தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

புக்கிட் மேரா தீச்சம்பவத்திற்கு மின்கலன் காரணமாக இருக்கலாம் என தகவல்

1 mins read
e93136f5-fd61-43ff-b8d7-0c547509a593
புக்கிட் மேரா வீட்டில் புதன்கிழமை (ஆகஸ்ட் 13) ஏற்பட்ட தீவிபத்தில்இருவர் உயிரிழந்தனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

புக்கிட் மேரா வீட்டில் தீப்பற்றியதற்கு அந்த வீட்டின் வரவேற்பறையில் இருந்த தனிநபர் நடமாட்டச் சாதன மின்கலம் காரணமாக இருக்கலாம் என்று சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்து உள்ளது.

முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ள தகவல்களை அது வியாழக்கிழமை (ஆகஸ்ட் 14) தனது ஃபேஸ்புக்கில் வெளியிட்டது.

மின்கலனுக்கு மின்னேற்றும்போது கவனத்துடன் இருக்குமாறும் இரவு முழுவதும் அதனைக் கவனிக்காமல் விட்டுவிடக்கூடாது என்றும் அந்தப் படை பொதுமக்களைக் கேட்டுக்கொண்டு உள்ளது.

மேலும், மின் சாதனங்களுக்கு மின்னேற்ற அசல் ‘ஒரிஜினல்’ அல்லாத மின்கலன்களை வாங்கவோ பயன்படுத்தவோ வேண்டாம் என்றும் அது தெரிவித்து உள்ளது.

ஜாலான் புக்கிட் மேரா புளோக் 106ன் நான்காவது தளத்தில் உள்ள வீடு ஒன்றில் புதன்கிழமை (ஆகஸ்ட் 13) தீப்பிடித்ததில் 32 வயது பெண்ணும் 34 வயது ஆணும் உயிரிழந்தனர்.

முன்னதாக, தீப்பற்றி எரிந்தபோது சமையலறையில் காணப்பட்ட அவ்விருவரையும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை மீட்டு, மருத்துவமனைக்குக் கொண்டு சென்றது. அங்கு அவர்கள் மாண்டனர்.

மேலும், பக்கத்து வீடுகளைச் சேர்ந்த இருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அந்த புளோக்கில் குடியிருக்கும் கிட்டத்தட்ட 60 பேர் பாதுகாப்புக் காரணங்களுக்காக அவர்களின் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர்.

சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் ஆக அண்மைய புள்ளிவிவரப்படி, நடமாட்டச் சாதனங்கள் சம்பந்தப்பட்ட தீச்சம்பவங்கள் கடந்த ஆண்டு 21.8 விழுக்காடு அதிகரித்தன. 2023ஆம் ஆண்டு 55ஆகப் பதிவான அந்தச் சம்பவங்கள் கடந்த ஆண்டு 67க்கு அதிகரித்தன.

குறிப்புச் சொற்கள்