அனைத்துலக வேலைத்திறன் போட்டி: சிங்கப்பூருக்கு இரு தங்கப் பதக்கங்கள்

அனைத்துலக வேலைத்திறன் போட்டி: சிங்கப்பூருக்கு இரு தங்கப் பதக்கங்கள்

1 mins read
347dd9f4-e25d-4bba-bf24-27b1275f8b26
தங்கப் பதக்கம் வென்ற சிங்கப்பூரின் விக்டோரியா சியோங். - படம்: ‘வோர்ல்டுஸ்கிலிஸ் சிங்கப்பூர்’

லியோன்: அனைத்துலக வேலைத்திறன் போட்டியில் சிங்கப்பூர் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது.

ஈராண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் வோர்ல்ட்ஸ்கில்ஸ் இன்டர்நேஷனல் காம்ப்பட்டி‌ஷன் எனப்படும் அனைத்துலக வேலைத்திறன் போட்டிகளில் கடைகளின் சன்னல்கள், உட்புறங்களுக்குக் கண்கவர் அலங்காரங்களை வடிவமைப்பதற்கான பிரிவில் நன்யாங் பலதுறைத் தொழிற்கல்லூரியைச் சேர்ந்த 19 வயது விக்டோரியா சியோங் தங்கம் வென்றார். பயன்பாட்டுப் பொருள், உட்புற வடிவமைப்பு மூன்றாம் ஆண்டு மாணவரான இவர், உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 13 பேருடன் போட்டியிட்டு வாகை சூடினார்.

இப்பிரிவில் சிங்கப்பூர் தங்கம் வென்றிருப்பது இதுவே முதல்முறை.

செப்டம்பர் 10லிருந்து 15ஆம் தேதி வரை பிரான்சின் லியோன் நகரில் நடைபெற்ற அனைத்துலக வேலைத்திறன் போட்டிகளில், விநியோகச் சங்கிலியில் சரக்குகளை இடம் மாற்றும் போட்டியில் சிங்கப்பூரின் 19 வயது வெரில் வோங் மற்றொரு தங்கப் பதக்கத்தை வென்றார். தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரியில் அனைத்துலக வர்த்தக, தளவாட மாணவரான இவர், நால்வருக்கு மத்தியில் முதலிடத்தைப் பிடித்தார்.

விநியோகச் சங்கிலியில் சரக்குகளை இடம் மாற்றும் திறனுக்கான போட்டியில் சிங்கப்பூர் சிறப்புத் தேர்ச்சி பெற்று வந்திருக்கிறது. தொடர்ந்து நான்காவது அனைத்துலகப் போட்டியில் சிங்கப்பூர் இப்பிரிவில் வாகை சூடியுள்ளது.

அனைத்துலக வேலைத்திறன் போட்டிகளில் நான்கு வெள்ளிப் பதக்கங்கள், இரண்டு வெண்கலப் பதக்கங்களையும் கைப்பற்றியது சிங்கப்பூர்.

குறிப்புச் சொற்கள்