பெற்றோர் - கல்வியாளர் இடையே உறவை வலுப்படுத்த திட்டம்

2 mins read
a94de542-ba07-49dd-ab6f-9c7869570df3
தம் மனைவி சுமிதா, மகள் அய்லாவுடன் திரு ஜஸ்டின். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2

வார இறுதி காலையாக இருந்தபோதும் பெற்றோரும் பாலர் பள்ளி மாணவர்களும் செந்தோசாத் தீவு கடற்கரையில் 1.5 கிலோமீட்டர் நடைப்பயணத்திற்குக் கூடினர்.

அவர்களில் திரு ஜஸ்டின் துரை, 51, குடும்பத்தினரும் இருந்தனர். தம் மனைவியுடன் மூன்று வயது மகள் அய்லாவையும் நடைப்பயணத்திற்கு அவர் அழைத்து வந்திருந்தார்.

அய்லா 18 மாதக் குழந்தையாக இருந்தது முதலே பள்ளியில் இருக்கும் பெற்றோர் ஆதரவுக் குழுவில் திரு ஜஸ்டின் உறுப்பினராக இருந்து வருகிறார்.

அய்லாவின் பள்ளி நடவடிக்கைகளில் ஈடுபட்டு, ஆசிரியர்களுடன் வலுவான பிணைப்பை ஏற்படுத்தி வருவதுமின்றி பள்ளி நிகழ்ச்சிகளுக்குத் தோள்தந்து தொண்டூழியராகவும் அவர் இருந்து வருகிறார்.

திரு ஜஸ்டினைபோல இதர பெற்றோரும் இருக்க வேண்டும் என்பதை ஊக்குவிக்கும் வகையில் ‘எங்கள் அருமைப் பெற்றோர்’ எனும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

பெற்றோருக்கும் பாலர் பள்ளிக் கல்வியாளர்களுக்கும் இடையிலான பிணைப்பை வலுப்படுத்தும் நோக்கில் செயல்படுத்தப்பட்டுள்ள இத்திட்டம், ஞாயிற்றுக்கிழமை (மே 11) காலை செந்தோசாத் தீவு கடற்கரையில் ஒரு நடைப்பயண நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது.

சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சின் வளர்ச்சிப் பிரிவுக்கான நிரந்தரச் செயலாளர் இங் ஹவ் யூ சிறப்பு விருந்திராகக் கலந்துகொண்டார்.

நடைப்பயணம் அதிபர் சவாலுக்கு நிதி திரட்டும் நோக்கிலும் நடைபெற்றது.

பாலர் பள்ளிச் சந்தை ஏற்பாட்டில், பாலர் பருவ மேம்பாட்டு அமைப்பு, சிங்கப்பூர் கனிவன்பு இயக்கம் ஆகிய அமைப்புகளின் ஆதரவில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது.

பாலர் பள்ளிகளுடனும் கல்வியாளர்களுடனும் துடிப்புடன் இணைந்து பிள்ளைகளின் முழுமையான வளர்ச்சிக்குக் கைகொடுக்கும் பெற்றோரை அங்கீகரிக்கும் விதமாகவும் நிகழ்ச்சி அமைந்தது.

பாலர் பள்ளி மாணவர்கள், கல்வியாளர்கள், குடும்பங்கள் என 2,000க்கும் மேற்பட்டோர் வருகை புரிந்திருந்தனர்.

பிள்ளைகளின் கல்விப் பயணத்தில் பெற்றோர் ஈடுபாடு காட்ட வேண்டியது குறித்து திரு ஜஸ்டின் பேசினார்.

“நாம் செலவிடும் நேர்தத்தில் சிறிய அளவை மட்டும் பிள்ளைகளின் வளர்ச்சிக்கு ஒதுக்கினால் போதும். அதன்மூலம் உருவாகும் பிணைப்பு மிக அவசியம்,” என்றார் அவர்.

முதல்முறையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நடைப்பயணம் பாலர் பள்ளிக்குச் செல்லும் பிள்ளைகளின் முழுமையான வளர்ச்சிக்கு ஏதுவாக இருக்கும் திட்டங்களில் சேர பெற்றோரை வலியுறுத்தும் விதமாகவும் அமைந்தது.

பெற்றோருக்கும் கல்வியாளர்களும் தேவையான வளங்களை வழங்கும் நோக்கத்தில் பாலர் பருவ மேம்பாட்டு அமைப்பு அதன் இணையத்தளத்தையும் புதுப்பித்துள்ளது. www.ecda.gov.sg/Beanstalk இணையத்தளத்தில் மேல்விவரங்கள் உள்ளன.

“பிள்ளைகளின் வளர்ச்சிக்குக் குடும்பங்கள், கல்வியாளர்களின் பிணைப்பு மிக முக்கியம் என்று ஆய்வு கூறுகிறது. இதனால் இத்தகைய முயற்சி மூலம் எங்களால் அதை மேம்படுத்த முடியும் என்று நம்புகிறோம்.

“பிள்ளைகளுக்கும் பெற்றோருக்கும் தேவையான வளங்களை அளிப்பதன் மூலம் எங்களால் பிள்ளைகளின் முழுமையான வளர்ச்சிக்குப் பங்களிக்க முடியும்,” என்று பாலர் பருவ மேம்பாட்டு அமைப்பின் தலைமை நிர்வாகி கூ கியோக் பூன் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்