ஹு சிங் ரோட்டில் உள்ள லேக் விஸ்டா குடியிருப்பு வட்டாரத்தில் ஒரு காலத்தில் அழுக்குப் படிந்து இருந்த பகுதி இப்போது பச்சைப் பசேலெனக் காட்சியளிக்கிறது.
கிட்டத்தட்ட 200 மீட்டர் நீளம்கொண்ட இப்பகுதியில் பலவகை பறவைகளும் வண்ணத்துப்பூச்சிகளும் காணப்படுகின்றன. சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் மூன்றாம் தேதி திறக்கப்பட்ட தாமான் டாமாய் தற்காலிகப் பூங்கா, கடந்த சில மாதங்களில் தாமான் ஜூரோங்கில் அமைக்கப்பட்டுள்ள இரு பசுமைப் பகுதிகளில் ஒன்றாகும்.
அவ்வட்டாரத்தில் அமைந்துள்ள மற்றொரு தற்காலிகப் பூங்காவான தாமான் ஜுரோங் ஒவேசிஸ் தற்காலிகப் பூங்கா (Taman Jurong Oasis interim park) சென்ற ஆண்டு நவம்பர் மாதம் ஒன்பதாம் தேதி திறக்கப்பட்டது. யுங் ஆன் ரோட்டில் சிறிய புல்வெளியாக இருந்த இப்பகுதி இப்போது பூங்காவாக மாற்றம் கண்டுள்ளது.
சிங்கப்பூர் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள குறைந்தது 25 தற்காலிகப் பூங்காக்களில் இவை அடங்கும். பசுமைவாய்ந்த இடங்களின் நன்மைகளைக் குடியிருப்பு வட்டாரங்களில் வசிப்போரைச் சென்றடையச் செய்வதில் இதுபோன்ற பகுதிகள் உதவக்கூடும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.
தற்காலிகப் பூங்காக்கள், தற்போதைக்கு மேம்பாட்டுத் திட்டம் ஏதும் இல்லாத காலியான இடங்களில் அமைக்கப்படுபவையாகும் என்று தேசிய பூங்காக் கழகம் தெரிவித்துள்ளது. தாமான் டாமாய், தாமான் ஜூரோங் ஒவெசிஸ் போன்ற தற்காலிகப் பூங்காக்கள் அடித்தள அமைப்புகள் தொடங்கும் திட்டங்களாகும்.
இந்தப் பூங்காக்களை மேம்படுத்தியவர்கள் அதிகாரிகள்; அதேவேளை, குடியிருப்பாளர்களிடையே தொண்டூழியர்களாக இயங்குபவர்கள் பராமரிக்க உதவுவர்.
தற்காலிகப் பூங்காக்களுக்கான பரிந்துரை முதலில் தாமான் ஜுரோங் குடிமக்கள் ஆலோசனைக் குழுவும் அதன் கிரீன்@ஹர்ட் (Green@Heart) தன்னார்வக் குழுவும் 2021ஆம் ஆண்டில் முன்வைத்தன. குடியிருப்பாளர்கள், தேசிய பூங்காக் கழகத்தின் பிரதிநிதிகள் ஆகியோருடன் கலந்துபேசும் நிகழ்வின்போது பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன.
தாமான் ஜூரோங் தொகுதி குடிமக்கள் ஆலோசனைக் குழுவுக்கான பேச்சாளர், “சமூகத்தைப் பசுமைப் பகுதிகளின் நன்மையை உணரச் செய்வது இலக்காகும். அதோடு, ஒன்றாக நடவடிக்கைகளில் ஈடுபடவும் வீட்டுக்கு அருகிலேயே இயற்கையின் நன்மைகளை அனுபவிக்கவும் இவை, குடியிருப்பாளர்களுக்கான பசுமைப் பகுதியாக அமைகின்றன,” என்றார்.