தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இசை ஆர்வத்தை மேடையேற்றிய முன்னாள் கைதிகள்

2 mins read
be13d75e-1e8d-4987-a99f-06518a204504
அதிக வாக்குகள் பெற்ற இக்பாலுக்கு வெற்றியாளர் விருதை வழங்கினார் மூத்த துணை அமைச்சர் முஹம்மது ஃபைஷால் இப்ராஹிம். - படம்: பெரித்தா ஹரியான்
multi-img1 of 2

முன்னாள் சிறைக்கைதிகள் ஐவர் சொந்தமாகப் பாடல்களை எழுதி, அவற்றை மக்கள் முன்னிலையில் மேடையேற்றி, அவர்களிடமிருந்து மிகுந்த வரவேற்பையும் ஆதரவையும் பெற்றனர் .

மஞ்சள் நாடாத் திட்டம், சிங்கப்பூர் சிறைச்சாலை இணைந்து ஏற்பாடு செய்த பாடல் எழுதும் போட்டி புதன்கிழமை (செப்டம்பர் 10) சாங்கி சிறைச்சாலை வளாகத்தில் நடைபெற்றது.

‘நாம் ஒருவருக்கொருவர் இரண்டாவது வாய்ப்பாக இருக்கிறோம்’ எனும் கருப்பொருளுடன் 10வது முறையாக நடந்தேறிய இந்நிகழ்ச்சியில் உள்துறை மூத்த துணை அமைச்சர் முஹம்மது ஃபைஷால் இப்ராஹிம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

இவ்வாண்டு நிகழ்ச்சியில், முன்னாள் கைதிகள் தங்கள் உண்மையான முகங்களையும் குரல்களையும் வெளிப்படுத்தியதை அமைச்சர் ஃபைஷால் குறிப்பிட்டுப் பேசினார்.

“அவர்களின் பாடல்களுக்குப் பின்னால் உள்ள அர்த்தங்கள், உணர்ச்சிகளுடன் மக்கள் இன்னும் ஆழமாக இணைகிறார்கள்,” என்றும் அவர் சொன்னார்.

போட்டிக்கான தேர்வுச்சுற்று, பயிற்சிகள், காலிறுதிப் போட்டிகள் ஆகியவை சமூக ஊடகங்களில் பகிரப்பட்டன.

“மாற்றத்தை விரும்புபவர்களுக்கும் அதற்குத் தயாராக இருப்பவர்களுக்கும் சமூகம் சரிசமமான வாய்ப்புகளை வழங்கி அவர்களை அரவணைக்கும்,” என்றார் அமைச்சர்.

பல்வேறு சிறைச்சாலை அமைப்புகள், போதைப்பொருள் மறுவாழ்வு நிலையங்களிலிருந்து 33 முன்னாள் கைதிகள் தேர்வுச்சுற்று மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு இசைக் கோட்பாடு மற்றும் பாடல் எழுதும் பாடங்களைப் பெற்றனர்.

அவர்களுள் சிறப்பாகப் பாடல் எழுதிய ஐவர் இறுதிச்சுற்றுக்கு தேர்வுபெற்றனர்.

இறுதிப் போட்டியாளர்களின் இசைப்பயணத்தைக் காட்சிப்படுத்தும் காணொளிகள் மஞ்சள் நாடாத் திட்டத்தின் சமூக ஊடகத் தளங்களில் பொதுமக்கள் பார்வைக்காக பதிவேற்றப்பட்டன.

கடந்த ஆகஸ்ட் 20ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை தங்களுக்குப் பிடித்த பாடலுக்கு வாக்களிக்கும்படி பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்த முயற்சியால் முதன்முறையாக எல்லாப் பாடல்களுக்கும் மொத்தம் ஆயிரத்திற்கும் மேல் வாக்குகள் திரண்டன என்பது குறிப்பிடத்தக்கது.

கூடுதல் வாக்குகள் பெற்று சிறந்த பாடலுக்கான விருதை தட்டிச் சென்றார் இக்பால், 24.

இறுதிப் போட்டியில் ‘மாற்றம்’ என்ற தலைப்பில் ஒரு பாடலை எழுதிய அவர் வெற்றியாளராக வாகை சூடினார்.

அதிக வாக்குகள் பெற்ற இக்பாலுக்கு வெற்றியாளர் விருது வழங்கி, பாராட்டினார் மூத்த துணை அமைச்சர் முஹம்மது ஃபைஷால் இப்ராஹிம்.
அதிக வாக்குகள் பெற்ற இக்பாலுக்கு வெற்றியாளர் விருது வழங்கி, பாராட்டினார் மூத்த துணை அமைச்சர் முஹம்மது ஃபைஷால் இப்ராஹிம். - படம்: பெரித்தா ஹரியான்

தனக்குள் இவ்வளவு திறமை உள்ளதை இப்போதுதான் முதன்முதலில் தன் குடும்பத்தார் கண்டறிந்தனர் என்று மகிழ்ச்சியுடன் தமிழ் முரசிடம் பகிர்ந்துகொண்டார் திரு இக்பால்.

“நீங்கள் உண்மையாக இருந்தால் மாற்றம் சாத்தியம் என்பதை அனைவருக்கும் உணர்த்தவே இந்தப் பாடலை எழுதி படைத்தேன்,” என்றும் அவர் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்