தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உலகெங்கும் $479 மில்லியன் பெறுமான சட்டவிரோதச் சொத்துகளை மீட்க இன்டர்போல் புதிய முயற்சி

2 mins read
3eee65c5-d0e2-4269-9903-b0d6692271a1
சிங்கப்பூரில் நடைபெற்ற ஆசிய-பசிபிக் நாடுகளுக்கான பயிலரங்கில் நிதிக் குற்றம் மற்றும் ஊழல் ஒழிப்பு நிலையத்தின் செயலாக்க ஒருங்கிணைப்பாளர் கிளவ்டியா மாரினெல்லி செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 26) உரையாற்றினார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இன்டர்போல் எனும் அனைத்துலகக் காவல்துறை உலகெங்கும் மில்லியன் கணக்கான சட்டவிரோதச் சொத்துகள் குறித்த தகவல்களைப் பெறப் புதிய எச்சரிக்கை முறையைப் பயன்படுத்துகிறது.

புதிய எச்சரிக்கை முறை, சில்வர் நோட்டீஸ் என்று அழைக்கப்படுகிறது. கடந்த ஏழு மாதங்களில் உலகெங்கும் 80க்கும் மேற்பட்ட அத்தகைய எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டன.

திட்டமிடப்பட்ட போதைப்பொருள் கடத்தல், கொள்ளை, மோசடிச் சம்பவங்களுடன் தொடர்புடைய $479 மில்லியன் பெறுமான சொத்துகள் குறித்த தகவல்கள் அந்த எச்சரிக்கைகளில் கோரப்பட்டன.

மனைகள், நகைகள், கால்நடைகள் போன்றவை அந்தச் சொத்துகளில் அடங்கும்.

சிங்கப்பூரில் நடைபெற்ற ஆசிய-பசிபிக் நாடுகளுக்கான பயிலரங்கில் நிதிக் குற்றம் மற்றும் ஊழல் ஒழிப்பு நிலையத்தின் செயலாக்க ஒருங்கிணைப்பாளர் கிளவ்டியா மாரினெல்லி அந்தத் தகவல்களை வெளியிட்டார். நேப்பியர் ரோட்டில் உள்ள அனைத்துலகக் காவல்துறையின் புத்தாக்கக் கட்டடத்தில் செவ்வாய், புதன்கிழமைகளில் (ஆகஸ்ட் 26, 27) பயிலரங்கு நடைபெற்றது.

புதிய எச்சரிக்கைக்கு முன்பு, உலக அளவில் சட்டவிரோதமாகப் பெறப்பட்ட சொத்துகளைக் கண்டறிவதற்கு எந்தவொரு முறையும் இல்லை என்று திரு மாரினெல்லி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் ஊடகத்திடம் தெரிவித்தார். கண்டங்கள் கடந்து குற்றச்செயல்கள் நடப்பதால் அது ஒரு பிரச்சினையாய் உருவெடுத்ததாக அவர் சொன்னார்.

குற்றவாளியைக் கைதுசெய்ய முடிந்தாலும் அவரிடமிருந்து சட்டவிரோதப் பொருள்களை மீட்க முடியவில்லை என்றால் வேலை பாதிதான் முடிந்ததாக அர்த்தம் என்றார் திரு மாரினெல்லி.

முன்னோடிக் கட்டத்தில் சிங்கப்பூர் உட்பட 51 நாடுகள் பங்கெடுக்கின்றன.

குற்றச்செயல்களின் மூலம் ஈட்டிய சொத்துகள் குறித்த தகவல்களை இன்டர்போலின் 196 உறுப்புநாடுகளிடமிருந்து புதிய முறையின் மூலம் அவை கோரமுடியும்.

குறிப்புச் சொற்கள்