வாடிக்கையாளருக்குச் சொந்தமான 2,000 வெள்ளிக்கும் அதிகமான தொகையைத் தனது சொந்தச் செலவுக்காகக் களவாடியதாக நம்பப்படும் காப்புறுதி முகவர்மீது நான்கு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
ஏமாற்றியதாக மூன்று குற்றச்சாட்டுகளும் நம்பிக்கை துரோகம் இழைத்ததாக ஒரு குற்றச்சாட்டும் அவர்மீது சுமத்தப்பட்டுள்ளன.
சந்தேக நபரான 41 வயது ஷாகுல் ஹமீது என்.ஏ. 2025ஆம் ஆண்டில் அக்குற்றங்களைப் புரிந்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது. புதன்கிழமை (ஏப்ரல் 8) அவர்மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
அவரால் பாதிக்கப்பட்டதாக நம்பப்படும் ஒருவர் புகாரளித்ததாகக் காவல்துறை செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 7) அறிக்கை மூலம் தெரிவித்தது. காப்புறுதிச் சந்தா தொகையை செலுத்தியிருந்தபோதும் தன்னால் 56,000 வெள்ளிக்கும் அதிக மதிப்பிலான மருத்துவக் கட்டணங்களுக்குக் காப்புறுதித் திட்டத்தைப் பயன்படுத்த முடியவில்லை என்று புகாரளித்த மாது கூறியிருந்ததாகக் காவல்துறை குறிப்பிட்டது.
ஷாகுல் ஒரு காப்புறுதி முகவர் என்று பொதுக் காப்புறுதிச் சங்கத்தின் (General Insurance Association) இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. குற்றச் செயல்கள் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் காலகட்டத்தில் அவர் எந்த நிறுவனத்தில் வேலை செய்தார் என்ற விவரங்கள் இணையத்தளத்தில் தெரிவிக்கப்படவில்லை.
பெண் வாடிக்கையாளர் ஒருவர், தனது குடும்பத்தாரின் காப்புறுதிச் சந்தாக் கட்டணங்களைச் செலுத்துவதற்காக 2,000 வெள்ளிக்கும் மேலான தொகையை ஷாகுலிடம் ஒப்படைத்திருந்தார் என்று நீதிமன்ற ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டது. ஷாகுல், 2025ஆம் ஆண்டு மே மாதத்துக்கும் ஜூலை மாதத்துக்கும் இடைப்பட்ட காலத்தில் அந்தத் தொகையைத் தனது சொந்தச் செலவுக்காக வைத்துக்கொண்டதாக நம்பப்படுகிறது.
அந்தப் பெண், காவல்துறை அறிக்கையில் குறிப்பிடப்பட்ட அதே பெண்தானா என்பது இப்போதைக்குத் தெரியவில்லை. சிறப்பு காப்புறுதித் திட்டம் ஒன்றின்கீழ் தான் பாதுகாக்கப்படுவதாகக் கூறி ஷாகுல், அப்பெண்ணைச் சென்ற ஆண்டு ஜூன் மாதம் 29ஆம் தேதி ஏமாற்றியதாகவும் கூறப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
பான் ஏழியா இன்டர்நேஷனல் எனும் நிறுவனத்தை ஏமாற்றியது போன்ற குற்றங்களையும் ஷாகுல் புரிந்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது. வரும் மே மாதம் ஆறாம் தேதி அவரின் வழக்கு மீண்டும் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும்.

