தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மனநலத்தை வலியுறுத்திய இருநாள் விழா

2 mins read
f2cfda83-17be-4b2d-ad63-637544222609
‘காஸ்வே பாயிண்ட்’ கடைத்தொகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்பாளர்கள், பங்காளி அமைப்பைச் சேர்ந்தோருடன் வடமேற்கு வட்டார மேயர் அலெக்ஸ் யாம் (பின்வரிசையில் நடுவில்). - படம்: லாவண்யா வீரராகவன்

மனநலத்தின் முக்கியத்துவம் குறித்தும் அதுகுறித்த விரிவான, நுணுக்கமான தகவல்களையும் மக்களிடம் கொண்டுசேர்க்கும் முயற்சியாக இருநாள் மனநல விழா நடைபெற்றது.

வடமேற்குச் சமூக மேம்பாட்டு மன்றம் சார்பில் இரண்டாவது ஆண்டாக நடைபெறும் இவ்விழாவிற்கு அக்டோபர் 3, 4 தேதிகளில் ‘உட்லண்ட்ஸ் காஸ்வே பாயிண்ட்’ கடைத்தொகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

விழாவின் அறிமுக நாளான அக்டோபர் 3ஆம் தேதி, வடமேற்கு வட்டார மேயரான அலெக்ஸ் யாம் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.

நிகழ்ச்சியில் அமைக்கப்பட்ட கண்காட்சிகளைச் சுற்றிப்பார்த்த சிறப்பு விருந்தினர் வடமேற்கு வட்டார மேயரான அலெக்ஸ் யாம்.
நிகழ்ச்சியில் அமைக்கப்பட்ட கண்காட்சிகளைச் சுற்றிப்பார்த்த சிறப்பு விருந்தினர் வடமேற்கு வட்டார மேயரான அலெக்ஸ் யாம். - படம்: வடமேற்குச் சமூக மேம்பாட்டு மன்றம்

“உடல்நலத்தோடு மனநலம் குறித்த அக்கறையும் முக்கியம். அவற்றை உணர்த்தும் இதுபோன்ற நடவடிக்கைகளில் மக்கள் திரளாகப் பங்கேற்க வேண்டும்,” என்று திரு யாம் கேட்டுக்கொண்டார்.

இவ்வாண்டு ‘மனநலம் பேணல், மீள்திறன் வளர்த்தல்: நல்வாழ்வின் பயணம்’ எனும் கருப்பொருளில் இவ்விழா நடைபெற்றது.

இதில் தொடுதல், நுகர்தல், பார்த்தல், கேட்டல், சுவைத்தல் என ஐம்புலன்களின்வழி மன அமைதியைப் பெறுவது குறித்து விளக்கும் தனித்தனிக் கண்காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன. பல்வேறு பயிலரங்குகளும் நடைபெறுகின்றன. ஏறத்தாழ 15 பங்காளி நிறுவனங்கள் இதற்கு ஆதரவளித்தன.

நிகழ்ச்சியில் ஆர்வத்துடன் பங்கேற்ற பொதுமக்கள்.
நிகழ்ச்சியில் ஆர்வத்துடன் பங்கேற்ற பொதுமக்கள். - படம்: வடமேற்குச் சமூக மேம்பாட்டு மன்றம்

மன அமைதியையும், மீள்திறனையும் மேம்படுத்தும் இந்த நிகழ்ச்சிகளில் இருநாள்களிலும் ஈராயிரத்திற்கும் அதிகமான மக்கள் பங்கேற்றதாக ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்தனர்.

மேலும், வரும் டிசம்பர் மாதம்வரை வட்டாரம் முழுவதும் இந்தக் கண்காட்சிகளை மக்கள் கூடும் இடங்களுக்குக் கொண்டுசெல்லவும் திட்டமிடப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில் பங்கேற்பாளர்கள், பங்காளி அமைப்பினருடன் வடமேற்கு வட்டார மேயரான அலெக்ஸ் யாம் கலந்துரையாடினார்.
நிகழ்ச்சியில் பங்கேற்பாளர்கள், பங்காளி அமைப்பினருடன் வடமேற்கு வட்டார மேயரான அலெக்ஸ் யாம் கலந்துரையாடினார். - படம்: வடமேற்குச் சமூக மேம்பாட்டு மன்றம்

“உடலில் பிரச்சினை வந்தால் சரிசெய்வது போலவே தான் மனநலமும் என்ற எண்ணம் இன்னும் அதிகரிக்க வேண்டும். உலகம் வேகமாக இயங்கிவரும் நிலையில் யாருக்கும் மன அழுத்தம் வரலாம். அவற்றை எதிர்கொள்ள சமூக ஆதரவுகள் உள்ளன. அவற்றை நாமே தேடிப் போய்ப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்,” என வலியுறுத்தினார் திருவாட்டி செல்வராணி பன்னீர்செல்வம், 55.

கடந்த 2023ஆம் ஆண்டுமுதல் வடமேற்குச் சமூக மேம்பாட்டு மன்றத்தின் மனநலத் தூதராகச் செயல்பட்டுவரும் இவர், தம்மைப் போன்று ஓய்வு பெற்றோருக்கும் வீட்டில் உள்ள மூத்தோருக்கும் இவ்வகை நடவடிக்கைகள் மக்களைச் சந்தித்துக் கலந்துரையாட உதவும் என்றும் தெரிவித்தார்.

“மன அழுத்தம் ஏற்பட்டால் யாரை நாடலாம், என்ன செய்யலாம் என்பதை அறிந்துகொள்ள இந்தக் கண்காட்சிகள் உதவின,” என்றார் இல்லத்தரசி யமுனா, 40.

“கல்வி, வேலை எனப் போட்டித்தன்மை மிகுந்த உலகில் வயது வேறுபாடின்றி யாருக்கும் மனநலச் சிக்கல் வரலாம். அவற்றை எதிர்கொள்ளுவது குறித்த புரிதலை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெறுவது சிறப்பு,” என்றார் தம் கணவர், இரு பிள்ளைகளுடன் நிகழ்ச்சியில் பங்கேற்ற உட்லண்ட்ஸ் குடியிருப்பாளர் கிரு‌ஷ்ணமூர்த்தி நந்தினி, 42.

குறிப்புச் சொற்கள்