வழக்கறிஞர் சங்கத்தில் தொடரும் விசாரணை

2 mins read
b3ba1722-fbbc-49b7-8e57-44ec93695691
சிங்கப்பூர் வழக்கறிஞர் சங்கத்தில் வேலையிடத் துன்புறுத்தல் தொடர்பான விசாரணை நடைபெறுகிறது. - படம்: எடிஎக்ஸ் ஆர்கிடெக்ட் / ஃபேஸ்புக்

சிங்கப்பூர் வழக்கறிஞர் சங்கத்தில் வேலையிடத் துன்புறுத்தல் தொடர்பான விசாரணை நடைபெறுகிறது.

வழக்கறிஞர் சங்கத்தில் உள்ளோர் துன்புறுத்தப்படுவதாகக் கூறும் பதிவு இவ்வாண்டு செப்டம்பர் மாதம் இணையத்தில் பதிவேற்றப்பட்டதை அடுத்து சங்கத்திடம் விசாரிக்கப்படுவதாக அறியப்படுகிறது.

வழக்கறிஞர் சங்கத்தில் 70க்கும் அதிகமான அதாவது மூன்றில் ஒரு பங்கு ஊழியர்கள் வேலையைவிட்டு வெளியேறியதன் தொடர்பில் அந்தப் பதிவு வந்துள்ளதாகத் தெரிகிறது.

சங்கத்தின் தலைமை நிர்வாகி வேலைக்குச் சேர்ந்து நான்கு மாதங்கள்கூட நிறைவடையாத நிலையில் வேலையைவிட்டு வெளியேறினார்.

கூடுதலாகச் சங்கத்தில் நீண்டகாலம் பணியாற்றிய மூத்த நிர்வாகியும் வேலையைவிட்டு வெளியேறியது சர்ச்சையைக் கிளப்பியது.

ஒரு கட்டத்தில் மனிதவளத் துறையிலும் ஊழியர் பற்றாக்குறை ஏற்பட்டது.

இவற்றையெல்லாம் அடிப்படையாகக் கொண்டு டிஎஸ்எம்பி சட்ட நிறுவனம், சங்கத்தில் விசாரணை மேற்கொள்ளும்படி வழக்கறிஞர் சங்க தணிக்கைக் குழு கடந்த செப்டம்பர் உத்தரவிட்டது.

டிஎஸ்எம்பி நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிர்வாகப் பங்காளியான மூத்த வழக்கறிஞர் டியோ ‌ஷென் யி, தணிக்கைக் குழுவிடம் விசாரணை தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

இவ்வாண்டு அக்டோபரிலிருந்து டிசம்பர் வரை நடத்தப்பட்ட விசாரணையில் இந்நாள், முன்னாள் ஊழியர்கள் விசாரிக்கப்பட்டதாக அறியப்படுகிறது.

விசாரணையின்போது பிற விவகாரங்களும் முன்வைக்கப்பட்டன.

வெளிநாட்டுப் பயணங்களின்போது அளவுக்கு அதிகமாகச் செலவு செய்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது. அதை முன்னிட்டு சங்கத்தில் உள்ள சில உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.

பாலியல் ரீதியான துன்புறுத்தலைச் சங்கம் எவ்வாறு கையாண்டது பற்றியும் இணையத்தில் பதிவேற்றப்பட்டது.

ஊழியர்கள் அனைவரும் 24 மணிநேரமும் தயார் நிலையில் இருக்கும்படி வற்புறுத்தப்பட்டது, வார இறுதிகளிலும் விடுப்பில் இருந்தபோதும் வேலையிடத்திலிருந்து அடுக்கடுக்காகக் குறுஞ்செய்திகளைப் பெற்றது, பணிக்கு அப்பால் பிற வேலைகளைச் செய்யும்படி கூறப்பட்டது ஆகிய குறைகளையும் ஊழியர்கள் முன்வைத்தனர்.

குறிப்புச் சொற்கள்