இவ்வாண்டு ஜனவரி மாதம் முதல் காப்புறுதித் திட்டங்களுக்கு எஞ்சிய கட்டணத்தைச் செலுத்த வேண்டியுள்ளது என்று கூறி மேற்கொள்ளப்பட்ட மோசடிச் செயல்களில் குறைந்தது 1.7 மில்லியன் வெள்ளி பறிபோனதாகக் காவல்துறையும் சிங்கப்பூர் நாணய ஆணையமும் வெள்ளிக்கிழமை (மார்ச் 14) தெரிவித்தன.
இத்தகைய சம்பவங்களில் என்டியுசி யூனியன், இன்கம் இன்ஷூரன்ஸ், யூனியன்பே போன்ற நிறுவனங்களின் ஊழியர்களாகவோ பிரதிநிதிகளாகவோ நடித்து மோசடிக்காரர்கள் பிறரை ஏமாற்றுவர். அவரவர் புதிய ஆயுள் காப்புறுதித் திட்டங்கள் அல்லது நிறைவடையவிருக்கும் காப்புறுதித் திட்டங்களுக்கான எஞ்சிய கட்டணத்தைச் செலுத்துமாறு கூறி இந்த மோசடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கட்டணம் செலுத்துவதற்கான ‘வழிமுறைகள்’ பாதிக்கப்பட்டோருக்கு விவரிக்கப்படும்போது பீதியடையச் செய்யும் சில போலியான தகவல்கள் அவர்களிடம் தெரிவிக்கப்படும். ‘பிரச்சினை’களைச் சரிசெய்ய பாதிக்கப்பட்டோரிடம் பணம் அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படும். அதனையடுத்து பணம் பறிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்டியுசி யூனியன், இன்கம் இன்ஷுரன்ஸ், யூனியன்பே ஆகியவை தங்களிடம் வேண்டுகோள் ஏதும் வைக்காமலேயே தொலைபேசி அழைப்புகள், மின்னஞ்சல்கள், வாட்ஸ்அப், குறுந்தகவல்களின்வழி பணம் அனுப்புமாறு கேட்டுக்கொள்ளமாட்டா என்று காவல்துறையும் சிங்கப்பூர் நாணய ஆணையமும் வெளியிட்ட கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன. அத்தகைய அழைப்புகள் அனைத்தையும் மோசடிச் செயல்கள் என்று வகைப்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்ட காவல்துறையும் நாணய ஆணையமும், அவற்றைப் பற்றி இன்கம் இன்ஷுரன்சின் அவசர தொலைபேசி எண்ணான 6788-1777க்கு அழைத்துத் தெரியப்படுத்த வேண்டும் என்றும் கூறியது.