பொருளியல், வீட்டுவசதி, கல்வி ஆகியவற்றில் இந்தியச் சமூகம் தொடர்ந்து நல்ல நிலையில் இருப்பதாகவும் மேலும் வலுப்படுத்த வேண்டிய அம்சங்கள் பல இருப்பதாகவும் தெரிவித்துள்ளார் கலாசார, சமூக, இளையர்துறைத் துணை அமைச்சர் தினேஷ் வாசு தாஸ்.
‘இணை’ கருத்தரங்குகள், சமூகத்திற்கும், அரசாங்க, பொதுத் துறையினருக்குமான நேரடித் தொடர்பைப் பேண, ஆண்டுக்கு ஒருமுறையேனும் நடைபெறும் நிகழ்ச்சிகளாக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
சனிக்கிழமை (ஏப்ரல் 25) நடைபெற்ற ‘இணை’ குழுவின் முதல் கருத்தரங்கில், கேள்வி பதில் அங்கத்தைத் தொடங்கிவைத்து அவர் பேசினார்.
“மக்கள்தொகை எண்ணிக்கையைத் தாண்டி, இந்தியச் சமூகம் சிறப்பாகச் செயல்படுகிறது. இம்முன்னேற்றத்தைத் தொடர்ந்து தக்கவைத்து சிறப்பாகச் செயல்படுவதை உறுதிசெய்ய வேறு என்ன செய்ய வேண்டும் என்பதே முக்கியக் கேள்வி. நாம் இன்னும் திறம்படச் செயலாற்ற வேண்டியுள்ளது,” என்று திரு தினேஷ் சொன்னார்.
முந்தைய ஈடுபாட்டு அங்கத்தில் அமைச்சர் சண்முகம் கூறிய கருத்துகளையும் அவர் நினைவுகூர்ந்தார்.
சமூகத்தில் உயர்ந்த நிலையை எட்டியோர், சமூகத்திற்குத் திருப்பிச் செலுத்துவதை உறுதிசெய்ய வேண்டுமென்றார் திரு தினேஷ்.
மேலும், “சமூகத்தில் பல்வேறு அமைப்புகள் பல்வேறு பணிகளில் கவனம் செலுத்துகின்றன. சில நேரங்களில் ஓர் அமைப்பு என்ன செய்கிறது என்பது பிற அமைப்புகளுக்குத் தெரிவதில்லை,” என்ற அவர், அமைப்புகளை ஒருங்கிணைக்க முடிந்தால், ஒருவருக்கொருவர் இன்னும் சிறப்பாக ஆதரவளிக்க முடியுமென்றும் குறிப்பிட்டார்.
“மக்கள்தொகை தொடர்ந்து மாற்றம் காண்கிறது. புதிதாகச் சிங்கப்பூருக்கு வருவோர், சிங்கப்பூரைத் தங்களது இல்லமாகக் கருதுவோரும் இங்கு உள்ளனர்”, எனச் சுட்டிய அவர், “நாம் அனைவரும் இங்கு வந்து குடியேறியவர்களின் பிள்ளைகள் என்பதை மறந்துவிடக் கூடாது. புதிதாக வருபவர்களை ஆதரிக்கவும் அவர்களுடன் நம்மை இணைத்துக்கொள்ளவும் நாம் என்ன செய்யவேண்டும் என்பதையும் கவனிக்க வேண்டும்,” என்றார்.
தொடர்புடைய செய்திகள்
வேலைவாய்ப்பு, ஈடுபாடுகளை வலுப்படுத்த இரு புரிந்துணர்வுக் குறிப்புகள்
‘இணை’ கருத்தரங்கின் ஓர் அங்கமாக, இளையர்களுக்கான வாய்ப்புகளை அதிகரிக்கவும், சமூக ஈடுபாட்டை அதிகரிக்கவும் சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கம் (‘சிண்டா’) இரு புரிந்துணர்வுக் குறிப்புகளில் கையெழுத்திட்டது.
முதலாவதாக, வசதி குறைந்த இளையர்களுக்கு வேலைவாய்ப்புப் பாதை உருவாக்கம், வேலைப் பயிற்சித் திட்டங்கள், வழிகாட்டுதல்களில் கவனம் செலுத்தும் நோக்கில் சிங்கப்பூர் இந்திய வர்த்தக, தொழிற்சபையுடன் (சிக்கி) சிண்டா புரிந்துணர்வுக் குறிப்பில் கையெழுத்திட்டது.
இதில், சிண்டா தலைமை நிர்வாக அதிகாரி அன்பரசு ராஜேந்திரன், ‘சிக்கி’ அமைப்பின் தலைவர் நீல் பரேக் இருவரும் கையெழுத்திட்டனர்.
இதன்கீழ், சிறையிலிருந்து வெளியானோரின் மறுவாழ்வு, சமூக ஒருங்கிணைப்பு ஆதரவை வலுப்படுத்துவது, அவர்களது குடும்பங்களின் தேவைகளை ஆதரிப்பது ஆகியவற்றுக்கான வளங்களிலும் கவனம் செலுத்தப்படும்.
இரண்டாவதாக, சமூக ஒருங்கிணைப்பை வலுப்படுத்தி, ஆதரவு தேவைப்படும் குடும்பங்களை அடையாளம் கண்டு, சரியான நேரத்தில் சென்றடையும் நோக்கில் நற்பணிப் பேரவையுடன் சிண்டா புரிந்துணர்வுக் குறிப்பில் கையெழுத்திட்டது.
இதில், சிண்டா தலைமை நிர்வாக அதிகாரி அன்பரசு ராஜேந்திரன், நற்பணிப் பேரவைத் தலைவர் ரவீந்திரன் கணேசன் இருவரும் கையெழுத்திட்டனர்.
இதன்கீழ், தொண்டூழியர்கள் கட்டமைப்பைப் பயன்படுத்தி, தேவையுள்ள குடும்பங்களைச் சென்றடையத் தேவையான ஈடுபாடுகளில் கவனம் செலுத்தப்படும்.

