கொலை நடந்த இடத்தில் சந்தேக நபரிடம் விசாரணை

கொலை நடந்த இடத்தில் சந்தேக நபரிடம் விசாரணை

2 mins read
df02054d-c010-459d-bff6-ca4263533000
எழுபது வயது முதியவரைக் கொலை செய்ததாகக் கூறப்படும் ஓங் ஹோவ் சியோங்கிடம் சம்பவ இடத்தில் அதிகாரிகள் விசாரித்தனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கேலாங்கில் முதியவரை ஒருவரைக் கொலை செய்ததாகக் கூறப்படும் 48 வயது சந்தேக நபரிடம் சம்பவ இடத்தில் விசாரணை நடைபெற்றது.

வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 3) இந்த விசாரணை நடைபெற்றது.

எழுபது வயது சோவ் லிங் ஃபெயைக் கொலை செய்ததாக ஓங் ஹோவ் சியோங் என்ற அந்த சந்தேக நபர்மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மார்ச் 9ஆம் தேதி அந்த முதியவர் மருத்துவமனையில் உயிரிழந்தார். இருவரும் ஒருவருக்கு ஒருவர் அறிந்தவர்கள் என்று நம்பப்படுகிறது. முதியவரின் மார்பில் கத்திக்குத்து காயங்கள் இருந்தன.

மார்ச் 9ஆம் தேதி காலை 8.15 மணியளவில் சண்டை நடைபெறுவதாகத் தகவல் கிடைத்து கேலாங் லோரோங் 16க்கு காவல்துறையினர் விரைந்தனர். புத்த ஆலயத்துக்கு அருகே காவலர்கள் வந்தபோது அங்கிருந்த குப்பைத் தொட்டிக்கு அருகே நடைபாதையில் ரத்தக் கறைகள் காணப்பட்டன.

சுயநினைவின்றி இருந்த முதியவர் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஓங்கும் சுயநினைவுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மறுநாள் (மார்ச் 10) அவர்மீது கொலைக் குற்றஞ்சாட்டப்பட்டது.

பின்னர் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 3) காலை 9.15 மணியளவில் அவரை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு அழைத்து வந்தனர்.

சிவப்பு நிற டீ சட்டையும், கறுப்பு நிறக் கால்சட்டையும் அணிந்திருந்த அவரது கைகளும் கால்களும் சங்கிலியால் கட்டப்பட்டிருந்தன. ஆலயத்திற்கு வெளியே தனியார் கார்ப்பேட்டையில் அவரிடம் அதிகாரிகள் கேள்விகளைக் கேட்டனர். ஓங் உணர்ச்சியற்றவர்போல இருந்தார். பின்னர் அவர் ஆலயத்தின் முன்புறத்திற்கு அழைத்து வரப்பட்டார். அப்போது சில அடையாளங்களை அவர் காட்டினார்.

அதிகாரிகள் விசாரித்தபோது ஓங்கின் புருவங்கள் சுருங்கின. சில சமயங்களில் அவர் உணர்ச்சிவசப்பட்டார். அதிகாரிகளுக்கு சைகையால் அவர் பதிலளித்தார். மூன்று பெரிய குப்பைத்தொட்டிக்கு அருகே அவரிடம் மீண்டும் விசாரணை நடைபெற்றது.

காவல்துறையினரின் விசாரணையை 20க்கும் மேற்பட்டோர் நேரில் பார்த்தனர்.

குறிப்புச் சொற்கள்