EMBARGO 26 Jan 5AM

காப்புறுதி நிறுவனங்களுடன் தகவல் பகிர்வு: நோயாளிகளின் அனுமதி பெறுவது கட்டாயம்

2 mins read
eca2d93d-8c32-4b46-937e-1f8b5b852384
மாதிரி என்இஎச்ஆர் பதிவுகள். கட்டுப்பாடுகள் காரணமாக நிஜப் பதிவுகளை இந்த மருத்துவரால் செய்தியாளரிடம் காட்ட முடியவில்லை. - படம்: சாவ்பாவ்

நோயாளிகளிடம் தெரியப்படுத்தி அவர்களிடமிருந்து வெளிப்படையாக அனுமதியைப் பெற்ற பிறகே அவர்களின் மருத்துவத் தகவல்களை மருத்துவர்கள், காப்புறுதி தொடர்பான காரணங்களுக்காக அவற்றை வழங்கும் நிறுவனங்களுக்கு அனுப்ப முடியும்.

மேலும், காப்புறுதித் திட்டங்களின் மூலம் நோயாளிகள் பெற நினைக்கும் தொகை/உதவி அல்லது அதற்கான மதிப்பீட்டு நடவடிக்கைகள் ஆகியவற்றுக்கு அவசியமான தகவல்களை மட்டும்தான் காப்புறுதி நிறுவனங்களுக்கு வழங்க அனுமதி உள்ளது. நோயாளிகளின் மருத்துவத் தகவல்ளைப் பெற்று மதிப்பீடு செய்ய காப்புறுதி நிறுவனங்களுக்கு அதிகாரம் தரும் ஒப்பந்த விதிமுறைகளுக்கு உட்பட்ட மருத்துவர்களுக்கும் இது பொருந்தும்.

இதன் தொடர்பிலான விதிமுறைக்கு இம்மாதம் 12ஆம் தேதி நாடாளுமன்றத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சுகாதார அமைச்சு, இத்தகவல்களை நினைவூட்டியது.

சுகாதாரத் தகவல் சட்டம் (Health Information Act) 2027ஆம் ஆண்டு தொடக்கத்தில் நடப்புக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்கீழ் எல்லா சுகாதாரப் பராமரிப்பு அமைப்புகளும் நோயாளிகளின் முக்கிய சுகாதாரத் தகவல்களை என்இஎச்ஆர் எனப்படும் தேசிய சுகாதார மின்பதிவுகளிடம் சமர்ப்பிக்கவேண்டும்.

காப்புறுதி தொடர்பான காரணகளுக்காக என்இஎச்ஆரிலிருந்து தகவல் பெற முயற்சி செய்வதற்கு அறவே அனுமதி கிடையாது என்பதையும் அது குற்றம் என்பதையும் விவரிக்கும் குறிப்பை இம்மாதம் ஒன்பதாம் தேதி தாங்கள் வெளியிட்டதாக சுகாதார அமைச்சு, ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் கேள்விகளுக்குப் பதிலளித்தது.

புதிய சட்டத்தின்கீழ் அனுமதியில்லாத காரணங்களுக்காக என்இஎச்ஆர் தகவல்களைப் பெறும் முதல்முறை குற்றவாளிகளுக்கு 100,000 வெள்ளி வரை அபராதம், நான்காண்டு வரையிலான சிறைத் தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

சுகாதார அமைச்சு வெளியிட்ட குறிப்பு, பதிவுசெய்யப்பட்ட மருத்துவர்கள், பல் மருத்துவர்கள், சுகாதாரப் பராமரிப்புச் சட்டத்தின்கீழ் உரிமத்துடன் இயங்கும் மருத்துவமனைகள் போன்றவை, பொது மருந்தகங்கள், பல் மருந்தகங்கள் உள்ளிட்ட தரப்புகளுக்கு அனுப்பப்பட்டது.

காப்புறுதித் திட்டங்களை வழங்குவோர், என்இஎச்ஆர் பதிவுகளுக்குள் போக முடியாது என்று சுகாதார அமைச்சு, ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் கேள்விகளுக்குப் பதிலளித்தது. நோயாளிகளுக்குப் பராமரிப்புச் சேவைகளை வழங்குவோருக்கு மட்டும்தான் என்இஎச்ஆருக்குள் போகும் அனுமதி உண்டு.

காப்புறுதி நிறுவனங்கள், தங்களின் சார்பில் என்இஎச்ஆருக்குள் போகப் பிறரிடம் கேட்கக்கூடாது. தற்போதைய நிலவரப்படி, காப்புறுதி நிறுவனங்கள், நோயாளிகளுக்கான காப்புறுதி வழங்குதொகையை அளிப்பதற்கான நடைமுறைகளை மேற்கொள்ளத் தேவையான மருத்துவத் தகவல்களைப் பெற்றுக்கொள்ள மருத்துவர்களிடம் கேட்கலாம். இது, ஒவ்வொரு நோயாளிக்கும் மாறுபடலாம்.

சுகாதாரம் தொடர்பான தகவல்களைப் பாதுகாப்பது, அவை சரியான முறையில் பெறப்படுவதையும் அவற்றைப் பாதுகாப்பாகச் சேகரித்து வைப்பதையும் உறுதிசெய்வது ஆகியவை, சுகாதாரத் தகவல் மசோதா குறித்த நாடாளுமன்ற விவாதத்தில் முன்வைக்கப்பட்ட முக்கிய அம்சங்களாகும்.

அனைத்துலகச் சந்திப்புகளில் வெளிநாட்டு சுகாதார அமைச்சர்களைச் சந்திக்கும் பழக்கத்தைத் தாம் கொண்டிருப்பதாகவும் நோயாளிகளின் தகவல்களைப் பகிர்வது குறித்து அவர்களிடமிருந்து மிகவும் முக்கியமான பாடங்களைத் தாம் கற்றுக்கொண்டதாகவும் சுகாதார அமைச்சர் ஓங் யி காங் கடந்த செவ்வாய்க்கிழமை (ஜனவரி 20) ஃபேஸ்புக்கில் தெரிவித்திருந்தார்.

குறிப்புச் சொற்கள்