ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் முதன்மை நீதித்துறை அமைப்பான அனைத்துலக நீதிமன்றத்தில் நிரப்பப்படாமல் இருக்கும் ஐந்து இடங்களுக்கான தேர்தல் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 3) நடைபெறவுள்ளது.
இத்தேர்தலில் ஆப்பிரிக்கா, ஆசியா, ஐரோப்பா, லத்தீன் அமெரிக்கா ஆகிய வட்டாரங்களைச் சேர்ந்த 10 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இதில் சிங்கப்பூர் முதன்முறையாக வேட்பாளர் ஒருவரைக் களமிறக்கியுள்ளது. அனைத்துலக நீதிமன்றத்தின் 15 உறுப்பினர்களைக் கொண்ட நீதிபதிகள் குழுவிற்கான சிங்கப்பூரின் வேட்பாளராக, அனைத்துலகச் சட்டத்துக்கான சிங்கப்பூரின் தூதர் 57 வயது ரீனா லீ போட்டியிடுகிறார்.
அனைத்துலகச் சட்டத்துறை வல்லுநர், அரசாங்கச் சட்ட ஆலோசகர், அரசதந்திரியான இவர் கடல் தொடர்பான சட்டம், பருவநிலை மற்றும் சுற்றுப்புறச் சட்டம், அனைத்துலக மனிதநேயச் சட்டம், மனித உரிமைகள் சட்டம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பரந்த அனுபவம் கொண்டவர்.
‘உலக நீதிமன்றம்’ என அழைக்கப்படும் நெதர்லாந்தின் ‘த ஹேக்’ நகரில் அமைந்துள்ள அனைத்துலக நீதிமன்றமானது, நாடுகள் தங்களுக்கு இடையிலான பூசல்களுக்கு அனைத்துலகச் சட்டத்தின் மூலம் தீர்வுகாண உதவுவதில் முக்கியப் பங்காற்றி வருகிறது.
1945ஆம் ஆண்டில் ஐக்கிய நாட்டு நிறுவனச் சாசனத்தின் மூலம் அதன் முதன்மை நீதித்துறை உறுப்பாக நிறுவப்பட்ட இந்நீதிமன்றம், தனது தொடக்க அமர்வின் 80வது ஆண்டு நிறைவை இவ்வாண்டு அனுசரிக்கிறது.
நாடுகள் போர் அல்லது வன்முறையில் ஈடுபடுவதற்குப் பதிலாக, சட்டரீதியான வழியில் முரண்பாடுகளுக்குத் தீர்வு காண்பதை நோக்கமாகக் கொண்டு இந்நீதிமன்றம் அமைக்கப்பட்டது.
இது பல ஆண்டுகளாக இறையாண்மை, கடல் மற்றும் எல்லைப் பூசல்கள், மனித உரிமை மீறல்கள் உள்ளிட்ட உலகளாவிய பல்வேறு முக்கிய விவகாரங்களை விசாரித்துத் தீர்ப்பளித்து வந்துள்ளது.
ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் 193 உறுப்பு நாடுகளும் குறிப்பிட்ட நிபந்தனைகளின்கீழ் நீதிமன்றத்தின் அதிகார வரம்பை ஏற்கும் பிற நாடுகளும் இங்கு வழக்குகளைத் தொடுக்க முடியும்.
திருமதி ரீனா லீ தேர்ந்தெடுக்கப்பட்டால், இந்நீதிமன்றத்தின் நீதிபதியாகப் பதவியேற்கும் தென்கிழக்காசியாவைச் சேர்ந்த மற்றும் சிறிய நாடுகளைச் சேர்ந்த முதல் பெண் நீதிபதியாகத் திகழ்வார் என்று சட்ட அமைச்சர் எட்வின் தோங் அக்டோபர் 29ஆம் தேதி ஐக்கிய நாட்டு நிறுவனத்தில் ஆற்றிய உரையில் தெரிவித்தார்.
தென்கிழக்காசிய வட்டாரத்திலிருந்து அனைத்துலக நீதிமன்றத்திற்குப் பிரதிநிதி ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. இதற்கு முன்னர் பிலிப்பீன்ஸைச் சேர்ந்த நீதிபதி சீசர் பெங்சோன் இப்பதவியை வகித்திருந்தார்.
தேசிய அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்ட கடல்சார் பல்லுயிர் தொடர்பான ஐக்கிய நாடுகள் அரசுகளுக்கிடையிலான மாநாட்டின் தலைவராகப் பணியாற்றிய திருவாட்டி லீ, ஐக்கிய நாடுகள் சபையின் கடல்சார் சட்ட மாநாட்டின்கீழ் பெருங்கடல் உடன்படிக்கை (பிபிஎன்ஜே உடன்படிக்கை) குறித்த பேச்சுவார்த்தைகளை வெற்றிகரமாக வழிநடத்தி முடித்தார்.
தலைமைச் சட்ட அதிகாரியின் அலுவலகம், தற்காப்பு அமைச்சு ஆகியவற்றில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ள இவர், சிங்கப்பூரின் மதிநுட்பச் சொத்து அலுவலகத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் சேவையாற்றியிருக்கிறார். பொதுச் சேவைத் துறையில் முப்பது ஆண்டுகளுக்கும் மேல் அனுபவம் பெற்றவர் இவர்.
