்