சிங்கப்பூர்ப் போக்குவரத்தில் தானியக்க வாகனங்கள் ஒரு பெரிய மாற்றத்துக்கு பங்களிக்கும் என்று தற்காலிகப் போக்குவரத்து அமைச்சர் ஜெஃப்ரி சியாவ் தெரிவித்து இருக்கிறார்.
பொதுப் போக்குவரத்துப் பயண நேரத்தைக் குறைப்பதற்கான தொலைநோக்குத் திட்டத்தில் தானியக்க வாகனங்களின் அறிமுகம் ஒரு முக்கிய அம்சமாக விளங்கும் என்று ஜூன் 11ஆம் தேதி நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தின்போது அமைச்சர் சியாவ் குறிப்பிட்டார்.
“தானியக்க வாகனத் தொழில்நுட்பம் தற்போது மிகவும் மேம்பட்டு வரும் நிலையில் அடுத்த ஐந்தாண்டுகளுக்குள் அவை சேவைக்கு வரும்,” என்று திரு சியாவ் நம்பிக்கை தெரிவித்தார்.
சிங்கப்பூரின் ‘திறன்மிகு நடமாட்ட’ தீர்வுகளின் ஒரு பகுதியாக தானியக்க வாகனங்கள் அறிமுகம் காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
போக்குவரத்து இயக்கத்தைச் சீராக்கி, மனிதவளக் கட்டுப்பாடுகளைக் குறைத்து, சாலைப் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் இந்தத் தானியக்க வாகனங்கள் செயல்பாட்டிற்கு வரவுள்ளன.
“பொதுப் போக்குவரத்து அமைப்பை மேம்படுத்தும் ஒரு புதிய போக்குவரத்து முறையை மக்கள் இன்னும் சிறிது காலத்தில் அனுபவிக்கலாம்,” என்று திரு சியாவ் கூறினார்.
எதிர்காலத்தில் சேவைக்கு வரவிருக்கும் தானியக்க வாகனங்கள், சமூக மன்றங்கள், உணவங்காடிகள், போக்குவரத்து முனையங்கள் போன்ற இடங்களுக்கு குடியிருப்பாளர்களை அழைத்துச் செல்லும் என்று கூறப்பட்டது.
“தனியார் போக்குவரத்தைப் போலவே பொதுப் போக்குவரத்தும் போட்டித்தன்மையை கையாளும்,” என்றார் திரு சியாவ்.
தொடர்புடைய செய்திகள்
அதுமட்டுமின்றி, நகரத்திலிருந்து வெகுதொலைவில் வசிப்பவர்களை ரயில், பொதுப் பேருந்துகளில் பயணம் செய்ய ஊக்குவிக்க இந்தத் தானியக்க வாகனங்கள் உதவும் என்றும் அவர் சொன்னார்.
“அதன் தொடர்பில் குடியிருப்புப் பேட்டைகளிலிருந்து பொதுப் போக்குவரத்து முனையங்களுக்கு நடந்து செல்லும் வசதிகள், பேருந்து சேவைகள் போன்றவற்றை அதிகரிக்க வேண்டும்,” என்றார் அவர்.
பொதுப் போக்குவரத்துச் சேவைகளின் பயண நேரத்தைக் குறைப்பது பற்றி திரு சியாவ் ஜூன் 8ஆம் தேதி முதன்முதலாக செய்தியாளர்களிடம் பேசினார்.
வீவக வட்டாரங்களிலிருந்து நகரத்துக்கு செல்ல உதவும் போக்குவரத்துக் கட்டமைப்புகளை வலுப்படுத்துவதற்கான முன்னுரிமையை அவர் மீண்டும் வலியுறுத்திக் கூறினார்.
“வீவக வீடுகளில் வசிப்போர் தானியக்க வாகனங்களை கருத்தில் கொள்ளலாம்,” என்றார் அவர்.
2025 பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வென்று தற்காலிகப் போக்குவரத்து அமைச்சராக பொறுப்பேற்ற திரு சியாவ், தமது போக்குவரத்து மேம்பாட்டுத் திட்டங்களை தெங்கா வட்டாரத்தில் தொடங்கியுள்ளார்.
எட்டுப் புதிய பேருந்துச் சேவைகள் அடுத்த ஆண்டு இறுதிக்குள் தெங்கா பேட்டையில் செயல்படும்.
“உலகெங்கிலும் உள்ள சில நகரங்களில் தானியக்க வாகனங்கள் ஏற்கெனவே பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த முயற்சி சிங்கப்பூருக்கு ஒரு மாற்றமாக இருக்கும்,” என்று திரு சியாவ் நம்பிக்கை தெரிவித்தார்.

