சிங்கப்பூருக்குக் குழாய்வழியாக விநியோகிக்கப்படும் எரிவாயுவைக் கடந்த நவம்பர் 12ஆம் தேதி முதல் இந்தோனீசியா முழு அளவில் மீண்டும் வழங்கத் தொடங்கிவிட்டதாக எரிசக்தி, வர்த்தக, தொழில்துறை அமைச்சு வெள்ளிக்கிழமை (நவம்பர் 20) தெரிவித்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி, இயற்கை எரிவாயுவின் விநியோக அளவு குறைக்கப்பட்டதற்கான எவ்வித அறிவிப்பும் கிடைக்கவில்லை எனவும் அமைச்சின் பேச்சாளர் உறுதிப்படுத்தினார்.
உள்நாட்டுத் தேவைகளைக் காரணம்காட்டி சிங்கப்பூருக்குக் குழாய்களில் விநியோகிக்கப்பட்ட எரிவாயுவின் அளவை இந்தோனீசியா அக்டோபர் 24ஆம் தேதி குறைத்துக்கொண்டது.
நட்டுனா, சுமத்ரா ஆகிய எரிவாயுக் கிடங்குகளில் இருந்து இரு குழாய்களில் சிங்கப்பூருக்கு வழங்கப்பட்ட இயற்கை எரிவாயுவின் அளவு குறைக்கப்படும் என்று இந்தோனீசிய அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தார். அப்போது, 31 பில்லியன் பிரிட்டிஷ் வெப்பக் குறியீட்டு (பிபிடியுடி) அளவு எரிவாயு குறைக்கப்படும் என்று அவர் மதிப்பிட்டிருந்தார்.
அவ்வாறு குறைக்கப்பட்ட எரிவாயு நேரடியாக பாத்தாம், பிந்தான், சுமத்ரா ஆகிய பகுதிகளில் தேவையான மின்சார உற்பத்திக்குப் பயன்படுத்தப்படும் என்று எஸ்கேகே மிகாஸ் என்ற அந்நாட்டு எண்ணெய், எரிவாயு ஒழுங்குமுறை அமைப்பு தெரிவித்தது.
சிங்கப்பூரின் எரிபொருள் ஒழுங்குமுறை அமைப்பான எரிசக்தி சந்தை ஆணையம் குடியரசின் இயற்கை எரிவாயு இறக்குமதியாளர்கள் வழங்கிய தரவுகளின்படி, இந்தோனீசியா தனது விநியோகத்தில் குறைத்துக்கொண்ட எரிவாயுவின் மொத்த அளவு 17 பிபிடியுடி என்று தெரிவித்தது.
அந்த நடவடிக்கை இந்தோனீசியாவால் 18 நாள்களாக மேற்கொள்ளப்பட்டது எனவும் அது கூறியது.
சிங்கப்பூருக்கு ஒரு நாளில் மொத்தம் 1,000 பிபிடியுடி அளவு இயற்கை எரிவாயு தேவை எனவும் இந்தோனீசியா இதுவரை குறைத்துக்கொண்ட எரிவாயுவின் அளவு அதில் 2 விழுக்காடு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மைய இந்தோனீசிய எரிவாயு விநியோகக் கட்டுப்பாட்டினால் தெமாசெக் அமைப்பால் முழுமையாக நிர்வகிக்கப்படும் ‘கேஸ் சப்ளை’ எனப்படும் உள்ளூர் நிறுவனம் பாதிக்கப்பட்டது. சுமத்ராவில் இயங்கும் எரிவாயு வயல்களில் இருந்து அது இறக்குமதி செய்கிறது.
பதினெட்டு நாள்கள் குறைக்கப்பட்ட எரிவாயுவால் நிறுவனத்துக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்த தகவல்கள் இதுவரை கிடைக்கவில்லை. தற்காலிக குறைபாட்டினால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுடன் தொடர்பில் உள்ளதாக அது அப்போது தெரிவித்தது.
சிங்கப்பூருடன் ஏற்படுத்தப்பட்டுள்ள ஒப்பந்தப்படி, இந்தோனீசியா நடந்துகொண்டுள்ளது எனவும் குறைந்தபட்ச அளவை விநியோகங்கள் உறுதிசெய்தன என்றும் அந்நாட்டு எரிபொருள், கனிமவளங்கள் அமைச்சர் பஹ்லில் லஹடாலியா அக்டோபர் 29ஆம் தேதி தெரிவித்திருந்தார்.
இந்தோனீசியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான எரிவாயு விநியோக ஒப்பந்தம் 2028ஆம் ஆண்டு இறுதிவரை செயல்பாட்டில் இருக்கும்.
