சிங்கப்பூரில் அதிகரிக்கும் கடல் நீர்மட்டம், வெள்ளம் ஆகியவற்றைத் தடுக்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.
அதற்கான 14 திட்டங்களில் புத்தாக்கம் தொடர்பான இரண்டு திட்டங்களுக்காக தொழில் நிறுவனங்களும் கல்வி நிறுவனங்களும் $22 மில்லியன் நிதி மானியத்தைப் பெற்றுள்ளன.
வெள்ளம், கடல் நீர்மட்ட உயர்வு ஆகிய பிரச்சினைகளைச் சமாளிக்க புத்தாக்க முறையில் தீர்வுகாண்பதற்காக தேசிய தண்ணீர் அமைப்பான பியூபி அந்த மானியத்தை அந்நிறுவனங்களுக்கு வழங்கி உள்ளது.
சிப்பிகள் பதிக்கப்பட்ட நீர்த்தடுப்பை கடலின் ஓரங்களில் ஏற்படுத்துவதும் புதிய திட்டங்களில் இடம்பெற்றுள்ள ஓர் அம்சம். உயர்ந்தெழும் அலைகளைக் கட்டுப்படுத்துவதோடு கடல்வாழ் உயிரினங்களுக்குப் புதிய வாழ்வைத் தரக்கூடியது அந்தப் புத்தாக்க அம்சம்.
அந்தத் திட்டத்திற்கு உருவம் கொடுக்கும் பணியில் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்திற்கு (என்யுஎஸ்) உட்பட்ட இரு கல்வி நிறுவனங்களும் ஆலோசனை நிறுவனம் ஒன்றும் ஈடுபட்டு உள்ளன.
விரயமாகும் கான்கிரீட் பாகங்களுக்குப் புத்துயிர் கொடுத்து, கரியமில வாயுவை உறிஞ்சும் செங்கற்கள் போன்றவையாக அவற்றை மாற்றுவது இன்னொரு புத்தாக்க யோசனை.
அதனைச் செயல்படுத்தும் பணிகளிலும் இந்த நிறுவனங்கள் ஈடுபட்டு உள்ளன.
புதிய நிதி உதவித் திட்டம் குறித்த அறிவிப்பை நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் கோ ஹன்யான் வியாழக்கிழமை (செப்டம்பர் 18) வெளியிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
“கடலோரப் பாதுகாப்புக்கு ஏற்றவையாக சிங்கப்பூரின் தொழில்நுட்ப ஆற்றல்களை வடிவமைக்க நமது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான முதலீடுகள் உதவும்.
“மேலும், அதற்கான நிபுணத்துவத்தை உள்ளூரின் தொழில் மற்றும் ஆராய்ச்சிப் பிரிவுகளில் இடம்பெற்றுள்ள குழுக்களே ஏற்படுத்தும்.
“கடலோரத்தில் எழும் சவால்களைச் சமாளிக்க, புத்தாக்கம் மிகுந்த, செலவு குறைந்த தீர்வுகளைக் காண அது கைகொடுக்கும்.
“சிங்கப்பூரின் குறுகிய நகர்ப்புற இடவசதி, தனித்துவமான கடலலை நிலவரம் ஆகியவற்றைக் கருத்தில்கொள்ளும்போது நம்மிடம் கைவசம் இருக்கும் தீர்வுகள் மட்டும் போதாது என்பது தெளிவாகும்,” என்றார் திருவாட்டி ஹன்யான்.
சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் கலந்துகொண்டு பேசுகையில் அவர் இவற்றைத் தெரிவித்தார். கடலோரப் பாதுகாப்பு மற்றும் வெள்ள சமாளிப்புக்கான கல்வி நிலையம் (CFI) அந்தக் கருத்தரங்கை நடத்தியது
கடலோரப் பாதுகாப்பு மற்றும் வெள்ள மேலாண்மை ஆராய்ச்சித் திட்டங்களுக்காக $125 மில்லியன் மதிப்பிலான திட்டத்தைப் பியூபி தீட்டி உள்ளது.

