சிங்கப்பூரில் 100க்கும் மேற்பட்ட இடங்களில் அலைக்கற்றை அலைவரிசைகளை உரிமமின்றி, வேண்டுமென்றே பயன்படுத்திய விவகாரம் தொடர்பாகவும் அதற்கு நிறுவனத்தின் மூத்த நிர்வாகம் ஒப்புதல் அளித்ததாகவும் எழுந்துள்ள புதிய குற்றச்சாட்டுகளை அடுத்து, சிம்பா டெலிகாம் மீதான விசாரணையைத் தகவல்தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலியப் பங்குச் சந்தையில் திங்கட்கிழமை (அக்டோபர் 26) தாக்கல் செய்த அறிக்கையில் சிம்பாவின் தாய் நிறுவனமான துவாஸ், இந்நிறுவனத்துக்கு ஆணையத்திடமிருந்து காரணம் கோரும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவித்தது.
புதிய குற்றச்சாட்டுகள் குறித்து சிம்பா தகுந்த விளக்கமளித்து தன் தரப்பு குறித்து நிரூபிக்கத் தவறினால், அந்தத் தொலைத்தொடர்பு நிறுவனம் அபராதத்தை எதிர்கொள்ள நேரிடும் அல்லது அதன் செயல்பாட்டு உரிமத்தையே இழக்கும் அபாயம் உள்ளது.
முதலில் கடந்த மே மாதத்தில் வெளிச்சத்துக்கு வந்த இந்த அனுமதியற்ற அலைக்கற்றைப் பயன்பாடு, எம்1 நிறுவனத்தை $1.4 பில்லியனுக்குக் கையகப்படுத்த சிம்பா முன்வைத்த விண்ணப்பம் தோல்வி அடைய முக்கியக் காரணமாக அமைந்தது.
சிம்பா நிறுவனம் 2022, 2023 ஆகிய ஆண்டுகளில் குறிப்பிட்ட இடைப்பட்ட காலங்களில் ஏறத்தாழ 133 இடங்களில் ‘டைனமிக் ஸ்பெக்ட்ரம் ஷேரிங்’ முறையைப் பயன்படுத்தியதாகப் புதிய குற்றச்சாட்டுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2,100 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றையை 5ஜி சேவைக்கு மட்டுமே பயன்படுத்த சிம்பாவுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், அந்நிறுவனம் அதனை 4ஜி, 5ஜி ஆகிய இரண்டுக்குமே பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
வானொலி அலைவரிசைகள் அல்லது அலைக்கற்றை என்பது தொலைத்தொடர்பு அமைப்புகள் சார்ந்து இயங்கும் கண்ணுக்குத் தெரியாத வானலைகள் ஆகும். கைபேசிச் சேவை வழங்கும் நிறுவனங்களின் சிறப்புப் பயன்பாட்டுக்காக அலைக்கற்றை அலைவரிசைகளை ஆணையம் ஒதுக்கி விநியோகிக்கிறது.
தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அலைக்கற்றை அலைவரிசையை மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப்படுகின்றன. இதுதவிர, 2023 முதல் 2026 வரையிலான காலகட்டத்தில், ஏறத்தாழ 92 இடங்களில் 2,340 முதல் 2,360 மெகாஹெர்ட்ஸ் வரையிலான அலைக்கற்றை அலைவரிசையை உரிய அனுமதியின்றி சிம்பா நிறுவனம் குறிப்பிட்ட இடைவெளிகளில் பயன்படுத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இவை அனைத்தும் திட்டமிட்டு, வேண்டுமென்றே செய்யப்பட்டவை என்றும் சிம்பா நிறுவனத்தின் மூத்த நிர்வாகம் இதற்கு ஒப்புதல் அளித்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஆணையத்தின் நோட்டீசுக்கு உரிய காலக்கெடுவான நவம்பர் 16ஆம் தேதிக்குள் பதிலளிக்க சிம்பா திட்டமிட்டுள்ளதாகத் துவாஸ் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
