‘இணை’ குழு, சமயக் குழுக்களுக்கு இடையிலான ஒத்துழைப்பு; சமூக பொருளியல் வாய்ப்புகள்; கலாசாரம், விளையாட்டு; மொழி, பாரம்பரியம் ஆகிய நான்கு துறைகளிலும் செயல்பாடுகளை ஊக்குவிக்கும்.
வரவுசெலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டு விவாதத்தில் ‘இணை’ குழு குறித்த அறிவிப்புகள் வந்ததையடுத்து, குழுவின் முதல் கருத்தரங்கு சனிக்கிழமை (ஏப்ரல் 25) நடைபெற்றது. அதில், இதற்கு முன்னர் நடைபெற்ற ஈடுபாட்டு அங்கங்களில் இடம்பெற்ற கருத்துகள் குறித்தும், முக்கியத் தரவுகள் குறித்தும் பேசினார் கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சின் சமூக உத்திகள், நுண்ணறிவுப் பிரிவின் மூத்த துணை இயக்குநர் லோகப்பிரியன் ரங்கநாதன்.
கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் இவ்வாண்டு ஜனவரி மாதம் வரை நடைபெற்ற கலந்துரையாடல் அங்கங்களில் சமூகத்தில் கவனம் செலுத்தப்பட வேண்டிய அம்சங்கள் குறித்த கருத்துகளைச் சேகரித்து, ஒருங்கிணைத்த கண்ணோட்டத்தை உருவாக்கியதுடன், சமூகத்தால் வழிநடத்தப்படும் தீர்வுகளைக் கண்டறிந்துள்ளதாகவும் அவர் சொன்னார்.
இதன்மூலம், வலுவான, ஒன்றிணைந்த இந்தியச் சமூத்தை உருவாக்குதல், சமூகச் சவால்கள் ஆகியவை குறித்த புரிதல் ஏற்பட்டதையும் அவர் சுட்டினார். தொடர்ந்து, செயல்பாட்டு வாய்ப்புகளை அங்கீகரித்து, தங்களின் பங்களிப்பையும் உறுதிசெய்யப் பலர் ஆர்வம் காட்டியதையும் சுட்டிக்காட்டினார் திரு லோகா.
சிறைசென்று மீண்டோர், குடும்பங்களுக்கு மறுவாழ்வு ஆதரவு, வேலைவாய்ப்பு ஆதரவுகளுக்கான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படுவதைக் குறிப்பிட்ட அவர், லிட்டில் இந்தியா பகுதியை மையமாகக் கொண்டு, இந்திய மரபுடைமை நிலையத்தின் உதவியுடன் கலை, கலாசாரத்தைப் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்குக் கொண்டுசெல்ல நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.
சமூகத்தில் உள்ள பல்வேறு வளங்களை ஒருங்கிணைத்து, தலைமுறைகள் கடந்த ஒன்றிணைவை ஊக்குவிக்கவும் ‘இணை’ ஓர் ஊக்கியாகச் செயல்படும் என்று அவர் தெரிவித்தார். பல்வேறு சமூக அமைப்புகள் தனித்தனியாகச் செய்து வரும் பணிகளை ஒரே கூரையின்கீழ் ஒருங்கிணைத்து, வளங்களைத் தடையின்றி மக்களுக்குக் கொண்டுசேர்ப்பதற்காக மூத்த தலைவர்கள், இளையர்களைக் கொண்ட ‘வளக் குழு’ உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும், இவற்றை நடைமுறைப்படுத்தும் வழிகள் குறித்துக் கலந்துரையாடப்பட்டதையும் அவர் சுட்டினார். கலந்துரையாடல்களில் பகிரப்பட்ட மூன்று முக்கியக் கருத்துகளை அவர் விளக்கினார்.
முதலாவது, புதிதாகப் பலர் குடியேறும்போது, சிங்கப்பூர் அடையாளத்தில் நங்கூரமிட்டு இருப்பதுடன், அவர்களையும் அவ்விழுமியங்களை நோக்கித் திசைதிருப்ப வேண்டும்.
தொடர்புடைய செய்திகள்
இரண்டாவது, சமூகத்தில் உள்ள பெரும்பாலான திட்டங்களில் பங்கேற்புகள் குறைவாக உள்ள நிலையில், திட்டங்கள் குறித்த தகவல்கள் சரியான நேரத்தில் சென்றடைவதை உறுதிசெய்ய வேண்டும்; உதவி கேட்பதில் தவறில்லை என்பதை மக்களுக்குத் தெரியப்படுத்தவும் வேண்டும்.
மூன்றாவதாக, இளையர்கள் மிகவும் ஆர்வத்துடன் இருந்தாலும் அவர்களுக்குத் தலைமைத்துவத் திறனை வளர்த்துக்கொள்ளத் தேவையான கட்டமைக்கப்பட்ட வழிமுறைகள் இல்லை. அவர்கள் திறன்களை வளர்த்துக்கொள்ள உதவும் வாய்ப்புகளை உருவாக்கி வழங்க வேண்டும்.

