சிங்கப்பூரை நோக்கிச் சென்றுகொண்டிருந்த விமானத்தில் பயணம் செய்த இந்தோனீசியர் ஒருவர், பெண் சிப்பந்தியிடம் தனது பிறப்புறுப்பைக் காட்டியதற்காக கைது செய்யப்பட்டார்.
விரைவில் அவர்மீது நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜனவரி 23ஆம் தேதி நடந்த சம்பவத்தில் 23 வயதான சந்தேக நபர் தனது இருக்கையில் அமர்ந்திருந்தபோது தனது பேண்ட் ஜிப்பை அவிழ்த்து பிறப்புறுப்பைக் காட்டியதாக தங்களுக்குத் தகவல் கிடைத்தது என்று சனிக்கிழமை (மார்ச் 8) வெளியிட்ட அறிக்கையில் காவல்துறை தெரிவித்தது.
விசாரணையில் அந்த நபர், ஒரு போர்வையால் தன்னை மூடிக்கொண்டு, தனது கைப்பேசியை காணொளிப் பதிவு முறையில் வைத்துக் கொண்டு, பின்னர் விமானப் பணிப்பெண் ஒருவர் தனக்கு உணவு வழங்கியபோது ஆணுறுப்பைக் காட்டியதாகக் கூறப்படுகிறது.
அந்தப் பெண் சிப்பந்தி உடனே அங்கிருந்து விலகி தனது மேலாளரிடம் புகார் அளித்தார்.
இதையடுத்து, சாங்கி விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியதும் அவரை காவல்துறையினர் கைது செய்து கைப்பேசியைப் பறிமுதல் செய்தனர்.
மார்ச் 12ஆம் தேதி அவர் மீது நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்படும் எனத் தெரிகிறது.

