குறைந்த அளவிலுள்ள மறுசுழற்சி விகிதத்தை அதிகரிக்கவும் கழிவு மேலாண்மையை ஊக்கப்படுத்தும் இலக்குடனும் புதிய கட்டமைப்புடன் கூடிய மறுசுழற்சி நிலையம் முதன்முறையாக குவீன்ஸ்டவுனில் தொடங்கப்பட்டுள்ளது.
குவீன்ஸ்டவுன் வட்டாரத்தில் சனிக்கிழமை (ஜூன் 14) பிற்பகல் ஸ்டெர்லிங் ரோடு பகுதியில் அந்நிலையத்தைச் சட்ட மற்றும் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சுகளின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் எரிக் சுவா தொடங்கி வைத்தார்.
தேசிய சுற்றுப்புற வாரியத்தின் அண்மைய புள்ளிவிவரங்களின்படி 2023ஆம் ஆண்டுக்கான உள்ளூர் மறுசுழற்சி விகிதம் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக 12 விழுக்காடு எனும் அளவில் இருந்தது.
மேலும், அசுத்தமான நிலையில் காணப்படும் மறுசுழற்சித் தொட்டிகள் கவலைக்குரிய விஷயமாகவும் இருந்தன.
எனவே, இத்தகைய சவால்களை எதிர்கொள்ள ஏறத்தாழ ஈராண்டு ஆய்வு, தரவுச் சேகரிப்பிற்கு பிறகு ‘ஸீரோ வேஸ்ட் எஸ்ஜி’ இலாப நோக்கமற்ற அமைப்பு, ஆம்பர் ஹார்ட் அறக்கட்டளையுடனும் இன்னும் பிற சமூகப் பங்காளிகளுடனும் இணைந்து ‘வகைப்படுத்திடுக’ (Sort It Out campaign) எனும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஏறத்தாழ 72 விழுக்காட்டு சிங்கப்பூர்க் குடும்பங்கள் மறுசுழற்சி செய்வதாகக் குறிப்பிட்டாலும், கழிவுகளற்ற நாடு எனும் பேரிலக்கை நோக்கிய பயணத்தில் இன்னும் சிறப்பாகப் பணியாற்ற இத்திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளதாக அமைப்பு தெரிவித்தது.
நாட்டின் ஒட்டுமொத்தக் கழிவு மேலாண்மையில் இதன் தாக்கம் என்னவாக இருக்கும் என்று தமிழ் முரசு எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த திரு சுவா, “இது முன்னோடித் திட்டமாக அறிமுகம் கண்டுள்ளது. சில மாதங்கள் இதன் செயல்பாட்டைக் கண்காணித்த பிறகு, அதனை மற்ற பகுதிகளிலும் அறிமுகப்படுத்துவது குறித்து முடிவெடுக்கப்படும்,” என்றார்.
சிங்கப்பூரர்கள் மறுசுழற்சி, சுற்றுச்சூழல் நிலைத்தன்மை சார்ந்து கவலைப்படுவது யாவரும் அறிந்ததே என்று சுட்டிய திரு சுவா, இத்திட்டம் உறுதியாக நற்பயனளிக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
புதிதாக நிறுவப்பட்டுள்ள இந்த மறுசுழற்சி நிலையத்தில் நெகிழி, காகிதம், உலோகம், கண்ணாடி உள்ளிட்ட பொருள்களைக் குடியிருப்பாளர்கள் மறுசுழற்சி செய்யலாம்.
இப்புதிய முறை மறுசுழற்சி செய்வதற்காகப் போடப்படும் பொருள்களின் அளவைக் கண்காணிக்கும். 80 விழுக்காட்டுக் கொள்ளளவை எட்டியதும் அதில் பொருத்தப்பட்ட உணர்கருவிகள், அதுபற்றி அப்பொருள்கள் சேகரிப்புக் குழுக்களுக்கு விழிப்பூட்டும்.
இதுகுறித்துக் கருத்துரைத்த ‘ஸீரோ வேஸ்ட் எஸ்ஜி’ நிர்வாக இயக்குநர் லயனல் துரை, “மறுசுழற்சியின் நோக்கத்தையும் செயல்முறையையும் புரிந்துகொள்ளும்போது, நிலையான நடைமுறைகளை ஏற்றுக்கொள்ள விரும்பும் குடியிருப்பாளர்களின் மனநிலையில் உறுதியான மாற்றம் ஏற்பட்டுள்ளதைக் காண முடிகிறது,” என்றார்.
’’தங்கள் இல்லங்களிலேயே மறுசுழற்சிக்கான முயற்சிகளை மக்கள் மேற்கொள்ளும்போது அவர்கள் எவற்றை வகைப்படுத்த வேண்டும் என்று தெளிவாக உணர்ந்து கொள்வார்கள். இது கழிவுகளற்ற எதிர்காலத்தை நோக்கிய முக்கியப் படி,’’ என்றும் அவர் சொன்னார்.
குவீன்ஸ்டவுன் சமூக மன்றத் தொண்டூழியர்களும் அவ்வட்டாரவாசிகளுமான திருவாட்டி தனலட்சுமி 48, திருவாட்டி சக்தி 50, புத்தாக்கமிக்க இத்திட்டத்தை வரவேற்பதாகக் கூறினர்.
“மக்கும் குப்பை, மக்காத குப்பை எனப் போடும்போது சில நேரம் தொட்டிகள் நிரம்பி, அவ்விடமே தூய்மைக்கேடாகக் காட்சியளிக்க நேரும்.
‘‘ஆனால், இந்தப் புதிய நிலையத்தில் உள்ள தொழில்நுட்ப உத்தியின் மூலம் அப்பிரச்சினை இனி இராது,” என்று அவர்கள் கூறினர்.
மேலும், இதன்வழி இன்னும் அதிக அளவிலான குடியிருப்பாளர்கள் மறுசுழற்சி செய்தால் கழிவுகளற்ற சமூகத்தைச் சிறப்பாகக் கட்டியெழுப்பலாம். இது நல்ல முன்னேற்றம்,” என்றும் அவர்கள் தெரிவித்தனர்.