தென்மேற்குப் பருவக்காற்றின் தாக்கம் குறைந்து, இடைப்பருவ மழை தொடங்கியுள்ளதால், எல்லை தாண்டிய புகைமூட்டம் சிங்கப்பூரைப் பாதிக்கும் அபாயம் குறையக்கூடும் என்று சிங்கப்பூர் வானிலை ஆய்வு மையம் வியாழக்கிழமை (அக்டோபர் 29) தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு, தென்மேற்கு திசைகளிலிருந்து தொடர்ச்சியாக வீசிய காற்று தற்போது லேசான, நிலையற்ற காற்றாக வீசி வருகிறது. இதனால், இந்தோனீசியக் காட்டுத்தீயிலிருந்து உருவாகும் புகைமூட்டம் சிங்கப்பூர் நோக்கி அடித்து வரப்படுவது குறையும் என்று மையம் குறிப்பிட்டது. அத்துடன், சிங்கப்பூரிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் மழைப்பொழிவு அதிகரிக்கும் என்பதால் புகைமூட்ட நிலவரம் சீரடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நவம்பர் மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில், தீவின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் வேளையில் மிதமானது முதல் கனமழை வரையிலான, இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். சில நாள்களில் மழை மாலையிலும் தொடரலாம். அடுத்த இரண்டு வாரங்களுக்கான மொத்த மழைப்பொழிவு, நீண்டகால சராசரியைவிடச் சற்று அதிகமாக இருக்கும் என முன்னுரைக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், வெப்பமான வானிலையே நிலவும். பெரும்பாலான நாள்களில் அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியசுக்கும் 35 டிகிரி செல்சியசுக்கும் இடைப்பட்டிருக்கும். சில நாள்களில் வெப்பநிலை 35 டிகிரி செல்சியசைத் தாண்டக்கூடும்.
அக்டோபர் 26ஆம் தேதி முதல் சிங்கப்பூரில் தெளிவான வானிலை நிலவி வருகிறது.
வியாழக்கிழமை மாலை 4 மணி நிலவரப்படி, தீவின் அனைத்துப் பகுதிகளிலும் 24 மணி நேரக் காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு (பிஎஸ்ஐ) ‘நல்லது’ எனும் நிலைக்கும் ‘மிதமானது’ எனும் நிலைக்கும் இடையில் பதிவாகியுள்ளது. மேற்குப் பகுதியில் பிஎம்2.5 அளவுகள் காலை 11 மணிக்கு 57ஆகப் பதிவானபோதும், ஒரு மணி நேரத்திற்குப் பிறகு இயல்பு நிலைக்குத் திரும்பியது.
சிங்கப்பூரில் காற்று வீசும் திசை சாதகமாக இருந்தாலும், இந்தோனீசியாவில் காட்டுத்தீ தொடர்ந்து எரிந்து வருகிறது. இருப்பினும், அங்குப் பெய்து வரும் மழையால் தீயின் தாக்கம் சற்றுக் குறைந்துள்ளது.
டிசம்பர் மாதத் தொடக்கத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கும்போது, சுமத்ரா, கலிமந்தான் பகுதிகளிலிருந்து வீசும் புகைமூட்டம் சிங்கப்பூரை விட்டு விலகிச் செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
