சிங்கப்பூர் இளையர்களுக்கு செவ்வாய்க்கிழமை (ஜனவரி 21) முதல் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது இன்ஸ்டகிராம் சமூக ஊடகம்.
இணையத் தீங்குகளில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருவதைத் தொடர்ந்து, 18 வயதுக்கு உட்பட்ட பயனாளர்களின் கணக்கைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையை அந்த ஊடகம் எடுத்து உள்ளது.
இன்ஸ்டகிராம் ஊடகத்தைப் பயன்படுத்துவோர் குறைந்த வயதினர் என்ற சந்தேகம் எழும்போது அவர்களின் வயதை நிரூபிக்கும் புகைப்பட அடையாளத்தைத் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுவர். அல்லது செல்ஃபி காணொளி வழியாக அதனை அவர்கள் சமர்ப்பிக்க வேண்டும்.
உலகளவிலான பயனாளர்களில் சிலர் தங்களது வயதைப் பொய்யாகக் கூறி இன்ஸ்டகிராமை பயன்படுத்துவதற்கு எதிராக அந்த சமூக ஊடகம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று.
வயதுக் கட்டுப்பாடு தொடர்பான நடவடிக்கையை இன்ஸ்டகிராம் முதன்முதலில் கடந்த ஆண்டு அமெரிக்காவில் அறிமுகம் செய்தது. பின்னர், ஆண்டின் பிற்பகுதியில் பிரிட்டனுக்கு அந்நடவடிக்கை விரிவுபடுத்தப்பட்டது.
தவறான இணையப் பழக்கங்களுக்கு அடிமையாகுதல், இணைய அச்சுறுத்தல், தீங்கான உள்ளடக்கம் போன்றவற்றில் இருந்து இளையர்களைப் பாதுகாக்க உலகளவில் குரல் எழுப்பப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு முதல் வயதுக் கட்டுப்பாடுகளை இன்ஸ்டகிராம் விதித்து வருகிறது.
குறிப்பாக, இன்ஸ்டகிராமை நிர்வகிக்கும் மெட்டா நிறுவனம் 2023ஆம் ஆண்டும் கடும் குறைகூறலுக்கு ஆளானது.
ஆபத்துகளைக் கட்டுப்படுத்தாமல் இளையர்களை அது தன்பக்கம் ஈர்ப்பதாகக் கூறப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
அமெரிக்க அரசாங்க சட்ட அதிகாரிகளின் கடுமையான குற்றச்சாட்டுகளை மெட்டா நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் எதிர்நோக்கினார்.