பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள உலகளாவிய கூட்டு நடவடிக்கை அவசியம் என்று நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ வலியுறுத்தியுள்ளார்.
செவ்வாய்க்கிழமை (நவம்பர் 17) துருக்கியின் அன்டால்யாவில் நடைபெற்ற ஐநா பருவநிலை மாற்ற மாநாட்டின் (COP31) உயர்மட்ட அமர்வில் சிங்கப்பூரின் தேசிய அறிக்கையை வெளியிட்ட அவர், இந்தத் தன்னார்வ நிதியுதவியை அறிவித்தார்.
2025ஆம் ஆண்டு மிகவும் வெப்பமான ஆண்டுகளில் ஒன்றாகப் பதிவானதையும் ஐரோப்பாவின் வெப்ப அலை, ஆசியாவின் வெள்ளம் இரண்டும் சமூகங்களையும் வாழ்வாதாரத்தையும் பாதிப்பதையும் உலக வானிலை அமைப்பின் தரவுகளைக் கொண்டு அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், முதல் தேசியத் தகவமைப்புத் திட்டத்தை வகுத்தல், கடலோரப் பாதுகாப்பை வலுப்படுத்துதல், வெப்ப மீள்திறன் கொள்கை அலுவலகம் அமைத்தல், உணவுப் பாதுகாப்புத் திட்டத்தைப் புதுப்பித்தல், தூய எரிசக்தி மாற்றம், விமானம், கடல்சார் துறைகளில் கரிமக் குறைப்பு ஆகிய சிங்கப்பூரின் உள்நாட்டு முயற்சிகளை அமைச்சர் விவரித்தார்.
வளரும் பங்காளித்துவ நாடுகளுக்குத் தொழில்நுட்ப உதவி, மானியங்கள், பருவநிலை ஆய்வு ஆதரவை வழங்க ‘சிங்கப்பூர் பசுமை ஒத்துழைப்புத் திட்டத்தை’ அவர் தொடங்கி வைத்தார். கரிமச் சந்தைகள், பருவநிலை மீள்திறன், பருவநிலை மாற்றம் ஆகிய மூன்று துறைகளில் இத்திட்டம் கவனம் செலுத்தும் எனத் தேசியப் பருவநிலை மாற்றச் செயலகம் தெரிவித்துள்ளது.
இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, பசிபிக் வட்டாரத்தில் உள்ள சமூக அளவிலான பருவநிலை மீள்திறன் திட்டங்களுக்கு ஆதரவளிக்கும் பசிபிக் மீள்திறன் நிதியத்திற்கு சிங்கப்பூர் US$500,000 (S$644,000) வழங்கும்.
வெறும் அறிவிப்புகளைத் தாண்டி நடைமுறைச் செயலாக்கத்தில் உலக நாடுகள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் சவால்களுக்கு நடுவிலும் பருவநிலை இலக்குகளை அடையச் சிங்கப்பூர் தொடர்ந்து பங்களிக்கும் என்றும் அமைச்சர் ஃபூ உறுதியளித்தார்.
